நாளைய உலகம்

Thursday, September 11, 2008

கடலம்மா


பாயெல்லாம் விரித்து படுத்தோமே- இப்

பரப்பெல்லாம் எமதென்று நினைத்தோமே

காயும் நினைவில் நாம் குளித்தோமே- அந்த

நாளும் வருமோ என அழுகின்றேன்

இரவு மெல்ல மெல்ல கரைந்து கொண்டிருந்தது. ஆனால் எங்கட வாழ்க்கை மட்டும் வெளிச்சத்தைவிட்டு விலகி எங்கேயோ தூர போயிருந்தது. கிழிந்த பாயைப் போலவே நாங்களும்................................ . தூரமாய் போய்விட்ட அப்பாவும். எங்களது வாழ்க்கை கேள்விக்குறியா? அல்லது ஆச்சரிய குறியா? புரியாத நிலையில் வாழ்க்கையும் கேள்விக் குறிபோல் வளைந்து நின்றது.

அப்பா எங்களுடன் இருந்த பொழுதுகளில் இந்த சின்ன வீட்டில் எங்கள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எப்போதும்

ஏதாவது ஒரு பாட்டை முனு முனுத்தபடி நண்டுகள் நன்னிய வலைகளை பொத்துவதும் நேரம் கிடைக்கும் பொழுதுகளில் நடுக்கடலில் நடந்த நிகழ்வுகளை என்னுடன் பகிரும் அப்பாவின் அந்த சிரித்த முகமும் சோகம் கக்கும் விழிகளும் எப்போதும் என் நினைவில் அலைபோல் வந்து வந்து மோதுயபடி. விளக்கு தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு வெளிச்சத்தை கொடுத்துவிட்டு தன் காலடியில் மட்டும் இருளை கவிழ்த்து நிற்பதுபோல்தான் என்ர அப்பாவும் எங்களையெல்லாம் மகிழவைத்துவிட்டு தான்மட்டும் ஏக்கத்தில் ஆழ்ந்து நிற்பார்.அப்பாவின் அந்த ஏக்கம் சில சமயம் மட்டும் வெளிப்படும்.

எப்படியாவது சொந்தமா ஒரு படகு வாங்க வேணும்.. எவ்வளவு காலம்தான் வாடகை படகில காலத்தை கடத்திறது ?

வாடகை கொடுத்த காசில சொந்தமா ரண்டு தோணியாவது வாங்கியிருக்கலாமென அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பார்.சில நாட்களில் ஆழ்கடல் சென்று மீன்களை அள்ள முடியாமல் வெறுங்கை வீசி வந்தாலும் பணத்தை மட்டும் மனக்கணக்கு பார்க்கும் அல்பிரட் சம்மாட்டியார் மனிதமனத்தை சற்றும் எண்ண மறுப்பார். அந்தப் பொழுதுகளில் அப்பாவின் அடிமனதில் மறைந்திருக்கும் ஆசை அடிக்கடி முளைவிட்டு துளிர்க்கும்.

மகன் என்ரை நிலமை இனி எங்கட பரம்பரைக்கே வரக்கூடாது. நீங்களெல்லாரும் இரவு முழுக்க குடும்பத்தோட இருந்திட்டு பகலில உத்தியோகத்துக்கு போகவேணும். இதுதான் என்ர பெரியஆசை உன்னால என்ன என்ன படிப்புகள் எல்லாம் படிக்க ஏலுமோ படியப்பன். அப்பா என்ன கஸ்ரப்பட்டாலும் எவ்வளவு செலவழிச்சாலும் உன்னை படிப்பிப்பார். ஆனால் ஒன்று ராசா நீ படிச்சு முடிச்சோன்ன அப்பாவுக்கு சொந்தமா ஒரு படகு வாங்கி தரவேணும். ஏல்லாரும் என்னை பார்த்து சொந்த படகில தொழிலுக்கு வாறானெண்டு சொல்ல வேணும். ஏன்ன வாங்கி தருவியே ராசா ? என விழிகளில் நீர் கசிய வினவும் அப்பாவுக்கு

விரல்களை விரித்தும் மடித்தும் மூன்று விரல்களை காட்டி

அப்பாவுக்கு ஜஞ்சு படகு வாங்கி தருவன் என தன் மழலை குரலால் கூறும் தம்பியின் தப்பு கணக்கை பார்த்து நாங்கள் எல்லாரும் சிரித்தது நேற்று நடந்ததுபோல் . அந்த சிரிப்பு இன்னும் காற்றில் எதிரொலித்துக் கொண்டிருக்க.. என்ர அப்பா மட்டும்.................... அப்பா எங்களைவிட்டிட்டு எங்கயப்பா போனீங்க ?

