நாளைய உலகம்
Thursday, September 11, 2008
சாய்மனை கதிரை
.ஜந்துமணிக்கு எழும்பி வேலை வேலையென ஓடும் ரவியை நினைக்க பாவமாக இருந்தது.
அங்கும் அப்படித்தான் ஐந்து மணிக்கு நல்லூர் மணியும் பெருமாள் கோவில் ஓலி பெருக்கியும் நித்திரையை குழப்பிக்கொண்டிருக்கும். .அம்மாவும் சுப்பிரபாதத்தை முனுமுனுத்தபடி பூப்பறிப்பதில் ஒரு கண்ணும் எங்களை எழுப்புவதில் இன்னுமொரு கண்ணுமாக இருப்பா.
படிக்கிற பிள்ளைகள் இப்படி விடிய விடிய நித்திரை கொண்டால் என்ன ஆகும் ?
அம்மா இந்த முறையும் அக்காவை பெயிலாவினம். என குமார் அம்மாவுக்கு பக்கவாத்தியம்
வாசிப்பான்.
ஓமடா குமார் உனக்கிருக்கிற அக்கறையில ஒரு துளிகூட இதுகளுக்கு இல்லை.
இவன் குமாருக்கு விடியட்டும் ஏதவாது ஒரு சாட்டுவைத்து தலையில இறுக்கி குட்டவேணும் அக்கா புறு புறுத்தபடி போர்வையை இழுத்து மூடினா.
பிள்ளைகள் இப்பவில்லூன்றி பிள்ளையார் கோவில் திருவெம்பாகாரர் வரப்போகினம். நான் ஒருத்தி எத்தனை வேலையெண்டு செய்யிறது. உங்கட வயதுப்பிள்ளைகள்தானே குளிருக்கையும் எழும்பி வருகிதுகள். . நீங்களும் இருக்கிறீங்கள் படிக்கிறதும் இல்லை பக்தியும் இல்லை. அம்மா வழமையான புலம்பலை தொடரத் தொடங்கினா.
ஓம் என்னோட படிக்கிற பெட்டையளை எனக்கு தெரியும். அவையள் வடை, சுண்டல் சாப்பிடறதுக்குதான் வறவை எண்டு அவையலே எனக்கு சொல்லி சிரிச்சிரிக்கினம். உங்களுக்கு எங்களை பேசத்தான் தெரியும்.
மற்றவையில நொட்டை சொல்லிறதுக்கு முன்னுக்கு நில்லு. இவன் குமாரை பார் அவனும் சின்னபெடியன்தானே அவனுக்கு இருக்கிற பொறுப்பில கொஞ்சமாவது உங்களுக்கு இருக்கோ?
அம்மா அவனுக்க வேலைசெய்யிறதுதான் அவன்ர வேலை
அப்ப உங்களுக்கு என்ன வேலை ?
சும்மா இருந்து சாப்பிடுறது எங்கட வேலை.
அம்மா வழமைபோல் அக்காவின் காதைதிருக ஐயோஅம்மா நுள்ளாதேங்கோ என கத்தும் அக்காவை பார்க்க பாவமாக இருக்கும். அம்மாவும் அக்காவை விடாமல்
எழும்பு எழும்பி முகத்தை கழுவி மயில் கம்பளத்தை எடுத்து முன் விறாந்தையில விரிச்சிட்டு பிறகு படி.
ஏன் நான்மட்டும் எழும்பவேணும் ?
வேறஆர் உன்னோட எழும்பவேணும் ?
ஏன் சுகந்தியும்தான் எனக்கூறி என்னை மறந்திருந்த அம்மாவுக்கு நினைவுபடுத்தும் அக்காவின் மீது கோபம் கோபமாகவரும்.
அம்மா என்றபடிவந்து கட்டிப்பிடித்த சிந்து நிகழ்கால நிஐத்திற்கு அழைத்து வந்தான்.
சிந்துவின் தலையை வருடியவள் குஞ்சுக்கு பசிக்கிதா ? கொஞ்சம் படுத்திருங்க அம்மா பால் கொண்டுவாறன் எனக்கூறியவள் சமையலறைக்கு சென்று பாலை அடுப்பில்வைத்துவிட்டு அது பொங்கி வழியாமல் இருக்க காவல் இருந்தாள். இல்லாவிட்டால் ஒவ்வொரு நாளும் பாலும் பொங்கி வழியும் ரவியின் கோபமும் பொங்கி வழியும். ரவிஅடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்.
இந்தியாவுக்குபோனா பால்காச்சிற பொயிலர் வாங்கவேணும். அது பாலை பொங்கவிடாமல் விசிலடித்து கூப்பிடுமாம். எனக்கும் பிரச்சனை இல்லை ஒவ்வொருநாளும் பாலைவைச்சிட்டு புதையலை காக்கிற பூதம்மாதிரி காவல்காக்கிற வேலை மிச்சம் என எண்ணியபடி யன்னல் சட்டறை திறந்தாள் சுகந்தி.
.தெருவை மறைத்து பனிகொட்டிக் கிடந்தது. அதை துப்பரவு செய்யும் இராட்சத வாகனம் மட்டும் இரைந்தபடி தன் கடமையில் கண்ணாய் இருந்தது. சுகந்தியின் மனத்தில் சோகமும் வெறுப்பும் இணைந்து கைகோர்த்து கொண்டன. அவளுக்கு பிடிக்காத குளிர்காலம் அழையாத விருந்தாளியாக விரைந்து வந்திருந்தது. வெளியே பார்த்தவளுக்கு நாட்டில் ஊரடங்கு சட்டம் அமூலில் இருந்த காலத்தை நினைவூட்டியது. வெறிச்சோடியதெரு. நாய் வளர்ப்பவர்களும், குழந்தை உள்ளவர்களும் மட்டும் நடப்பார்கள். .
இந்த அவசரமான வாழ்க்கையில் எதையோ சாதிப்பதற்காக ஓடிக்கொண்டே இருப்பார்கள்.
பக்கத்து வீட்டுகாரர் இறந்தால் கூட பத்திரிகையை பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.
சுகந்தியால் மறக்க முடியாமல் பல நாட்;களாக தவித்த விடயம். முன் வீட்டு அல்பிரட்டின் மரணம்தான். எண்பது வயதான அவரை பார்க்கும் பொழுதெல்லாம் என்ரை அப்பா ஏன் இவ்வளவு கெதியா செத்தவர்? என அடிக்கடி நினைப்பாள். அவர் இறந்த செய்தி காலம் கடந்து அறிந்தபோது சீ என்ன மனிதர்கள் இவர்கள்? எனஎண்ணி குழம்பி அந்த அதிர்ச்சியிலிருந்து மீள அவளுக்கு எத்தனைநாட்கள் பிடித்தன.ஆரம்பத்தில் இவைகள் மனதுக்கு கஸ்ரமாக இருந்தாலும் இப்போது அவளுக்கும் பழகிப்போன வாழ்க்கையாகி விட்டது.
