நாளைய உலகம்

Saturday, September 13, 2008

மாய மான்



ஞாயிற்றுக் கிழமையாவது ஓய்வாக படுத்திருக்கலாம் என்ற நினைவை மூடிய யன்னலை உடைத்துக்கொண்டு
ஒலித்த அம்மாவின் குரல் தடைப்படுத்திக் கொண்டே இருந்தது. போன சமருக்குநட்ட ரோசா மரம் பூத்துவிட்டது.
இரண்டு பூ, மூன்று மொட்டு என்று தன் சினேகிதிக்கு விபரித்துக் கொண்டிருக்கும் அம்மாவை நினைக்ககோபம்தான் வந்தது. தன்னைப்பற்றி மட்டும் சிந்திக்கும் அம்மாவுக்கு பக்கத்தில்ருப்பவர்களைப்பற்றி அக்கறையே இல்லை. இதைப்பற்றி அப்பா கதைத்தால்................


இவ்வளவு காசைக்கொட்டி வீட்டை வாங்கிப்போட்டு எனக்கு கதைக்கிறதுக்கு கூட சுதந்திரம் இல்லையெண்டால் பிறகென்னத்துக்கு சொந்த வீடு வாங்கினீங்கள் ? இது என்ர வீடு நான் இப்படித்தான்; கதைப்பன்

ஆனால் நாடு உம்முடையதில்ல நினைவுவைச்சுக்கொள்ளும். அடிக்கடி தன் உண்மை நிலையை மறக்கும் அம்மாவுக்கு அப்பாவின் அச்சுறுத்தல் ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. அதிசயமாக வாய் திறக்கும் அப்பா இந்த வீட்டை பொறுத்தவரை ஒரு பேசாப் பொருள்..

அம்மாவின் ஆதிக்கம் அப்பாவின் மௌனம் இவைகள்தான் என் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கியது என்பதை
இருவரும் உணர்ந்ததாக தெரியவேயில்லை. அம்மாவின் ரோஜா விமர்சனம் என்னை மறுபடியும் பள்ளத்தில் தள்ளியது. அதிலிருந்து எழுந்துவிட வேண்டும் என்று என்னை நானே தயார்படுத்தி எழும்பொழுதெல்லாம் அம்மா திரும்ப திரும்ப அந்த நரகத்தில் என்னை தள்ளிக்கொண்டே இருக்கின்றா. அன்றும் அப்படித்தான்.............

சிவப்பு ரோஜா மாலை. பெண்ணும் மாப்பிள்ளையும் மாலையை மாற்றிக் கொள்ளுங்கோ ஜயரின் கட்டளை
காதில் ஒலிக்க. ஒரு கணம் பிரகாஷாசை நிமிர்ந்து பார்த்தேன்.. அவன் என்னை அளந்தபடி இருந்தான். சட்டென
அம்மாவின் அதிகார பார்வை நினைவில்வர தலையை குனிந்து கொண்டேன். நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட
பார்வையும். பாரதியாரின் கவிதை வரியை அடிக்கடி கூறும் அப்பா. பொம்பிளைப்பிள்ளை தலையை குனிந்து
கொண்டு நட எனக்கூறும் அம்மா. மாறுபட்ட கருத்துக்களால் வழி நடத்தப்பட்ட நான். மாலைகள் தோளில் சரியஅதிலிருந்து சிந்திய இதழ்களுடன் என் கண்ணீரும் அவன் காலடியில் சமர்ப்பணமாக கர்வமாய் அவன் பார்த்த பார்வை................................ஓ எவ்வளவு வக்கிரமான புத்தி அவனுக்கு

மாலதி மரியாதையாக கதைக்கப் பழகு. பிரகாஷை அவன் என்று சொலலக் கூடாது என்று எத்தனைதரம் சொல்லியிருக்கிறன்.

அவன் மட்டும் நீ, வா, போ என்று கதைக்கலாம் ஏன் நான் கதைக்க கூடாது?

அதுதான் எங்கட சம்பிரதாயம்.

இஞ்சேருங்கோ, என்னங்கோ, அப்பா இப்படியெல்லாம் நான் கூப்பிடுவன் என்று நினைக்காதீங்கோ. பிரகாஷ் என்று கூட கூப்பிடக்கூடாதாம் பின்ன என்னத்துக்கு மனுசருக்கு பெயர்வைக்கிறது ? கூப்பிடத்தானே.

மாலதி விதண்டாவாதம் செய்ய இது நேரமில்லை.

இது விதண்டாவாதமில்லையம்மா உண்மை உண்மையை நேர்கொள்ள உங்களில ஒருத்தருக்கும் தைரியம் இல்லை. நினைவுகள் நீள நீள..................................என் கண்கள் கண்ணீரில் மூழ்கி தவித்தன என் வாழ்க்கையைப்போல.