நாட்கள் நகர மறுக்கின்றன.நகரும் நிமிடங்கள் ஒவ்வொன்றும் இழப்புகளை நினைவுபடுத்தயபடி. மனிதர்களும் பறவைகளும் கூடி நின்று குதுகலித்த கடற்கரை இன்று அத்தனை ஒசைகளையும் தொலைத்துவிட்டு மௌனத்தில் மூழ்கி அழுவதை பார்க்கும் பொழுதெல்லாம். என் மனதையும் இருள் மெல்ல மெல்ல சூழ்ந்து கொண்டு வருவதுபோல் ஓர் பிரமை தோன்றி என்னை அடிக்கடி பயப்படுத்துகிறது. அப்பாவின் நினைவும் என்னை விசனப்படவைக்கின்றது. வெடித்து சிதறி எரியும் எரிமலையில் இந்த கடற்கரை காற்று மெல்ல மெல்ல வீசி இன்னும் சுவாலைவிட்டு எரிய தூண்டுகிறது. இதை அணைக்க இந்த கடலம்மா தன்னையே தந்தாலும் அணைக்கவே முடியாது என் அப்பாவை என்னிடம் தந்தால் மட்டுமே.

அடிக்கடி கடற்கரைக்குவரும் ராணுவப்படைகளை பார்க்கும் பொழுது இவனா இருப்பானோ ? சீ இவனை பார்த்தால் பாவம்மாதிரி இருக்கிறான். அப்ப....................ஆராக இருக்கும் ? அந்த உயரமா பருமனா நெருப்புமாதரி கண்ணோட. அவனா இருப்பானோ? இல்லை இருக்காது என்ர அப்பா எப்பிடியும் திரும்பி வருவார்.

கடலம்மா என்ர அப்பாவை எங்க ஒளிச்சு வைச்சிருக்கிறாய் ? உன்ர மடியிலதானே கடைசியா அப்பாவை பார்த்தனான். அப்பா அடிக்கடி சொல்லுவார்..............

உனக்கு தெரியுமோ மோள் இவள் கடலம்மா என்ர தாய்

அப்பா உங்களுக்கு கடலில போக பயமில்லையே ?

அதற்கும் அப்பா சிரிப்பார். தாயின்ர மடியில படுக்க ஆராவது பயப்படுவினமோ மகள் ?அவள் எனக்கு தாய்மட்டுமல்ல என்ர நல்ல தோழியும் கூட. அவள் என்னுடன் கதைப்பாள் சிரிப்பாள், தலாட்டுவாள்.

போங்கப்பா நீங்கள் பொய்சொல்லுறீங்கள். எப்படி கதைப்பா சிரிப்பா ? ஏனக்கு தெரிய கடலம்மா கோபிப்பா சில நேரத்தில சீறிப்பாய்வா.

ம்..... ஏன் உங்கட அம்மாவும்தான் கோபிப்பா சீறிப்பாய்வா பிறகு சிரிப்பா. அதுமாதிரித்தான்.

பௌர்ணமி காலங்களில் கடலம்மா மகிழ்ச்சியில் பொங்கிபிரவாகிப்பா.கரைக்கு அலைகளை அனுப்புவதும் அதே வேகத்தில் திருப்பி அழைப்பதுமாக. தம்பியும் தங்கச்சியும் அலைகளுடன் அலைகளாக அலைந்து விளையாடிக் கொண்டிருக்க அம்மா நெத்தலி மீன்பொரிச்சு அறக்குளாவில குளம்புவைச்சு மரவள்ளிக்கிழங்கையும் சோறையும் பிசைந்து உருண்டை உருண்டையாக உருட்டி உனக்கொரு வாய் உனக்கொரு வாய் எண்டு எல்லாருக்கும் தந்திட்டு கடைசி உருண்டையை மட்டும் சாப்பிட்டிட்டு நிறையதண்ணியை குடிப்பா. புpறகு பாயை விரிச்சு மணலில படுத்திருந்து நிலவையும் அலையும் அலைகளையும் பார்த்து எத்தனை கதை சொல்லுவா. எல்லாம் தொலைஞ்சு போச்சு. இனி அந்த காலங்கள் இறந்த காலங்களாக நினைவில்மட்டும் அடிக்கடி மோதி மோதி வலியை இன்னும் அதிகப்படுத்தும்.