பிள்ளைகளும் வளர்ந்து விட்டார்கள் நானும் வெளியில் போவதற்க்கு ரவியிடம் ஒரு நாய் வாங்கிதரும்படி கேட்க வேண்டும். அதுக்கு ஐpம்மி என்டு எங்கட வீட்டு நாயின்ர பெயரைத்தான்
வைக்கவேணும். ஆனா அந்த பெயரை சத்தம்போட்டு கூப்பிட முடியாது. எங்கட நாட்டில வெள்ளைக்காரனை பழிவாங்கிற நினைப்பில நாய்களுக்கு ஜோன,; ரோசி, ஐpம்மி
என்று பெயரைவைத்து கோபம்வரும் பொழுதெல்லாம் Nஐhன் நாயே என அழைத்து
கையில் கிடைப்பதால் எல்லாம் அடிப்பதும் உதைப்பதும் நமது பழக்கம். ஆனால் அவர்கள் நாட்டில் வாழும் நாங்கள் நாய்க்கு என்ன பெயர்வைக்கலாம்? என சிந்தனையில்
ஆழ்ந்திருந்தவள் ஏதோ கருகிற வாசனையை நுகர்ந்து திடுகிட்டு திரும்பியவள் வழமை போல் குக்கர் பால் அபிஷேகத்தால் முழ்கி தவித்துக்கொண்டு இருந்தது.
சில நாட்களாக சுகந்தி மகிழ்ச்சியில் மூழ்கி திளைத்துக்கொண்டிருந்தாள். ரவியின் அம்மா
தான் உயிரோடு இருக்கும் பொழுதே மகனையும் பேரப்பிள்ளைகளையும் பார்த்து விட
வேண்டுமென பதினைந்து வருட யாசிப்புக்கு இப்பொழுதுதான் பலன் கிட்டியது. நாட்டுக்கு
போவதை நினைக்க ஒருபுறம் மகிழ்சியாக இருந்தாலும் மறுபுறம் அச்சமாகவும் இருந்தது.
ஆனாலும் பதினைந்து வருட பிரிவுக்கு பின்பு அக்காவையும் தான் பிறந்து வளர்ந்த வீட்டையும் பார்க்கபோகிறோம் என எண்ணும் பொழுது சுகந்தியின் மகிழ்ச்சிக்கு எல்லையே
இல்லை. அக்காவுக்கும் நண்பிகளுக்கும் என பொருட்களை வாங்கிகுவித்தபடிஇருந்தவளை
சுகந்தி முதல் முதல பிள்ளைகள் எங்கட நாட்டை பார்க்கபோகினம் அதைவிட எங்கட அம்மா தன்ர பேரப்பிள்ளைகளையும் இப்பத்தானே பார்க்கபோகிறா
ஏன் எங்கட அக்காவும்தானே
இப்ப யார் இல்லையென்று சொன்னது
உங்களோட சண்டைபோட எனக்கு இப்ப நேரமில்லை. பிள்ளைகளுக்கு மலேரியா தடுப்பு ஊசி போடவேணும் மறந்திட்டீங்களே ரவி ?
நல்ல காலம்; நினைவுபடுத்தினீர். எங்கட வீட்டு திறப்பையும் நளாயினி அக்காவீட்டில கொடுக்கவேணும் பூமரங்களுக்கு தண்ணீர் ஊற்ற சொல்ல வேணும். என்ற ரவியை இடைமறித்து வேண்டாம் முன்வீட்டு ரோசியிடம் கொடுப்பம் .
உமக்கு இப்பவெல்லாம் எங்கட தமிழ் ஆட்களில நம்பிக்கை இல்லாமல் போச்சு
பின்ன நளாயினி அக்கா வசந்தி வீட்டில தண்ணீ விடப்போயிற்றுவந்து எனக்கு எத்தனை
கதை சொன்னவா அப்ப அவவின்ர முகம்முழுக்க பொறமையால மூடி இருந்தது. எங்கட வீட்டிலேயும் நாங்கள் என்ன புதுச்சாமான் வாங்கியிருக்கிறம் என்று வசந்திக்கு விடுப்பு சொல்லுவா.
நளாயினி அக்கா சொல்லேக்க நீரும் விடுப்பு கேட்டுபோட்டு இப்ப அவவில மட்டும் பிழை
சொல்லிறீர்.
அவசொன்னா நான் கேட்கத்தானே வேணும்
இந்த பெண்களே இப்படித்தான் என தனக்குள் எண்ணி சிரித்தபடி ரவி சூட்கேஸ்களுக்கு வீட்டுவிலாத்தை எழுதி கட்டினான்.
பிளேனில் ஏறும்பொழுது வரவேற்கும் பெண் ஆய்போவான் கூறிவரவேற்றாள். பதிலுக்கு ரவியும் ஆய்போவான் எனக்கூறியது சுகந்திக்கு எரிச்சலுட்டியது. அப்பொழுதே தீர்மாணித்து விட்டாள் திரும்பிவரும் பொழுது மறக்காமல் இவர்களுக்கு வணக்கம் கூறவேண்டும் இப்படி எத்தனையோ சிந்தனைகளுடன் எட்டு மணித்தியாலம் எப்படி கழிந்தது என்றே புரியவில்லை
விடியாத விடியலில் விமானம் தரை இறங்கியது.
விமானதளத்தில் வரிசை வரிசையாக போர்விமாணங்கள் தயார் நிலையில் நிற்பதை பார்த்த
-வளின் இதயம் வலித்தது. பதினைந்து வருடங்களின் பின்பு தாய் நாட்டு மண்ணில் பாதம்பட்ட போது உடலில் ஓர் சிலிர்ப்பு ஏற்பட்டதை அவளாள் உணர முடிந்தது.
நெருப்பு தணலை அள்ளி தெறித்ததுபோல் வீசிய அணல் காற்றை தாங்க முடியாது
குழந்தைகள் அம்மா என அழைத்து தம் நிலை பகிர்ந்தார்கள். அவர்களை அணைத்தபடி
நடந்த சுகந்தியின் கண்கள் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்த காக்கிசட்டைகளை
பார்த்ததும் இனம் புரியாத பயம் அவளை சூழ்ந்து கொள்ள மெல்ல ஒட்டுப்பொட்டை உரித்து கைகளுக்கள் மறைத்துக் கொண்டு உள்ளே சென்றவர்கள். உள்நாட்டவர்கள் வரிசையில் இடம்பிடித்து அவர்களின் முறைவந்ததும் ரவி கடவுட்சீட்டை அதிகாரியிடம் ஒப்படைத்தான். அவர்களையும் கடவுட்சீட்டையும் மாறி மாறி ஒப்பீடு செய்த அதிகாரி
நீங்கள் இலங்கையர்கள் அல்ல வெளிநாட்டவர் பக்கம்போங்கள் என முறைத்தார்
சுகந்தியின் இதயம் வெடித்து சிதறுவதுபோல் ஓர் உணர்வு அவளுள்உருவானது.வெளிநாட்
-டவர் வரிசையில் தம்மை இணைத்து கொண்டவர்களை அந்த வரிiசியில் நின்ற வெளி
நாட்டு பயனிகளின் விழிகள் ஆச்சரியக் குறியோடு விழித்து நோக்கின.