இப்பொழுதெல்லாம் நினைவுகள் உறுத்தும் பொழுதுகளில் அடிமனதில் அமிழ்ந்திருக்கும் எங்கட ஊர், பெரியவீடு
பூக்கள், மரங்கள் அந்த வீட்டையே உலகமாக்கி சுற்றி சுற்றிவரும் அம்மம்மா, ஜயா, முகம் மறவாத தோழிகள், பள்ளிக்கூடம் இவை அனைத்தும் எழுந்து கொண்டே இருக்கும்.

அம்மம்மாவின் விரலை பிடித்தபடி.........அம்மம்மா ரோசா எண்டா என்ன ?

அது ஒரு நிறம் குஞ்சு..

ஏன் மஞ்சல், சிவப்பு, வெள்ளை எல்லாவற்றையுமே ரோசா என்று சொல்லினம் ? அதை மஞ்சல் சிவப்பு என்று சொல்லாம்தானே.

என்ர ராசாத்தி என்று என்னை அள்ளி அணைக்கும் அம்மம்மா சிரிக்கும் பொழுது அவவின் பல்லும் காதில்
மின்னும் வைரமும் ஓரேமாதிரி பளிச்சென்று இருக்கும். அம்மம்மாவின் நினைவு என்னை வாடவைத்தது.

இப்படித்தான் அம்மம்மாவும் நானும் முனியப்பர் கோவிலுக்கு போயிட்டுவரும் வழியில் ஆஸ்பத்திரிக்கு முன்னால் பச்சை மலை மாதிரி அடுக்கியிருந்த தோடம் பழங்களை பார்த்ததும். வா ஒரேஞ் வாங்கிக்கொண்டு போவம் என்ற அம்மம்மாவிடம்

இது ஓரேஞ் இல்லை அம்மம்மா கிறீன் இமைக்கமறந்து என்னையே பார்த்துக்கொண்டிருந்தா. இப்பொழுதும் கடிதம் எழுதும் போது ரோஜா பூத்தாலும் தோடையை பார்த்தாலும் என்ர குஞ்சுவின்ர நினைவுதான் முதல்ல வருகிது. . அம்மம்மா எழுதும் பொழுதும் அழுதிருக்கிறா என்பதை அழிந்த எழுத்துக்களை வைத்து புரிந்து கொண்டேன். முற்போக்கு சிந்தனையுள்ள அம்மம்மாவுக்கு எதிர்மறையான அம்மா. எனக்கு அம்மம்மாவையும் ஜயாவையும் இப்பவே பார்க்கவேண்டும்போல ஆசையாய் இருக்கிது.

அப்பா ஜேர்மனியிலிருந்து எங்ளை அழைத்தபொழுது அம்மம்மா ஜயாவின் அழுத கண்கள் ஆறுவயதான என்னை அடிக்கடி கவலைப்படுத்தினாலும் அம்மாவின் கையை பிடித்தபடி விமானப்படிகளில் ஏறும் பொழுது எவ்வளவு சந்தோஷமாக இருந்தது. ஆரம்ப கால பேர்லின் வாழ்க்கை இப்பவும் என் நினைவில். அதன் பின் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு சுவிஸ் நாட்டுக்கு சென்றது. அங்கு பிறந்த தங்கைக்கு சுவிஸினி என்று பெயர் வைக்க வேண்டுமென்று அம்மா ஒற்றைக்காலில் நின்றது. அப்பா அடிக்கடி சொல்லுவார்….. இங்க வந்த எங்கட ஆட்களுக்கு அகதி அந்தஸ்து விண்ணபித்த நாடுகளிலெல்லாம் ஒரு இனம் தெரியாத நாட்டுப்பற்று
இதேபற்று எங்கட நாட்டிலையும் இருந்திருந்தால்! அங்க பிறந்த பிள்ளைகளுக்கெல்லாம் யாழ்ப்பாணம்,மானிப்பாய் சுதுமலை, கொக்குவில் எண்டு பெயர் வைச்சிருப்பினமோ ?

அப்பா அப்படி பெயர் வைக்கிறதென்டா எங்கட அம்மாவுக்கு இணுவில் எண்டே பெயர் வைச்சிருப்பினம். அம்மா எப்ப பார்த்தாலும் இணுவில் ஆஸ்பத்திரி,கெங்கம்மா டொக்டர் என்டுதனே புழுகிகொண்டு இருப்பா இதைக் கேட்டு அப்பா வாய்விட்டு சிரித்ததும், அதற்காக அம்மாவிடம் நான் அடி வாங்கியதும் இப்ப நடந்தமாதிரி இருக்கிது.சன் ரீவியில் சுகி சிவத்தின் இந்த நாள் இனிய நாள் பார்ப்பதற்க்கு அப்பா தவறுவதே இல்லை அன்றும் அப்படித்தான் பெயர் வைப்பதை பற்றிய விளக்கம். இந்தியாவில் வாழும் நாடோடி இனம் நிரந்தர வசிப்பிட -மின்றியும் பிழைப்புக் கருதியும் இடம் விட்டு இடம் நகர்ந்தபடியே இருப்பார்களாம். அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்களோ அங்கு பிறக்கும் குழந்தைக்கு அந்த இடத்தின் பெயரையே நினைவாக சூட்டிவிடுவார்களாம் மதுரையில் பிறந்தால் மதுரை, திருச்சியில் பிறந்தால் திருச்சி. இதைக்கேட்டுக்கொண்டு இருந்த சுவிஸினி