இப்பவெல்லாம் கடலம்மா எனக்கும் சினேகிதியாகிவிட்டா. நானும் அடிக்கடி பேசுவது என் கவலைகளை கொட்டுவது எல்லாம் அவளுடன்தான். அப்பா காணமல் போன நாளிலிருந்து நாங்கள் பள்ளிக் கூடம் போறதேயில்லை. அம்மா மீனை வாங்கி சந்தையில கொண்டுபோய் விற்கபோயிடுவா.

அம்மாக்கு உதவி செய்யிறதும், தம்பியையும் தங்கச்சியையும் பார்பதுமாக பொழுதுகள் கரைந்தாலும் நான் தனிமை படுத்தப்பட்டதை அடிக்கடி ஏதோ ஒன்று சுட்டிக்காட்டியபடியே இருக்கும். அந்த பொழுதுகளில் என் நம்பிக்கைகள் ஒவ்வொன்றாய் செத்துவிழும். ஆனாலும் கையிலிருந்து நழுவிப்போன அந்த இனிய நாட்களை மீட்டியபடியே இருப்பன்........

கடலுக்கு போன அப்பாவுக்காய் காத்திருக்கும் நேரங்களில் என எண்ணங்கள் எப்போதும் சிறகடிக்கும் இந்தகடலை, அதன்மேல் அலையும் அலைகளை, அதோ அடிவாணத்திலிருந்து மெல்ல மெல்ல எட்டிபார்க்கும் பரிதியை, வானமும் கடலும் முத்தமிடும் காட்சியை, அலையின் தொடுகைக்காய் காத்திருக்கும் கரையை, எல்லோரையும் தாங்கும் இந்த தரையை, ஓவென்று இரைந்தபடி முகத்தில் அறையும் காற்றை, இவை எல்லாவற்றையும் விட்டு விலகி இப்போ தூரபோய்கொண்டு இருப்பதுபோல் எனக்குள் ஓர் உணர்வு எழுந்து கொண்டே இருக்கும். என்ர அப்பா போனது போல. எத்தனை கனவுகள் கற்பனைகள் என்னுள் வேர்விட்டு படர்ந்தன அத்தனையும் இந்த அலைகள் இருண்ட ஒரு மாலை பொழுதில் அள்ளிக்கொண்டு போய்விட்டது.

பாடசாலை வாழ்க்கைகூட எனக்கு துன்பமானதுதான் எனக்கென்று அங்கு எதுவும் இல்லை. என்ர அசாத்தியமான அறிவைத்தவிர. அதுமட்டும் இந்த கடல்பரப்பைபோல் பரந்து விரிந்து என்னுள் கரைந்து உறைந்து அதனால்தானோ தெரியேல்ல நான் எப்போதும் எல்லாரின்ர கண்களையும் உறுத்தியபடி இருந்தனன். என்னோட படிக்கிற மற்ற பிள்ளைகள் பிலோமினா எண்ட என்ர பெயரை ஏய் பிலோ மீன் எண்டு கூப்பிட்டு என்னை அழவைபபினம்;. நீ எங்களுக்கு பக்கத்தில இருக்கக்கூடாது சீ சனியன் முட்டிட்டாள் வாங்கடி கைகழுவுவம் எண்டெல்லாம் சொல்லி என்னை அழவைப்பினம். அந்த புறக்கணிப்பில் நான் வீழ்ந்து மூழ்கும் பொழதுகளில் என்னை மூழ்கவிடாமல் தூக்கி நிறுத்தும் என்ர அப்பா கடலோடுபோன பிறகு எல்லாமே என்னைவிட்டு அப்பாவோடு இந்த கடலோடு கலந்து கரைஞ்சு போயிட்டுது. தனக்கு தேவையில்லாதவைகளை கடலம்மா அலையிடம் கொடுத்து கரையில் தள்ளுவதைப்போல என்னை தள்ளி ஒதுக்கியவர்கள் மட்டும் புத்தக பையுடன் என் பாவச்சுமையையும் சேர்த்து முதுகில் சுமந்தபடி வரிசை வரிசையாக பள்ளிக்கூடத்திற்கு போய்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நான் மட்டும்............... அவர்களின் காலடிகளை பார்த்தபடி.