எமது நாட்டில் எமக்கு உரிமை இல்லை இது எத்தனை கொடுமை என எண்ணியவளின்
எண்ணத்தில் பாரதியாரின்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியிருந்ததுமிந்நாடே
அதன் முந்தையராயிர மாண்டுகள் வாழ்ந்து
முடிந்தது மிந்நாடே அவர்
சிந்தையிலாயிர மெண்ணம் வளர்ந்து சிறந்தது மிந்நாடே.
அவளுக்கு மிகவும் பிடித்த பாரதியாரின் கவிதைவரிகளை நினைத்தவளின் மனது வெள்ளம் வடிந்து வெறுமையான நிலம்போல் ஆனாது. ஆனாலும் அக்காவைபார்த்ததும் அத்தனையும்
மறந்தவள் ஓடிச்சென்று அக்காவின் தோளில் சாய்ந்து இத்தனை வருட பிரிவின் துயரை கண்ணிரால் வெளிப்படுத்தினால். அந்த அழுகையுடன் அவளுள் மண்டியிட்டுகிடந்த பயம் வெறுப்பு காழ்புணர்சி அத்தனையும் கரைந்து ஓடியது.
அக்காவின் வீட்டுக்கு வரும்வழியெல்லாம் பிள்ளைகள் அக்காவிடம் கேள்விக்கு மேல் கேள்வி தொடுத்து கொண்டே இருந்தார்கள். அக்காவும் சளைக்காமல் பதில் அளித்தபடி
இருப்பதை பார்த்துக்கொண்டே இருந்தவளின் மனதில் இந்த பதினைந்து வருடத்திற்குள்
எத்தனை மாற்றங்கள் அக்காவின் கோலத்தில் வாழ்க்கையில் எல்லாவற்றிலுமே காலங்கள்
எவருக்காகவும் காத்திருப்பதில்லை என்பது எவ்வளவு காத்திரமான உண்மையென நினைத்
தாள்.
தெகிவளையில் உள்ள அக்கா வீட்டில் பிள்ளைகள் பட்டாம் பூச்சியைபோல் சிறகடித்து
பறப்பதை பார்க்க சுகந்திக்கு கவலையாக இருந்தது. இந்த சின்னப்பறவைகளின் சிறகை
அன்னிய நாட்டில் கட்டிவைத்தல்லவா வளர்க்கின்றோம். குருவிக்கூடுபோல் தொடர்மாடி
வீடு அமைதிகாக்கும் சட்டம், குளிர் இவைகளுக்கு நாங்களும் பயந்து குழந்தைகளையும்
பயப்படுத்தி என்ன வாழ்க்கை என சலித்துக்கொண்டாள் சுகந்தி.
மறுநாள் பொலிஸ் கிளியறன்ஸ் யாழ்ப்பாணம் செல்வதற்கான விசா எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு ரவி பிள்ளைகளுடன் அவரின் அம்மா வீட்டுக்கு செல்ல அக்காவுடனும்
மாமாவுடனும் யாழ் புறப்பட தயாரானாள் சுகந்தி.
ரவியையும் பிள்ளைகளையும் சமாதானப்படுத்திய சுகந்திக்கு அவர்களை பிரிந்திருப்பது
மனதுக்கு கஸ்ரமாக இருந்தாலும் தான்பிறந்து தவழ்ந்து வளர்ந்த வீட்டை பார்க்க போகும்
ஆசை அத்தனை துன்பங்களையும் துடைத்தெறிந்தது.பலத்த சோதனைகளின் பின் பலாலி
-யில் இருந்து யாழ்பாணம் வந்து இறங்கியவர்களின் விழிகளில் விழுந்த காட்சி அத்தனை
மக்களின் மனதையும் பிசையவைத்தன. அங்கும் இங்கும் ஓடித்திரியும் ராணுவ வாகனமும். அதனால் எழுந்த புழுதிமணம் கூட வேறு ஒரு நாட்டுக்குள் வந்துவிட்டோமோ என நினைக்கவைத்தது. ஓரு காலத்தில் கம்பீரமாகவும் சுறுசுறுப்பாகவும்
இயங்கிய அந்த மண் களைஇழந்து சோகமாய் காட்சி அளித்தது. அங்கு காணப்பட்ட
உடைந்த கட்டிடங்களும் இடிந்த பாகங்களுக்கிடையிலிருந்தும் எத்தனையோ சோகக்கதை
-கள் எட்டிப்பார்ப்பதை உணர்ந்தாள் சுகந்தி. கவலையும் அதிதமகிழ்சியும் ஏற்படும்பொழுது
மனிதன் மௌனித்து விடுகிறான்.அப்பொழுதும் அப்படித்தான் அவர்கள் மூவரும்மௌனமாய்
வீட்டின் அருகாமை வந்தார்கள்.
இதயம் இடித்து வெளியில் வருவதுபோல் ஓர் உணர்வை உணர்ந்தாள் சுகந்தி. அக்காவை பார்த்தாள் அக்காவின் கண்களும் கலங்கி தவித்தன. மெதுவாக கேற்றை தொட்ட பொழுது
அது ஒருவித சங்கீதம் இசைத்தபடி திறந்து கொண்டது.
ஒரு கணம் திடுக்கிட்ட சுகந்தியின் நினைவுகள் அந்த மகிழ்வான காலத்தை நினைவு
கூர்ந்தன. எங்கள் தந்தைக்கு பிடிக்காததும்; எங்களுக்கு மிகவும் பிடித்த சத்தம் அது
எம்மை மறந்து நாம் குதூகலித்து நிற்கும் பெழுது அப்பா வருகின்றார் என அபாய ஒலி
ஓலித்து எமை எத்தனை நாள் காப்பாற்றியிருக்கிறது. அவர்களின் மௌனத்தை கலைத்தது
ஓரு குரல் ..........................
ஆரது? உங்களுக்கு என்ன வேணும் ?என கேள்விகளை அடிக்கியபடி ஓர் முகம்
அந்த முதுகுக்கு பின் இன்னும் சில முகங்கள் முளைத்து எழுந்தன.
எங்கட வீட்டில இவர்கள் யார்? இது நாங்கள் கேட்;கவேண்டிய கேள்வி ஆனால் அவர்
-கள் முந்திக்கொண்டார்கள். சில நிமிடம் மௌனமே பதிலாக பரிமாறப்பட்டது. மறுபடியும்
அவர்கள் இம்முறை வாய்மொழி பகிரவில்லை.ஆயிரம் கேள்விகளை முகத்தில் தேக்கியபடி
எமை பார்வையால் அளந்தார்கள்.