அப்ப நாங்களும் நாடோடிகளாப்பா? இதுபோதும் அம்மா கத்துவதற்கு கண்டறியாத புறோகிறாம் என அம்மா கத்திய கத்தலில் சன் ரீவியும் வாயை மூடிக்கொண்டது. அப்பாவை பார்க்க எனக்கு பாவமாக இருந்தது. அம்மாவை பொறுத்த மட்டில் சித்தி,அண்ணாமலை, அம்பிகை இவைகள்தான் தரமான நிகழ்சிகள். அவையள் அழக்கே அழுது சிரிக்கும் பொழுது சிரித்து, திட்டி இந்த நாடகங்களை பார்த்தே தன் பொழுதை நகர்த்தும் அம்மா இடைக்கிடையுத்தம் எங்களை துரத்தியதாக புலம்புவா….

ஏன் அம்மா அங்க இப்பவும் மனுசர் இருக்கினம்தானே கேட்கவேண்டும்போல இருக்கும். ஆனால் அம்மாவின் மரஅகப்பை கண்களில் வந்து வந்து வாயை இறுக மூடவைத்;துவிடும் எப்போதாவது அம்மாவின் உள் மனதிலிருந்த உண்மை தன் முகத்தை வெளிக்காட்டும். அப்போது மட்டும் ஆசை என்ற வார்த்தையும் கைகோர்த்துக் கொள்ளும். அம்மாவின் இந்த ஆசைதானே என் வாழ்க்கையிலும் ஆறாத வடுவை ஏற்படுத்தியது. அம்மாவின்ர பிடிவாதம் என்ர வாழ்க்கையை ஆதியும் அந்தமும் இல்லாத அம்மாவின்ர சமயம் மாதிரி எப்போதொடங்கியது?எப்படி முடிந்தது? எதுவுமே புரியாது குழம்பிப்போய் கிடந்தது. வீட்டில ஒரு காலச்சாரம் வெளியில ஒரு காலச்சாரம் எதை வெளியில எறியிறது? எதை உள்ளே கொண்டு வாறது? என புரியாது எப்பவும் குழம்பிப்போய் நிற்பதே என்ர வாழ்க்கையாகிபோய்விட்டது.

பள்ளிக்கூடம் போகும் பொழுதும் மைதிலி திருநீறு பூசி பொட்டுவைச்சு சைவப்பிள்ளை மாதிரி போவேணும்; எண்டு உனக்கு எத்தனை நாள சொல்லுறன்

எனக்கு வெட்க்கமா இருக்குதம்மா பள்ளிக்கூடத்தில மற்ற வகுப்பு பிள்ளைகளெல்லோரும் சிரிக்கினம்

ஏன் அவைமட்டும் தங்கட சிலுவையை கழுத்தில தொங்கப்போட்டக்கொண்டுதானே வருகினம்.அதுக்கு நாங்க சிரிக்கிறமே?

இப்படி கத்தும் அம்மாவுக்கு பயந்து திருநீறு பூசி பொட்டுவைச்சு பிறகு பாடசாலைக்கு கிட்டபோனதும் பொட்டை உரித்து புத்தகத்தினுள் ஒட்டிவைத்துவிட்டு திருPறை அழிப்பதும் பின் வீட்டுக்கு வரும் பொழுது பொட்டை எடுத்து ஒட்டிவைப்பதும். ஆனால் சுவிஸினி மட்டும் அம்மாவின் விருப்பத்திற்கு ஏற்றமாதிரி நடப்பதால் அம்மாக்கு ஒரேபெருமை அவள்தான் தமிழ் பிள்ளைமாதிரி இருக்கிறாள். என அடிக்கடி பெருமையா கூறிக்கொண்டே இருப்பா

அப்ப நான் என்ன சிங்கள பிள்ளைமாதிரியே இருக்கிறன் ?