இப்பவெல்லாம் என்ர இதயம் எத்தனை முறை துடிக்கின்றது என்பதைவிட அப்பா அப்பா என அழைப்பதே அதிகமாகி விட்டது. அதனால் என் விழிகளும் எப்போதும் ஓர் நேர் கோட்டைவரைந்தபடியே. பாவம் அப்பாஇரவில் தூங்கியதை நான் பார்த்ததே இல்லை.பகலெல்லாம் விழித்து உழைத்து களைத்து பின் இரவினில் ஓய்வாக உறங்குவதற்கு மாறாக தெரியாத எதிர்காலத்திற்காய் நிகழ்கால தேடலின் காலம் என் அப்பாவக்கு இரவு நேரம்தான். ஆனால் என் அம்மாவுக்கோ அந்த ஒவ்வொரு நிமிட நகர்வும் நரகத் துளிகள். கடலுக்கு போன அப்பாவுக்காய் ஜெபம் பண்ணியடி எனக்கும் அம்மாவுக்கும் பிராத்தனை நேரம் என்பது ஒவ்வொரு விடியல் மட்டும்

அப்பா அடிக்கடி சொல்லுவார் முந்தின காலங்களில கடலுக்கபோன மனுசன்மார் திரும்பிவரும்மட்டும் விளக்கேற்றிவைத்து அது அணையாமல் பார்த்துக்கொண்டு பொம்பிளையள் இருப்பினம் என்று கேள்விபட்டு இருக்கிறன்.

காற்றுக்கு விளக்கு அணைஞ்சிட்டா ?

போன மனுசன் போனதுதான்

இது சரியான மூட நம்பிக்கை அப்பா

மூட நம்பிக்கை இல்லையம்மா ஒரு மனக்கட்டுப்பாடு என்று சொல்லலாம். கடலுக்குபோனவரின்ர நினைவாகவே பொம்பிளையள் இருக்கவேணும் எண்டுதான் இப்படி ஒரு ஜதீகத்தை கொண்டுவந்திருப்பினம்..

திரும்பி வந்திட்டா மறந்திடுவினமே?

இதுக்குதான் சொல்லிறன். இவளின்ர படிப்பு இதோட காணும் சும்மா கண்டதையும் படிச்சு கண்ட மாதிரி கதைக்கிறதும். எப்ப பார்த்தாலும் மேகத்தையும் கடலையும் பார்த்து ஏதோ கதைக்கிறாள். அண்டைக்கு கூரையை கொண்டு போறமாதிரி சோளகக்காற்று அடிக்குது இவள் அதுக்கு நேர நிண்டுகொண்டு காற்றை பார்த்து சிரிக்கிறாள். இங்கனம் ஆரும் கண்டா விசர் என்று சொல்லப்போகினம்

இஞ்ச மேரி இந்த மனுசரோட கதைக்கிறதைவிட இயற்கையோடு கதைக்கிறது எவ்வளவோ மேல்.

அப்படி சொல்லுங்கப்பா எங்கட அம்மாவுக்கு ஒண்டும் விளங்காது.

எங்களை எப்படியெல்லாம் வளர்க்க வேண்டுமென்று கனவுகளை தனக்குள் வளர்த்த எங்கட அப்பா கடைசி நாள் சொன்னது இன்னும் என்ர காதில கேட்டுக்கொண்டே இருக்கிது.

மகள் கடலம்மாட்ட போயிற்று திரும்பி வருவன் எண்ட நம்பிக்கை என்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிறமாதிரி இருக்கிது

ஏன் அப்பா எங்களை பயப்படுத்திறீங்கள் ?

இல்லை மகள் அப்பா எத்தனை புயல்களை எதிர்த்து வந்தவரெண்டு உனக்கு தெரியாது. ஆனால் இப்ப சா அடிக்கடி என்னை தொட்டு தொட்டெல்ல போகிது. ரண்டு நாளுக்கு முன்னம் அன்ரனி, நேற்று டாணியல் இன்டைக்கு அல்லது நாளைக்கு நானாக இருக்கலாம் இல்லாட்டி ..............