தொண்டையை செருமியபடி அக்கா அந்த இடத்தின் மௌனத்தை கலைத்தா.
நாங்க உள்ளுக்கு வரலாமா ? இது என்ன கேள்வி அவளுக்கு அக்காவின் மீது கோபம்
கோபமாக வந்தது.
நீங்கள் ஆர் எண்டு சொல்லவே இல்லை ? இம்முறை சுகந்தி முந்திக்கொண்டாள்.
இது எங்கட வீடு, எங்கட அம்மா அப்பா எங்களுக்காக கட்டின வீடு. என தன் கோபத்தை வார்த்தையாள் வெளிப்படுத்தினாள்.
இவள் இப்படித்தான் அக்கா சமாளித்தா.
இல்லை பரவாயில்லை உள்ளுக்கு வாங்கோ இது உங்;கட வீடு. எனக்கூறி தங்கள் முகங்-களின் பாவங்களை மாற்றி சிரித்தார்கள். அக்காவும் அவர்களுடன்இணைந்துசிரிக்கமுயன்று தோற்று போனதை பார்க்க சுகந்திக்கு பாவமாக இருந்தது.
உள்ளே கால்பதிக்கும் பொழுது கேற்றிலிருந்து வீட்டுபடிமட்டும் பூசிய அந்த சிவப்பு நிலம்
அவளை பார்த்து பால்ய சினேகிதிபோல் சிரிப்பதை உணர்ந்தாள் சுகந்தி. இதில் எத்தனை நாள் வட்டக்கோடு, எட்டுக்கோடு, பிளேன்கோடு எனகீறி விளையாடுவதும். சோக்கால் கிறீயதற்காய் அம்மா அடிப்பதும். பின்பு பிழிந்த தேங்காய் பூவால் தேய்த்து தேய்த்து
அழித்தபின்பும் தன் முகத்தை இலேசாக காட்டி சிரிக்கும் அந்த கோடுகளும் விழிகளில்
விழுந்து மறைந்தன. அந்த பளிங்கு நிலம் இப்போ வறண்டு வெடித்து அவளின் கன்னங்களில் கண்ணீர் ஓர் நேர் கோட்டை வரைந்தபடியே இருந்தன. அக்காவின் கையை இறுக பற்றியபடி ஒவ்வொரு அடியாக அவளின் கண்கள் அளக்கத்தொடங்கின.
விறாந்தை படிகளில் பூச்சாடிக்குள் தமை அடக்கியபடி அகல கை விரிக்கும் அந்த பாம்ஸ் மரங்களும், இரண்டு பக்கமும் செடித்து வளர்ந்திருக்கும் குறோட்டன் செடிகளும், பூத்து
குலுங்கம் மல்லிகையும், நித்திய கல்யாணியும் தாங்கள் இருந்ததற்கான எந்த அடை
-யாளத்தையும் விட்டுப் போகவில்லை. உடைந்த பூச்சாடிகளை தவிர. அவைகளை என்றும் மரங்களாக அம்மா நினைத்ததே இல்லை. எங்களுடன் கதைபபதுபோல் அவைகளுடனும்
கதைத்தபடி பூப்பறிப்பதும் தண்ணீர் ஊற்றுவதும் கடந்த கால நினைவுகள் அவளின் மனதை பிசைந்தன.
இந்த மரங்களுக்கெல்லாம் அரசன்போல் நிமிர்ந்து பருத்து நின்ற மாமரம் மட்டும்அப்படியே
ஆனால் குருவிச்சையால் தன் இலைகளை மூடியபடி பாசத்துடன் பார்த்தது. அதை ஆசையாக தடவினாள். உன் கைகளில் ஊஞ்சல் கட்டி ஆடும்பொழுது உனக்கு எப்படி வலித்திருக்கும் பிஞ்சு மனதுக்கு அன்று புரியதவைகள் இன்று வாழ்க்கையில்
அடிபட்டு, றணப்பட்டு எழுந்து நிற்கும் பொழுதும் , எழுத்துலகில் மூழ்கி எழுந்த பொழுதும்
எல்லாமே புரியத்தொடங்கியது. இப்ப எனக்கும் வலிக்கி;றது என மௌனமொழி பகிர்ந்தாள். வார்த்தைகள் தேவைப்படாமலே இரு இதயங்கள் தம் சுமைகளை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொண்டார்கள். அந்த நிமிட இதயசுமை இறக்கம் இருவருக்கும் மட்டும் புரிந்தது. புரிதலின் அடையளாமாக மாமரம் ஒரு முறை சிலிர்த்து நிமிர்ந்தது.
வீட்டின் வாசல்படியை பாதம் ஸ்பரித்த நொடியில் சுகந்தியின் மனசும் உடம்பும் சிலிர்த்தது.
கண்கள் விறாந்தையின் இரு பக்க மூலையிலும் அமைதி காத்தபடி இருக்கும் பிரம்பு நாற்
-காலிகளை துலாவின. அதற்கருகில் இருக்கும் அம்மாவின் சாய்மனை கதிரை அதில் அம்மா அமர்ந்திருக்கும் பொழுது தீர்ப்பு அளிப்பதற்காக காத்திருக்கும் ராணியைப்போல்
அம்மாவை கற்பனை பண்ணுவாள்.எப்பொழுதும் தண்டிப்பதற்காகவே கையில் பிரம்பும்
கம்பீரமுமாய் அந்த நாற்காலியில் அம்மாவை தவிர யாரும் அமர்வதும் இல்லை. அவளின்
விழிகள் அம்மாவின் சாய்மனை கதிரையை ஆவலாய் தேடின.
பிள்ளை எதையோ தேடுறியள்போல மூலையிலிருந்து ஒரு குரல் ஒலித்தது
ஓம் இங்க இருந்த சாய்மனை கதிரை............. என இழுத்தாள் சுகந்தி.
நாங்கள் இந்த வீட்டுக்கு வரேக்க பெரிசா சாமான்கள் ஒன்டும் இருக்கேல்ல. ஆரும் எடுத்துக் கொண்டு போயிரிப்பினம்.
அது எப்படி எங்கட சாமான்களை எங்களை கேட்கமா எடுப்பினம் ?
இதலெல்லாம் இப்ப இங்க சகஐமா போயிற்று
அப்ப எங்கட சாமான்களை பார்க்க வேணுமென்டா வேற வீடுகளுக்கு போவேணுமே? என கேட்டவளின் கண்கள் வெறுப்பை கக்கின.