இவ்வளவு விஷயம் நடந்து முடிஞ்சிருக்கு இவளின்ர கண்ணில ஒரு சொட்டு கண்ணீர் வருகுதாபாருங்க வாய்க்கு
மாத்திரம் குறைச்சலில்லை.சிதறி உடைத்து சின்னாபின்னமாகிய என்வாழ்க்கை, எப்போதும் அழுதுவடியும்அம்மா இவைகளை பார்க்க எனக்கு எரிச்சல் எரிச்சலாக இருந்தது

ஏன் நான் அழவேணும் ?

உன்ர வாழ்க்கையை தொலைச்சுபோட்டு நிக்கிறாய் அதுக்கு அழு

இல்லை நான் அழவே மாட்டேன். ஏனென்டால் அது என்ர வாழ்க்கை இல்லை. விரும்பினா அதை தேடித்தந்த நீங்க அழுங்க

பாருங்க அவள் என்ன சொல்லிறாள் கேட்டுக்கொண்டு சும்மா இருக்கிறீங்க

அப்பா என்னையே பார்த்துக்கொண்டு மௌனமாக இருந்தார். பாவம் அப்பா எனக்கு கிடைத்த வாழ்க்கையால் அப்பாவுக்கு கிடைத்த பரிசு இருதய நோய். எல்லாம் அவனால வந்தது. எத்தனை முகம் கொண்ட மனிதர்களை வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மிருகங்களை பொறுத்தவரை அதன் குணாதிசயங்கள் வெளிப்படையாக புரிந்ததால் பகுத்தறிந்து எம்மை எதிர் நோக்கும் பிரச்சனைகளிலிருந்து விலகி எமை பாதுகாத்துக் கொள்ளலாம் ஆனால் குழந்தை முகமும் மிருக மனமும் கொண்ட பிரகாஷ் போன்றவர்களை நினைக்க இந்த உலகமே பயங்கரமானதாய் இருந்தது. இந்த நேரங்களில் எனக்கு அம்மம்மாவை பார்க்க வேண்டும் அவவின் மடியில படுக்க வேணும்போல் தோன்றும்.

சே எத்தனை அவமானங்கள். திருமணம் முடிந்த பின்கிடைத்த தனிமையை பயன்படுத்தி பகலை இரவாக்க எண்ணிய அந்த அசிங்க மனம்

பிளீஸ் வேண்டாம் பிரகாஷ் கதவை மூடாதீங்க அம்மா, அப்பா, அம்மம்மா எல்லாரும் என்ன நினைப்பினம்

அட ஜேர்மனியில்வளர்ந்த உனக்கு வெட்க்கமா ?

அப்பா அடிக்கடி கூறும் வார்த்தை புயலாக இருக்கும் பொழுது புயலாக வீசு எனக்குள் வீசிய புயல் வார்த்தைகளாக வெடித்து வெளியில் விழுந்தது.

முட்டாள்மாதிரி கதைக்காதீங்க பிரகாஷ்

நான் முட்டாள்தான் நீ எப்படி பட்டவள் என்று தெரியாமல் உன்னை கட்டின முட்டாள். வார்த்தைளை விஷமாக்கினான்.
ளூரவ ரி பிரகாஷ் வார்த்தை நாகரீகம் கூட தெரியாத உங்களுக்கு என்னை விமர்சிக்க என்ன தகுதியிருக்கு? அம்மாக்கு தெரிஞ்ச ஆக்கள் எண்டதை தவிர உங்களைபற்றி எனக்கென்ன தெரியும் ?

நான் என்ன உன்னை மாதிரி வெளிநாட்டிலயே வளர்ந்தனான் ?

ஏன் வெளிநாட்டில வளர்ந்தா என்ன தப்பு? வெளிநாட்டு காசுக்கு ஆசைப்பட்டுத்தானே இந்த களியாணம் நடந்தது வார்த்தைகள் வளர்ந்தன. பின் அமைதியாகி அன்றையபொழுது ஊமையாக கழிந்தன. அதன்பின் அவனின் ஜேர்மன்வருகை என்னை நரகத்தினுள் தள்ளியது. இங்கு நடந்த அறிமுகவிழாவில் எவ்வளவு அநாகரிகமா நடந்துகொண்டான். என்னுடன் சின்ன வயதிலிருந்தே படித்த டொமினிக், லூக்காஸ் எல்லாரையும் எப்படி அவமானப்படுத்தினான். அவனுக்கு பக்கபாட்டு பாட அம்மாவும். என்ன இருந்தாலும் நீ அந்த வெள்ளைக்கார பெடியன்களோட டான்ஸ் ஆடி இருக்கக்கூடாது.

ஏன் ஆடக்கூடாது? அவையளும் நானும் ஆறுவயதிலிருந்தே குசநைனௌ என்று உங்களுக்கு தெரியும்மதானே. இ

ஏன் உனக்கு வெள்ளைக்கார பெட்டைகள் போததே.

ஆiனெ லுழரச றழசன பிரகாஷ்.