அப்பாவின் தீர்க்க தரிசனம் பலித்து விட்டது அப்பா எங்க அப்பா இருக்கிறீங்கள் ?

கரையில எத்தனையோ காலடி சுவடுகள் பதிந்தபடி இருக்கிறது. அதில எங்கேயாவது என்ர அப்பான்ர அடையாளமும் எங்களைவிட்டு கைகாட்டியபடி விலகி போன அந்த கடைசி நாள். இல்லை என்ர அப்பா வருவார் திரும்பி வருவார் எனக்கு நம்பிக்கையிருக்கு. கடலம்மா அப்பா வருவார்தானே ?சொல்லு கடலம்மா நீயும் பேசாமயிருந்தா நான் என்ன செய்யிறது ?

எப்படி இருந்த வாழ்க்கை. காலையும் மாலையும் திருவிழா கூட்டம்போல் கூட்டம் சேருவதும் வாழ்க்கையை ஏலத்தில் கூவி விற்பதுபோல் தொண்டை நரம்புகள் புடைக்க விற்பவரும், நுகர்வோரும், கூறுபவரும் உறுமி மிருகமாவதும் பின் மறுபடியும் மனிதமுகம் கொண்டு சிரித்து விலகுவதும். இன்னும் சிலர்கிடைத்த லாபத்தில் கற்பனையில் மிதப்பதும் தம்பியும் தங்கச்சியும் கணவாய் ஓட்டையும் அப்பா கொண்டுவரும் அதிசய கற்களையும் சொத்தாக சேர்ப்பதுமாக ஆனால் நான் மட்டும் எப்போதும் ஏகாந்தமாய் என்னை மறந்து இயற்கையுடன் கைகோர்த்து நடந்து திரிவன்.

இப்போதெல்லாம் உயர எழுந்து சிதறுகிற அலைகளின் இரைச்சல் என் மனதைப்போல. சிலநேரங்களில் மட்டும் என்னை பார்த்து கைகொட்டி சிரிக்கும்.. ஆனால் எனக்கு இந்த அலை , கடல், மனிதர்கள் எதையுமே பிடிப்பதில்லை. கோபம் கோபமாக வருகிது.ஏன் எண்டு எனக்கு எதுவும் சொல்லத்தெரியேல்ல என் கண்ணீர் மட்டும் கடலம்மாவுடன் அடிக்கடி கலந்தபடி.

முன்பெல்லாம் இந்த அலையும் காற்றும் எப்போதும் என் கால்களையும் உடலையும் தழுவியபடி இருக்கும். அதனால் என் உள்ளமும் உடலும் சிலிர்த்தபடி இப்போதும் அதே அலை அதே காற்று ஆனால் நான் மட்டும் எதிலுமே ஓட்டாமல் ஈரம் உலர்ந்தபின் மெல்ல மெல்ல உதிரும் மணலைப்போல எல்லாம் என்னைவிட்டு உதிர்ந்து கொண்டே போகின்றது.

திட்டு திட்டாய் முகில்கள் ஒட்டியும் ஒட்டாமலும் விலகி விலகி ஓடிக்கொண்டே இருக்கின்றது. எம் ஊர் மக்களைப்போல. கொஞ்சம் கொஞ்சமாக இந்த கிராமம் ஆணிவேரையும் பிடிங்கியபடி மெல்ல நகர மிச்சம் இருப்பவர்களோ எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு ஏதோ வாழவேண்டும் என்பதற்காக வாழ்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து முடிந்திருக்கும். அல்லது நடந்துவிடுமோ என்ற பயங்கரம் எல்லோரையும் நடமாடும் பிணங்களாக்கி விட்டிருந்தது.

ஒவ்வொரு விடியலிலும் உயிரற்ற உடல்களை ஓ வென்று ஒப்பாரி வைத்தபடி அலைகள் காவி வந்து கரையில் தள்ளி விடுகின்றது.

அது யாராக இருக்கும் அப்பவாக இருக்குமோ?

என்ற பயங்கர கற்பனை எழுவதும் முகம் பார்த்தபின் இவர் எப்படி செத்திருப்பார்? என்ற கேள்வியும்; முளைத்துக் கொண்டே இருக்கும். பகலிலும் இரவிலும் கரைகளில் கோட்டை கீறியபடி ஓடித்திரியும் சின்ன நண்டுகளைக்கூட காணவில்லை.