அவளின் கால்கள் வரவேற்பறையை அளந்தன எப்பொழுதும் அலங்கரிக்கப்பட்டபுதுமணப்
-பெண்போல் சிவப்பு கம்பளம் விரித்து. மூலையில் கண்ணாடி அலுமாரி அதன் மீது சிரித்த
முகத்துடன் சிலையாக கண்ணண். தெருவுக்கே மணி கூறி இந்த வீட்டின் செல்வத்தை
செழிப்பை கட்டியம் கூறி நின்ற அந்த கிறான் பாதர் மணிக்கூடு. அது சரிந்து விழாமல்
பாதுகாப்பதற்காக அடிக்கப்பட்ட ஆணிமட்டும் அப்படியே இருந்தது. ஆனால் அதை அடித்த கைகளும் இன்று இல்லையென்ற நிதர்சனம் அண்ணனை நினைக்கவைத்தது. பொகவந்தலாதேயிலை தொழிற்சாலையில் தலைமை பொறுப்பில் இருப்பவர் என்னுடன் விளையாடி என்னை ஏமாற்றி அழவைக்கும் பொழுது சிறு குழந்தையாக மாறிவிடுவார்.
அண்ணா எப்பொழுது லீவில் வருவார் என காத்திருப்பதே அன்றைய கால பொழுதாக இருக்கும். பங்களா தோட்டத்தில காய்க்கிற பியஸ், சின்னதோடம்பழம், புளிகொய்யா, அன்டுரியன், காணேஷன், பாபட்டன் பூக்கள் என அள்ளிக்கொண்டு வருவார். ஒரு நாள் அண்ணா வாங்கி வந்த கன்டோசை சாப்பிடும் பொழுது விழுங்கி விட்டேன் என கூறி அழ..................
அண்ணா மகிழ்ச்சியாக இனி நாங்கள் கன்டோசை கடையில் வாங்கத்தேவையில்லை
உன்னுடைய வயிற்றுக்குள் இருந்து கன்டோஸ் மரம் முளைத்து தலை வெடித்துவெளியில்
வரும் எனக் கூறி சிரித்தார். ஆனால் அதை நினைத்து எத்தனை நாள் நித்திரையில்லாமல்
அழுததும் தலையை தடவி பார்த்ததும் மறக்க முடியாது நிகழ்வு என நினைத்துக் கொண்
-டவள் அடுத்து அமைந்திருந்த சமையலறையை எட்டி பார்த்தாள்.
அம்மா தன் கைவண்ணத்தை எங்களில் பரீட்சித்து பார்க்கும் பரிசோதனைகூடம்.ஆனால்
இன்றைய நிலமையோ அன்னியனின் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்ட நாடுபோல் காட்சி
அளித்தது.அதன் அருகாமை சாப்பாட்டு அறை. இந்த அறையில்தான் அவளின் பெரும்
பாலானா நேரம் கழிந்து கொண்டே இருக்கும். அவளது சிரிப்பொலி இன்றும் அந்த அறை
-யில் ஒலிப்பதுபோல் ஓர் பிரமை ஏற்பட்டது.
சுகந்தி சாப்பிடேக்க சிரிக்காமல் வாயை மூடிக்கொண்டு சாப்பிடு என்டு எத்தனை நாளா
சொல்லிறன்
வாயை மூடிக்கொண்டு எப்படி அம்மா சாப்பிடுறது ? அவளின் பதிலை கேட்டு அம்மா
கோபம் மறந்து சிரித்துவிடுவா. அந்த மகிழ்வும் சிரிப்பும் எல்லாம் இந்த வீட்டோடுதொலைந்து
போயிற்று அம்மா. இப்படி எத்தனையோ இனிய நினைவுகள் பத்திரப்படுத்தப்பட்ட நினைவு
கல்லறைகளாக இந்த வீட்டோடும் மனதோடும் பதியப்பட்டுள்ளது. விதைக்கப்பட்ட
விதைகள் சிறு மழைக்கு வெடித்து வெளியில் வருவதுபோல் அவளுக்குள் அடங்கிகிடந்த பல நினைவுகள் சிறுக சிறுக வெளிவரத் தொடங்கின.
நீண்ட விறாந்தை அடுத்தடுத்து வரிசையாக அமைந்துள்ள படுக்கை அறைகள் அவைகள்
கதவுகள் இன்றி வெறுமையாக அழுது வடித்துக்கொண்டிருந்தது. கதவுகள் மனிதனுக்கு மனிதன் மீது நம்பிக்கையில்லா தீர்மாணத்தின் முதற்படி என்று எங்கேயோ படித்தது நினை
-வில் உதித்தது. அப்படியானால் இன் நிலையை எப்படி எடுத்துக்கொள்வது ? மனிதர்கள்
மனிதர்களை நம்பும் வாழ்க்கையின் ஆரம்ப படி என்றா ?அல்லது ஆள் இல்லா வீட்டின்
ஆணிகூட ஊருக்கு சொந்தம் என்பதா ? எப்படி எடுத்துக்கொள்வது ? என எண்ணியபடி
அடுத்து அமைந்திருந்த சுவாமி அறையை நோக்கி அவளின் பாதங்கள் விரைந்தன. விரை
-ந்த பாதங்கள் ஆணியால் அறையப்பட்டதுபோல் அசையாது நின்றன. பதினைந்து வருடங்களுக்கு முன் எப்படி அந்த அறை அமைந்திருந்ததோ அப்படியே எந்தவித மாற்றம் இன்றி இருந்தது.
அவளின் மனமோ பல கேள்விகளை கேட்க தவித்தது. இந்த வீட்டை துடைத்தெடுத்து போனவர்கள் இந்த அறையை மட்டும் எப்படி விட்டு வைத்தார்கள் ?மனிதர்களின் மனிதில் இன்னும் இறைபக்தி அழியாமல் இருக்கின்றது என்றா அல்லது நம்பிக்கை என்னும் அஸ்தி
-வாரம் ஆடிப்போய் விட்டது என்றா ?என குழம்பி நின்றவளின் நினைவில் சீதத்திருவிளக்கே
சீதேவி லஷ்மியே கோலத்திருவிளக்கே என பாடும் அம்மாவின் அந்த இனிமையான குரல்
காதில் ஒலிப்பதுபோல் ஓர் பிரமை ஏற்பட்டதானல் கண்களில் நீர் பிரவாகித்து ஓடியது.
ஆனால் அக்கா தன்னை மறந்து கை கூப்பி கண்மூடி தீயவர் வாழவும் நல்லவர் தாழவும் செய்வதேனோ இது தர்மம்தானோ என காலத்திற்க்கு இசைவான பாட்டை தனக்குள் முனு
முனுத்துக்கொண்டு இருந்தா.