மருமகன் சொல்லிறதில்ல என்ன பிழை இருக்கு?

அம்மா உங்கட தமிழ் ஆட்கள் மாதிரி என்னுடைய குசநைனௌ ஜ நினைக்காதீங்க மனசுமுழுக்க வக்கிரத்தை வளர்த்துக்கொண்டு வெளியில கலாச்சாரம,; விழுமியம் எண ;டு மற்றவர்களுக்கு பாடம் புகட்டிக்கொண்டு இருககிறவை மாதிரிஇல்லை. அவையள் நட்புக்கு மதிப்பு குடுத்து மற்றவர்களின்ர விருப்பு வெறுப்புக்கு மரியாதை கொடுககிறவையள்.

பார்த்தீங்களா ஆண்ரி உங்கட மகளுக்கு என்னைவிட வெள்ளையன்கள் பெரிசாபோச்சு

லுநள எனக்கு என்னுடைய நண்பர்கள்தான் பெரிசு. அன்றைய பொழுதும் சுவர்களை முறைத்தபடி கழிந்தன.

அம்மா என்றால் எனக்கு தெரிவதெல்லாம் கலாச்சாரம் பொட்டு, தாவணி, கையால்சாப்பிடுவது,வணக்கம், நன்றி தமிழ்படம்பார்ப்பது இல்லாவிட்டால் பழம்பெருமை பேசுவது, ஒளிவீச்சு பார்ப்பது எங்கட நாட்டில நடக்கிற அனர்த்தங்களை நீங்களும் பார்க்க வேணும் பிள்ளைகள் எண்டு கட்டாயப்படுத்தி பார்க்கவைப்பா. அன்றும் அப்படித்தான் நாவாலி தேவாலயத்தில் நடந்த நிகழ்வுகளை பார்த்தநேரம் தொடக்கம் நித்திரை என்னைவிட்டு எங்கோயோ தொலைநதுபோய்விட்டது. கண்மூடினாலும் திறந்தாலும் இரத்தம், உடல்சிதறிய குழந்தைகள், வயதோதிபர்கள், ஓ என்ற அழுகுரல் எல்லாம் சேர்ந ;து என்னை சித்திரைவதை பண்ணியபடியே இருந்தது. படிக்க சாப்பிட முடியாமல் நான்பட்டபாடு. அந்தஅழுகுரல்கள் இப்பவும் எனக்குள்ள இருந்து கொணடு அழுதுகிறது இநத அம ;மாவுககு எங்க தெரியப்போகிறது ?. ஆனால் அம்மா அதைபார்க்கும் பொழுது அழுததோடு சரி. பின் வழமைபோல் சன் ரீவீ நாடகம், தமிழ் படம்.

அம்மாவின் தலையீடு படிப்பிலும் கத்தோலிக் சமயம் படிக்காதே, எவங்காலீஸ் அதுவும் வேண்டாம் அப்ப நான் என்ன சமயத்தை படிக்கிறது.?

எங்கட சமயத்தை படிப்பிக்கச் சொல்லு

அதைபடிக்கிறதென்றால் நாங்கள் நாட்டில இருந்திருக்கவேணும்

இருந்திருக்கலாம்தான் இந்த கண்டிறியாத நாட்டுக்கு ஏன் உன்னைக்கூட்டிக்கொண்டு வந்தன் என்டு இருக்குது ஆ அதோட இரவில நடக்கிற வகுப்புக்குகளுக்கு வரமாட்டன் என்டு சொல்லிப்போட்டு வா

ஏன்?

இலங்கையில நாங்கள் ஆறு மணிக்குபிறகு கேற்றைவிட்டு எங்கேயும் போறதில்லை.

அம்மா அது அங்க.

எங்கேயும் பொம்பிள பிள்ளையள ; பொம்பிளைபபிளளையளதான ; இருட்டினா வெளியிலை போகக்கூடாது.

ஏன் போகக்கூடாது ?

போகக்கூடாது என்டா பிறகென்ன எதிர்க்கேள்வி.

இல்லை நீங்க ஏன்ஏன ;டு சொல்லவேணும்.

சொல்லேல்ல என்டா?

எனக்கு தெரியும் இதன் பிறகுவழமைபோல் அகப்பை காம்பு. அம்மா என்படிப்பையும் என்னையும் குழப்பிக்கொண்டிருப்பதை கவுன்சிலரிடம் போய ; சொன்னதன் விளைவு என் முதுகில் இன்னும் ஆறாதவடுவாக நினைவுபடுத்திக்கொண்டுதான் இருக்கின்றது அடித்துவிட்டு இதையும் கவுன்சிலரிட்ட போய் சொல்லு. நான் ஒன்டும் சாரத அன்ரிமாதிரி இவங்கட கண ;டறியாத சட்டத்துக்கு பயந்து இந்தியாவுக்கு கூட்டிக்கொண்டுபோய் அடிச்சிட்டு கூட்டிக்கொண்டு வருவன் என்டுமட்டும ; நினைக்காதே இந்தியா என்டாலே பயப்படும் சாரதாஅன்ரியின்மகளின் பயந்த கண்கள்மனதில் பளிச்சிட்டன இரவு என்பதும் அம்மாவை பொறுத்தவரை ஒரு பயங்கரமானபொழுது. இதில அம்மாவில எந ;தப்பும் இல்லை. அம்மா வளாந்த சூழ்நிலை அப ;படி.