எங்க போயிருக்கும் ?அவைகளும் இடம் பெயர்ந்து விட்டனவோ?

ஏதையெல்லாம் நினைப்பது என் எண்ணங்கள் சிதறிக்கொண்டே இருக்கின்றன. தனிமை துன்பம் இவைகளை நாடி நான் ஓட வேண்டிய தேவையே இல்லை. . ஏல்லாரும் விரித்தபாயை சுருட்ட மறந்து இரவோடு இரவாக இராமேஸ்வரத்தை நோக்கி நகர்ந்தபடி. ஏங்களையும் வருமாறு வற்புறுத்தினார்கள். ஆனால் நாங்கள் அப்பாவின் வரவுக்காய்................................

திரைகடல் ஓடி திரவியம் தேடியவர்களில் சிலர் வீட்டுக்குள் முடங்கியபடி இருக்க. படகுகளையும் கட்டுமரங்களையும் அலைகள் வா வாவென இழுக்கின்றன. ஆயிரக்காணக்கான காலடிகளின் மீது பெரிதும் சிறிதுமாக இரும்பு சப்பாத்துக்கள் தன் சுவடுகளை ஆளமாக பதிக்க.. சிலர் பலத்த சிந்தனையின் பின் நீட்சியான பாதையை பதிவு செய்தபடி நகர்ந்தார்கள். பிரிந்தவர்களைபற்றி புனைந்தும் அறிந்தும் பல கதைகளை காற்று உள்வாங்கியபடியே ஓடுகின்றது.

சொந்த மனிதர்களின் நகர்வும், முகமறியாத அன்னியரின் வரவும் அமைதியான இரவை பயங்கரமாக்கிவிட்டிருந்தது ஒவ்வோர் இரவும் நீண்டு என்னை பயமுறுத்துகிறது. முன்பென்றால் ஆட்காட்டி குருவி எவர்வந்தாலும் அறிவித்தபடியே இருக்கும். அதுவும் ஒருநாள் கால்களை மேலே தூக்கியபடி ஆகயத்தை பார்த்துக்கொண்டு அடிக்கும் அலைகளுக்கு இசைந்தபடி மல்லாந்து கிடந்தது. அதன்பின் நடந்தவகைள் ஏராளம்.

ஏல்லோர் மனதிலும் வாழ்வோம் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து கொண்டே போனது.. ஆனால் நான்மட்டும் இந்த மண்ணில் எங்கேயாவது என் அப்பாவின் காலடி சுவடுகள் அழியாமல் இருக்கும் என்ற நம்பிக்கையில் இதுவாக இருக்குமோ ? இல்லை அதுவாக இருக்குமோ ? என தேடியபடி என் கால்கள் கரையில் காத்துக்கிடந்தாலும் என் மனம் மட்டும் எப்போதும் கடலின் உள்ளேதான் கரைந்து கொண்டிருக்கிறது. ஆனால் கேள்விகள் மட்டும் என்னுள் வேர்விட்டு படர்ந்தபடி. இதற்கான பதில் கடலம்மாவிடம்தான். ஏன் இந்த சந்திரனிடம் கூட ஆனால் தானும் மௌனித்து நட்சத்திர குழந்தைகளையும் மௌனமாக்கியபடி. தனித்து வேவு பார்த்துக் கொண்டே வலம் வருகின்றது.

காலங்கள் பூமியின் அசைவுக்கு இசைவாக தம்மை மாற்றியபடியே ஓடுகின்றது. என் மனம்மட்டும் வறண்ட பாலை வனம்போல் மழை வருமா ? இல்லை இன்னும் வறண்டு வெடித்து சிதறி போய் விடுமா ?என்ற கேள்விகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி அடுக்கி அவை ஒவ்வொன்றாய் உடைந்து விழ விழ மீண்டும் மீண்டும் முயற்சித்தபடி விடியாத விடியலில் அப்பாவின் வரவுக்காய் காரையோரத்தில் இன்றும் காத்திருக்கின்றேன். என்றும்...................................

posted by சாந்தினி வரதராஜன் at 3:11 PM

0 Comments:

Post a Comment

<< Home