1987ம் ஆண்டு இந்தியபடைகள் அமைதி காப்பதாக கூறி எம்மண்ணின் அமைதியை கலைக்க வந்த காலம். ஓரு வெள்ளிக்கிழமை அம்மா சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது சோதனை என்ற பெயரில் வீட்டினுள் நுளைந்தவர்கள் ஏதோ எம்வீட்டை கொள்வனவு செய்ய வந்தவர்கள்போல் ஒவ்வொரு சதுர அடியாக வீட்டை அளந்தார்கள் என
அம்மா எழுதியது நினைவுக்கு வந்தது. அதுமட்டுமா எழுதியிருந்தா எங்களது சுவாமி அறையின் புனிதத்தை பார்த்த இந்தியன் ஆமி தனது சப்பாத்து காலுடன் உள்ளே வர எத்தனித்து பின்பு சப்பாத்தை களற்றிவிட்டு உள்ளே வந்தான் என எத்தனை பெருமையாக
எழுதியிருந்தா. வீடடை சோதனையிட்ட பின் மனதை சோதனையிட முனைந்தவர்கள்......
இந்த பெரிய பங்களாவில நீங்கள் இருவரும் தனியாகவ இருக்கிறீங்கள் ?
இல்லை எங்களுக்கு உதவியாக ஒரு பெடியனும் இருக்கிறான் என்ற அம்மா குமாரை அவர்களக்கு அறிமுகப்படுத்தனாவாம்.
உங்களுக்கு பிள்ளைகள் இல்லையா ?
ஏன் இல்லை ஒரு காலத்தில எட்டு பிள்ளைகள் இந்த வீட்டை நிறைத்து இருந்தார்கள்.
இப்போ அவர்கள் எங்கே ?
சந்தோஷமான அந்த கூடு கலைந்து எத்தனையோ வருடமாகிவிட்டன. பறவைகளுக்கும்
சிறகும் முளைத்தது கூட்டையும் கலைத்து விட்டார்கள். என கூற நினைத்ததை விழுங்கி
-விட்டு எல்லோரும் வெளிநாட்டுக்கு போய்விட்டார்கள்.ஒரு மகள் கொழும்பில் இருக்கிறா.
உங்களுக்கு என்ன இல்லையென்று சண்டை பிடிக்கிறீங்கள் ?எங்கட நாட்டு நடிகைகளின்
பங்காள மாதிரி பங்களாக்கள், பின்னால தென்னம் தோட்டம், பழ மரங்கள் தண்ணீருக்கு
பஞ்சமில்லாத ஊற்று கிணறு. இதைவிட வாழ்க்கைக்கு என்ன வேண்டுமென்று இப்படி தனிமையில் தவிக்கின்றீங்கள் என தங்களின் இல்லாமையை ஒருமுறை நினைவுகூர்ந்தான்.
இல்லாததை தேடுவதுதானே மனித இயல்பு எல்லாம் இருந்தும் இருக்க வேண்டியது இல்லாமல் போயிற்று. அந்த நிறைவான வாழ்க்கைதானே எம் எதிரியின் கண்களை உறுத்தியது என தனக்குள் எண்ணியபடி மௌனம் சாதித்த கமலத்தை.
என்னம்மா யோசிக்கிறீங்க ?
ஒன்றுமில்லை உங்கட நாட்டிலையும் கஸ்மீர் யாருக்கு சொந்தம் என்று பாகிஷ்தானோட சண்டை பிடிக்கிறீங்களாமே ?
ஆமாம் கஸ்மீர் எங்களுக்கு சொந்தமான இடம். அது எங்கட உரிமை அதை எப்படி நாங்கள் விட்டுக்கொடுப்பது ?
உங்கட உரிமையை நிலை நாட்ட நீங்கள் உயிரை கொடுக்கலாம் உயிரை எடுக்கலாம். எமது மூதாதைகளின் வேர்கள் உள்ள மண்ணை நாம் விட்டுக் கொடுக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் ?தன் நிலை மறந்து ஆவேஷமாக விழுந்த கேள்வியால் அந்த இடம் மௌனத்தில் ஆழ்ந்தது.
தன் குரலை செருமி மௌனத்தை கலைத்தவனின் அடிவயிற்றிலிருந்து பெருமூச்சு எழுந்து அடங்கியது.
இரும்பு சட்டைக்குள் ஓர் இதயம் எதையோ நினைத்து அழுகின்றது என நினைத்த கமலத்
-திற்கு தைரியம் அதிகரித்தது. நாங்கள் போராடுவது எங்களுக்காக அல்ல. எங்கள் வருங்
கால சந்ததிக்காக அவர்களாவது சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி நிற்பதால்தான் இவ்வளவு அனர்த்தங்களையும் இழப்புகளையும் தாங்கியும் எங்
-கள் உயிர் உடலில் ஊண்றி நிற்கின்றது.
நீங்கள் இப்படி சொல்லுறீங்கள் உங்களது சந்ததிகளின் வேர்கள்மட்டும்தான் இங்க இருக்குது. விழுதுகள் அன்னிய நாட்டில் அல்லவா வேர் ஊண்ற போய்விட்டன..
ஒருக்காலும் இல்லை. விளாத்தி தள்ளி முளைத்தாலும் பருத்தியாகாது அதுபோலத்தான்
எங்கட பிள்ளைகள் எங்கவளர்ந்தாலும் எங்கட பிள்ளைகளாகத்தான் வளருவார்கள்.
அவளின் துணிச்சலான பதில் இந்திய கொமாண்டருக்கு மட்டும் அல்ல சுகந்திக்கும் ஆச்சரியமாக இருந்தது. எப்படி அம்மாவுக்கு இவ்வளவு துணிவு வந்தது ?என எண்ணியவளுக்கு பூவோடு சேர்ந்த நாரும் மணம்பெறும் என்ற முதுமொழி நினைவில் உதித்தது.
இறுதியாக அவளுடைய அந்த சின்ன அறை. நான் வீட்டுக்கு சின்ன பிள்ளை என்பதாலா
எனக்கு இந்த சின்ன அறை என எத்தனை நாட்கள் அம்மாவோடு சண்டைபிடித்திருப்பாள்
இந்த அறையில்தான் அவளின் கல்வி, கற்பனை, காதல் எல்லாம் அவளோடு போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்தது. அங்கிருந்த பொருட்கள் எல்லாம் அகற்றப்பட்டு வெறுமையாக காட்சி அளித்தது. அவளின் மனதைபோல.
இந்த மூலையில்தான் அம்மா அடிக்கும் பொழுது தன்னை முடக்கி அழுது ஓய்வாள்.
இந்த இடத்தில்தான் ஆடிமாத வெய்யிலுக்கு யன்னலையும் கதவையும் திறந்துவைத்து
அடிவளவு காற்றை உள்ளே சுதந்திரமாக உலாவவிட்டு நிலத்தில் புற்பாயை விரித்து
அம்மாவின் மீது கையையும் காலையும் பரவவிட்டு அம்மாவின் இதமான அணைப்பில்
சின்னக்குருவி தன் அம்மாவின் சிறகுக்கடியில் சுகமாக தூங்குவதுபோல் தூங்கிய கால
நினைவுகள் விழிகளில் நீரை ஐனிக்கவைக்க சோகத்தின் பிடியில் சிக்கயவள் அந்த இடத்
-தில் அப்படியே அமர்ந்து கொண்டாள். ................