அம்மா தப்புக்கள் இரவில்தான் நடக்கும் என்டு ஏன்நினைக்கிறீங்கள் ? பகலிலையும் நடக்கலாம்.

மாலதி பேச்சு நீளுது

அம்மா உங்களுக்கு சில விஷயம் விளங்கவேணும்.

உன்னுடைய வாழ்கையையே உனக்கு விளங்கேல்ல பிறகு என்னத்தை நீ எனக்கு விளங்கப்படுத்த போறாய்? உன்னாலதானே பிரகாஷை நாட்டுக்கு அனுப்பினவங்கள்.

அம்மா அவன் என்னைவிரும்பேல்ல இந்த நாட்டில வாழமட்டும்தான் ஆசைப்பட்டவன். இப்படிபட்ட ஏமாற்றுக் காரன்களுக்கு இது ஒரு பாடமா இருக்கட்டும். உங்களுடைய குசநைனெ வசந்தி அன்ரியின்ர மகள் ஏமாந்தமாதிரி நான் ஏமாறவில்லையென்டு சந்தோஷப்படுங்க .

ஆனால் இங்க உள்ள தமிழ் சனங்கள் உன்னைப்பற்றி எப்டியெல்லாம் கதைக்கினம் என்டு உனக்கு தெரியுமே?
அம்மா அவையளுக்கு கதைக்கமட்டும்தான் தெரியும். நாள் முழுக்க மறறவையளைபறறி கதைச்சு கதைசசே பொழுதைபோக்கிறவை. மனுசரை அவர்களின் மெல்லிய உணர்வுகளை எதையுமே விளங்கிக் கொள்ளவும் மாட்டார்கள், விளங்க முயலவும் மாட்டார்கள். மற்றவர்களின் துன்பத்தில சந்தோஷம் காணுற நோய்பிடித்தவையள். மறைமுகமாகவோ நேரடியாகவோ ஏதாவது ஒருஉயிரினத்தை வருத்தியபடியே காலத்தை கரைப்பவர்கள். இவையளை நாஙக மனுசார மதிக்கவே கூடாது.

இதயத்தில் ஏற்பட்ட வலியை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கிவைக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் பொழுது வடுக்களின் மீது தீயைக்கொட்டுவதுபோல் இந்த சமுதாயம் புண்ணாகியிருக்கும் ;இதயத்தில் வார்த்தை தீயை கொட்டுகின்றார்கள். நான் இந்த போலி சமுதாயத்தின் பிடியிலிருந்து எப்படி வெளியேவருவது? மாரீசன் மாயமானாகி இராமனை அந்த காடெல்லாம் அலையவைத்தான் என்று அம்மம்மா கூறிய கதைமாதிரி இங்கேயும் மாயமானை பிடிப்பதற்காய் பல பெற்றோர்கள் அதன் பின்னால் ஓடியபடியே இருக்கின்றார்கள். ஆனால் எங்களுக்குமட்டும் சீதைக்கு கீறிய கோடுபோல் ஒரு கோட்டை கீறிவைத்திருக்கின்றார்கள் நாங்களும் அதை தாண்டுவோமா ?தாண்டாவிட்டால் இராவணன்போல் யாராவது எங்களையும் கோட்டோடு தூக்கிச்சென்று சிறைவைத்து விடுவார்களோ? இப்படி எத்தனையோ கேள்விகள் எனக்குள்மட்டுமல்ல இங்கு வாழும் இளம் சமுதாயத்தின் அத்தனை உள்ளங்களிலும் முளைப்பதும் வாடுவதுமாக.............நான் அம்மம்மாவோடேயே இருந்திருக்கலாம்.

2004


posted by சாந்தினி வரதராஜன் at 3:59 AM 3 comments

Thursday, September 11, 2008

றைட்டோ …?