அம்மா , அம்மா
என்ன ?
பாயில படுக்க முதுகெல்லாம் நோகுது.
எனக்கு வெக்கையா இருக்குது நீ போய் கட்டில்ல படு
எனக்கு தனியா படுக்க பயம்
அப்ப பேசாமல் படு
எனக்கொரு கதை சொல்லுங்கம்மா
என்ன கதை சொல்லிறது ?
ஏதாவது ஒரு கதை
உனக்கு வேற வேலை இல்லை பேசாமல் படு
பிளீஸ் அம்மா
சுகந்தி நாளைக்கு வெள்ளிக்கிழமை நாலுமணிக்கு எழும்பி உதயபூiஐக்கு போகவேணும்
பேசாமல் படு.
பின்பு அம்மாவை கட்டியணைத்தபடி உறங்கிய நினைவுகள். வாழ்க்கை எனும் பயணத்தில்
காலங்கள் கடக்கும் பொழுது எத்தனை அனுபவங்கள் அத்தனையும் எம் நினைவில் நிற்ப
-தில்லை. சில நேரங்களில் நேற்று நடந்த நிகழ்வுகள் கூட நீர் குமிழிகள்போல் மறைந்து
போய்விடும். ஆனால் சில நினைவுகளோ காலம் கடந்தாலும் அடி மனதில் ஆளமாக வேர் ஊண்றிவிடும். அதுபோலதான் இந்த வீட்டின் ஒவ்வொரு சதுர அடியிலும் என் அம்மாவின்
நினைவுகளும் ஆளமாக பதிந்துவிட்டிருந்தது. இந்த அறைக்கதவை அகலத்திறந்துவைத்து
அடிவளவின் வேப்பம் காற்றையும் தென்னம் காற்றையும் சுவாசித்தபடி எப்படியெல்லாம்
வாழ்ந்திருந்தோம் வாழும் பொழுது அதன் அருமை பெருமை எதுவும் புரியவில்லை.
முன்பு வீட்டுக்கு முன்னால் இருக்கும் வீட்டில் எப்போதும் வங்கியில் பணிபுரியும்அதிகாரிகள்
இடமாற்றம் பெற்றுவந்து தங்குவார்கள். இரு குடும்பங்களும் மிக நெருக்கமாக பழகுவதும்
பின்பு பிரிவதும். பிரிவின் துயரை அழுது வெளிப்படுத்துவதும். பின்பு வேறு ஒரு குடும்பம்
அவர்களுடனும் பழகுவது, பிரிவது, அழுவது இந்த நிகழ்வுகள் அவளுக்கு விநோதமாகவும்
விளங்காமலும் இருக்கும். அடிக்கடி அம்மாவை நச்சரித்தபடி இருப்பாள்.
அம்மா இந்த அன்ரி மாமா எல்லாரும் எங்கபோகினம் ?
வேற வீட்டுக்கு போகினம்
நாங்க மட்டும் ஏன் எப்பவும் ஒரே வீட்டில இருக்கிறம் ?
இது எங்கட சொந்த வீடு
ஏன் அம்மா சொந்த வீடு கட்டினீங்கள் ? எப்பவும் ஒரே வீட்டில இருக்கிறது எனக்கு பிடிக்கவேயில்லை.
அவளின் அறியாமையை நினைத்து அன்று அம்மா சிரித்ததன் அர்த்தத்தை அகதியாக
அன்னிய நாட்டில் அலையும் பொழுது புரிந்து கொண்டாள். சொந்த வீடு ஓர் கனவாக
கற்பனையாக மட்டுமே இருந்தது. வெளிநாட்டில் வீடு மாறுவதும் சாமான்களோடு போராடு
-வதும். போரட்டம் முடிந்து அதன் வலிகள் மாறுவதற்கிடையில் இன்னும் கொஞ்ச வசதி
-யாக வேறு வீடு கிடைத்து விட்டால் மறுபடியும் ஓட்டம,; வலி, வேதனை வாழ்க்கையே
சலித்துபோய்விடும்.
நினைவு எனும் பதுங்கு குழியிலிருந்து மீண்டவளின் விழிகளில் எதை அவள் பார்க்க வேண்டும் என்று துடித்தாளோ அந்த சாய்மனை கதிரை அவளின் பிரியமான அம்மாவின்
பிரியமான கதிரை ஓர் மூலையில் வறுமையில் வாடி வதங்கிய ஓர் பெண்ணைப்போல பரிதாபமாக அவளை பார்த்தது.அதன் கோலமும் அதன் மீது காலையும் கையையும் பரப்
பியபடி தன் நிலை மறந்து பிதற்றிக்கொண்டு ஓர் உருவம் படுத்திருந்த நிலையையும்பார்த்த
வளின் கண்களும் உடலும் நெருப்பை விழுங்கியதுபோல் ஓர் உணர்வை ஏற்படுத்தியது.
அதே வேகத்தோடும் வெறியோடும் அம்மனிதனை நெருங்கினாள்.
நெருங்கியவளின் கைகள் அம்மனிதனை பிடித்து இழுத்தது. எழும்புங்க இந்த கதிரையில
படுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்குது ?
ஏய் என்னை எழுப்ப உனக்கென்ன உரிமை இருக்கிது ?
இது...... இது என்ர அம்மான்ர கதிரை. இதில ஆரும் இருக்ககூடாது என்ரஅம்மா
மட்டும்தான் வார்த்தைகள் வெளிவர மறுத்தன.
ஓ இப்படி சட்டம் கதைக்கிறனீ அகதியாகபோன இடத்திற்கு கதிரையையும் கொண்டு போயிருக்க வேணும். இல்லாட்டி உன்ர அம்மாவோடு சேர்த்து எரித்திருக்க வேணும்
அந்த மனிதனின் நிலை மறந்த பேச்சால் தன் நிலை மறந்த சுகந்தி அவனை பிடித்து
கீழே தள்ளினாள். விழுந்தவனை சுற்றி உறவுகள் ஒன்று கூடின.கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்த நிகழ்வின் அதிர்வில் அவளின் அக்கா செய்வதறியாது திகைத்து நின்றாள். ஆனால் சுகந்தியின் மனமோ இது உன் உரிமை போராடு போராடு என இடித்துரைத்துக் கொண்டிருந்தது.
கோபங்கள் அங்கே போட்டியிட தொடங்கின. முதல்ல நீங்க வெளியில போங்க
பல விரல்கள் வாசலுக்கு வழி காட்டின.
சுகந்தி தன் நிலைமறந்து அம்மனிதனை கீழே தள்ளியது தர்மமா அல்லது அதர்மமா
என தீர்மானிக்கும் நிலையில் அப்போது அவள் இல்லை. ஒரு மனிதனை மனிதனாக
வாழவைப்பது அப்போதையை சூழ்நிலைதான் என்பதை புரிந்து கொண்டவள்.