இலைகள் கூட அசையாது நிற்கும் வெப்பியரா காலத்தில் மழை கொட்டிக்கொண்டிருந்தது. இருட்டும் வெளிச்சத்தை விரட்டிக்கொண்டிருந்ததால் பகல் மறைந்த காலம் நீண்டு கொண்டேபோனது. இங்க எல்லாமே மாறிப்போய்விட்டது எண்டு ரவிக்கு தொலைபேசியில் சொல்லக்கூட பயமாக இருந்தது. வெளியில அந்த சனியன்கள் இந்த மழைக்கு என்ன செய்யுங்கள்? . இதுகள் எங்கட வீட்டு வாசலில மண்மூட்டைக்குள்ள பதுங்கிக்கொண்டு எப்ப பார்த்தாலும் ஆரோ வருவினம் எண்ட மாதிரி தெருவையே பார்த்துக்கொண்டிருக்கிறதை வெளிநாட்டாக்கள் பார்த்தால் ஏதோ எங்களை பாதுகாக்கத்தான் இவை இருக்கினம் எண்டுதான் நினைப்பினம். லாஸ் மிக் றூயிக் (என்னை அமைதியா இருக்கவிடு) சுமி டொச்சில் புலம்பிக்கொண்டிருந்தாள். எத்தனையோ காலமாய் இதைத்தான் நாங்களும் சொல்லிக்கொண்டிருக்கிறம்.. வாழ்க்கை பாதளத்தின் நடுவே மெல்லிய கயிற்றில் ஊசாலடிக்கொண்டிருப்பதைப்போல ஓர் உணர்வு எழுந்து கொண்டே இருந்தது. . அப்போதெல்லாம் வீடு செல்லல் பற்றிய நினைவுகள் எப்போதும் மனதில் நடந்து திரியும் கனவாகத்தான் இருந்தது.


நினையா பிராகாரம் அதுவும் ஒரு விடியாத இரவில் என்னையும் பிள்ளைகளையும் ஜேர்மன் அரசாங்கம் நாடு கடத்திய நிகழ்வை நினைத்தால் இப்பவும் மனம் நடுங்கியது. விமான நிலையத்தில் எதை நினைத்து அழுவது? ;எங்களை காணமல் ரவி தேடப்போகிறரே எண்டு அழுவதா? நானும் பிள்ளைகளும் இனி என்ன செய்யப்போகிறம் எண்டு அழுவதா? எதுக்கெண்டு அழுவது? ஜரோப்பிய தெருக்களில் எங்கள் முகங்களில் வாசித்த அதே வார்த்தையை இங்கும் அகதிகள்;, சிகோனியர்(நாடோடிகள்) என தங்களுக்குள் கதைத்துக்கொண்டு எங்களை பரிதாபமாக பார்த்தார்கள். இவர்களுக்கு என்ன தெரியும்? இருப்பை தொலைத்து தெலைத்து அலையும் எங்களைப்பற்றி, நாங்கள் வாழ்ந்த அந்த சந்தோஷமான வாழ்க்கையை பறித்தவர்களைபற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? எவ்வளவோ சொல்லலாம் சொல்வதற்கு என்னிடம்தான் எந்த மொழியும் இல்லை.