நாங்கள் ஏன் வெளியில போகவேணும் ? இது எங்கட வீடு.
இல்லையென்டு ஆர் சொன்னது ? இந்த வீட்டையும் உங்களை பெத்து வளர்த்துகளையும் விட்டிட்டு உங்கட உயிர்மட்டும் பெரிசென்டு ஓடி ஒழிந்த கோழைகள் . தியாகிகள் சிந்திய இரத்தத்தில உங்கட வசதிகளை பெருக்க சென்ற அகதிகள் நீங்கள். இப்பவந்து உரிமை கொண்டாடுகிறீங்கள்.
உண்மைகள் எப்போதும் ஒழிந்திருப்பதில்லை.அந்த உண்மை இப்போது சுகந்தியை சுட்டெரித்தது. மரங்களின் இலைகளை உண்டு தன்னையும் தன் வாழ்வையும் வளம்படுத்திக்
கொள்ளும் மயிர்கொட்டிகள் தன்னை வளர்த்த மரத்திற்கு ஆபத்து வரும்பொழுது அதை
விட்டு விலகி போவதுபோலத்தானே நானும். இதில் கோபப்படுவதற்கு அர்த்தமே இல்லை எண்ணியவளின் மனம் அகதி என்ற வர்த்தையை மட்டும் தாங்க முடியாது தவித்தது.
வெளிநாட்டு வாழ்க்கையில் அகதி என்ற முத்திரையை எம் முகத்தில் பதித்துவிட்டு எம்மை
காணும் பொழுதெல்லாம் அவ்வார்த்தையை எம் முகத்திலேயே வாசித்து மனதை றணப்
படுத்தும் அந்த காரணப்பெயரை எம்மினத்தவரும் சுட்டிக்காட்டும் பொழுது அவளாள்
தாங்க முடியவில்லை.
மனித வாழ்வை அவரவர் எண்ணங்கள்தான் நிர்ணயம் செய்கின்றன.எண்ணங்கள் சொல்லாக
வெளிப்பட்டு பின்பு செயலாக மாறுகின்றது என்ற கூற்று தவறாக இருக்க வேண்டும். எம்
-மினம் எப்பொழுதும் அகதியாக வேண்டும் என கற்பனையில் கூட எண்ணியிருக்க மாட்
-டார்கள். அப்படியானால் எமக்கு ஏன் இந்த நிலை வரவேண்டும் ? என எண்ணியபடி
நிமிர்ந்தவள் பக்கத்து வீட்டிலும் புதிய முகங்கள் இருப்பதை கண்டாள்..
இந்த வீட்டிலிருந்த அன்ரியும் பிள்ளைகளும் எங்க ? அந்த வேதனையிலும் அவள் மனதில் உதித்த கேள்வியை புரிந்து கொண்டவர்கள்
இந்த வீட்டுக்காரரும் அகதியாக புலம் பெயர்ந்து கனடா போயிட்டினம் . நாங்கள் மன்னாரிலிருந்து இடம் பெயர்ந்து இங்கவந்து இருக்கிறம். வார்த்தைக்கு வர்ணம்பூசுகிறார்கள்
என எண்ணியவளுக்கு அந்நிலையிலும் சிரிப்பு வந்தது.
எதோ பைத்தியத்தை பார்ப்பதுபோல் எல்லோரும் அவளை பார்த்தார்கள்.
மெல்ல மெல்ல இருள் கவிழ்ந்து கொண்டு இருந்தது. அக்கா அவசரப்படுத்தினா...
சுகந்தி இருட்டுது வா மாமா வீட்டுக்கு போவம்.
ஆனால் அவளோ நகர மனம்மின்றி மறுபடியும் கதிரையை பார்த்தாள். பின்னிய பிரம்புகள் பிய்ந்தபடி வெறுமையாக அவளையே பார்த்துக்கொண்டு இருந்தது. அதில் அம்மாஅமர்ந்தி
-ருந்தபடி வா என அழைப்பதுபோல் அவளுக்குள் ஓர் பிரமை ஏற்பட்டது. அம்மா என
அழைத்தபடி அடியெடுத்து வைத்தவளின் கையை இறுகபிடித்து தடுத்த அக்காவின் கையை உதறிவிட்டு தன்னை மறந்து ஓடியவள் அந்த சாய்மனை கதிரையில் தலைவைத்து
குலுங்கி குலுங்கி அழுதாள்.
அம்மா ஏன் அம்மா எனை தனியாக விட்டுட்டு செத்துப் போனீங்கள் ?
நான் உங்களை விட்டுட்டு போனதாலயா எங்கே அம்மா இருக்கிறீங்க ?சுகந்திக்கு இப்படி அழுவது அம்மாவின் மடியில்
தலைசாய்த்து அழுவதுபோல் ஆறதலாக இருந்தது. அவளோடு இணைந்து அத்தனை கண்களும் கண்ணீர்pல் நனைந்தன. வீட்டிலிருந்தவர்கள் அவளின் தலைவருடி ஆறுதல்
வார்த்தைகளை பகிர்ந்தார்கள்.அக்கா சுகந்தியை இறுக அணைத்தபடி வெளியேறினா.
மௌமாக பின் தொடர்ந்தவள் மறுபடியும் திரும்பி அக்கதிரையை பார்த்தாள் அதில்அம்மா
அமர்ந்தபடி சுகந்தி மறுபடியும் எனை தவிக்கவிட்டு போறியா ? என கேட்பதுபோல்
ஓர் உணர்வு ஏற்பட்டது. என்னால் முடியவில்லை அம்மா என வாய்விட்டு அழுதவளை
இம்முறை அக்கா இறுகபிடித்துக்கொண்டாள். சுகந்தயின் கண்கள் நீரை சுரந்தபடி இருக்க கால்கள் மட்டும் நகர்ந்தது.அவளின் விழிகளும் இதயமும் அம்மாவின் கதிரையை திரும்பி திரும்பி பார்த்தன.
சின்னம் சிறுவயதின் நினைவுகள் ஆழமாக வேரோடி அகலமாய் விழுகளை பரப்பி விருட்சமாய் வளர்ந்துவிடும். அந்நினைவுகள் எப்போதும் மனதைவிட்டு அகலாது. அந்நிகழ்வுகளை
இரைமீட்கும்பொழுது அவை மகிழ்ச்சியாய் கண்ணீராய் வெளிபட்டுக்கொண்டே இருக்கும்
சுகந்திக்கும் அப்படித்தான்.
1 Comments:
காலத்தின் கரங்களோடு தொலைந்த பால்யத்தின் சுவடுகள் கதையாக வடிக்கப்பட்டிருக்கிறது. கதையின் நாயகியோடு பயணிக்கையில்தான் இழப்புக்களின் வீரியம் புரிகிறது. அருமையான கதை. நிஜம் உரைத்துச் சுடுகிறது.
Post a Comment
<< Home