இப்போதெல்லாம். நட்சத்திரங்களெல்லாம் தொலைந்துபோய் கிடக்கும் இரவு நேரங்கள் அமைதியாக கழிவதே இல்லை எப்பவும் ஏதாவத ஓர குரல் கத்தி குளறிக்கொண்டே இருக்கும். அந்த அழுகை ஒலியை இயமனின் முகம் கொண்ட அந்த பச்சை வாகனம் உறுமியபடி அள்ளி அழித்துக்கோண்டே போகும.; இப்படி அழும் சத்தத்தை அதுவும் குளறி அழும் சத்தத்தை முன்பு ஒருபோதும் நான் கேட்டதே இல்லை. பின்னொரு நாள் அந்த அழுகை சத்தத்தை முதல் முதலாக ராகினி வீட்டில கேட்டனான் அப்போது எங்கள் தெருக்களில் நாங்கள் மட்டுமே வாழ்ந்த காலம் அது. எங்கள் தெரு எங்களின் பாதங்களை மட்டும் தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தது. நாங்கள் சிரிப்பதை பார்த்து அதுவும் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்த காலம். நாங்கள் ஓடிவிளையாடினோம், விழுந்தோம், பின் எழுந்தோம். சோளகக்காத்து வீசும் பொழுது இலைகளை சுருட்டி சுருட்டி காலுக்குள் விடும். அப்பொழுது புதிதாக வரும் சினிமாபட நோட்டீசை எடுத்து வீசியபடி கார் பறக்கும் நாங்களும் பறந்து பறந்து ஒருவரை ஒருவர் தள்ளி விழுத்தி முழங்கால் உரச விழுந்து எழுந்தோம்.. அதிலும் எம்.ஜி;ஆர், சிவாஜி எண்ட சண்டையும் பெரிதாகவரும். அந்தப்பொழுதில்தான் எங்கள் தெருவே ஒரு நாள் அழுதது. நிம்மியோடும் என்னோடும் கதைத்துக்கொண்டு வண்ணார்பண்ணை சிவன்கோயில் மட்டும் சிரித்தபடிவந்த ராகினியின்ர மாமா கண்ணாதிட்டிபக்கம் திரும்பேக்க கையைகாட்டிட்டு போனவர் யப்பான்நகைக்கடையிலையே செத்துப்போனார். அப்பத்தான் அத்தை, அக்கா, அம்மா எல்லாரும் ஜயோ எண்டு குளறினவை. நானும் நிம்மியும் நடுங்கிப்போனம். எங்கட ஆச்சி சாகேக்க இப்படி ஆரும் அழவே இல்லை. நால்லா வாழ்ந்திட்டு செத்துப்போனா மனுசி எண்டுதான் சொன்னவை. அம்மாவும், பெரியம்மாவும் மட்டும் அழுதவை. பந்தம் பிடிக்கேக்க திருராசா சொன்னவன் நீ கையைக்காட்டு எங்கட ஆச்சிதானே கை அழுகாது எண்டு இவன் எப்பவும் இப்பிடித்தான் என்னை ஏமாத்திறவன் எண்ட பயம் எனக்கு பந்தம் பிடிக்கவே பயமா இருந்தது.
பிறகு பழையபடி நமச்சியவாய பதிகம் பாடேக்கையும் நெல்லுப்பொரி தூவேக்கையும் பயம் வந்திட்டுது. அதுக்கு பிறகு கொட்டடி நமச்சிவாய பள்ளிக்கூடத்துக்கு போகேக்க அதாலபோற சவத்துக்கு நெல்லுப்பொரி தூவியிரிப்பினம் அதை உழக்காமல் கவனமா நடந்தால் அதுக்குள்ள ராகினியும் திருராசாவும் என்னை தள்ளி தள்ளி விடுவினம். இவை எப்பவும் இப்பிடித்தான். எனக்கு ஏதாவது செய்வினம் அல்லது நான் சொல்லிறதை நம்பாமல் நையம் காட்டி சிரிப்பினம். எங்கட அம்மாவுக்கு எலிசபத் மகாராணி ஒரு குடை பரிசா குடுத்தவ எண்டு சொன்னா அதுக்கும் சிரிப்பினம். நான் அம்மாவைக்கொண்டு சத்தியம் பண்ணினான். அம்மா கவனமா வைத்திருக்கிற குடையின்ர கைபிடியில அவவின்ர படம் இருக்கு வாங்க காட்டிறன் எண்டு சொல்ல. தங்கட வீட்டு குடையிலையும் அவவின்ர படம் இருக்கு எண்டு சொல்லி பெரிசா சிரிச்சவை.


சிரிப்பு அதை மட்டும்தான் எங்கட தெருவும், வீடும், படிகளும், மரங்களும் கேட்டு கேட்டு மகிழ்ந்த காலத்தை நான் பார்த்திருக்கின்றேன்.. வர்ணம் விசிறிய வானவில்போல் வாழ்ந்த அந்த வாழ்க்கையை இனி நான் எங்கபோய் தேடுவன்? என் சின்ன வயதில் மனிதர்களோடு பேசியதைவிட மரங்களோடு பேசியது அதிகம் கொய்யாமரமும், மாமரமும், நாவல்மரமும் நான் மிகவும் நேசித்த என்ரை செரிமரமும், பாலைமரமும் என்னிடம


(2)


கதைகேட்கும.; ஆனால் திருராசா ராகினிமாதிரி என்ர எந்தக்கதைக்கும் நையம் காட்டி சிரிக்கமாட்டினம், எவ்வளவு கதையும் சொல்லலாம் அம்மாவிடம் சொன்னால் அடிப்பா எண்ட பயக்கதையும் சொல்லலாம். அது ஆருக்கும் சொல்லாது. பொகவந்தலாவில இருந்து அண்ணா வேலைக்கு அனுப்பின நடராசா அம்மாவுக்கு முன்னால சின்ன பாப்பா சின்ன பாப்பா எண்டு என்னோட விளையாடுவான். ஆனா வைக்கல் பட்டறைக்கு பின்னால நிண்டு ஏதோ எல்லாம் காட்டி என்னை கூப்பிடுவான். எனக்கு காச்சல் வந்திட்டுது பிறகு அவனைக்கண்டா எனக்கு பயம் பயமா இருக்கும். அம்மா கேட்பா உன்னைக்கண்டா என்னத்துக்கு இவள் பயப்பிடுறாள்? அவனும் தெரியாத மாதிரி முகத்தைவைச்சிருப்பான் அம்மா பார்க்காத நேரம் பார்த்து கண் மடலை கையால மடக்கி சிவப்பாக்குவான். எனக்கு இன்னும் பயம்வரும். ஆனா அம்மாட்டை சொல்லவும் பயமா இருக்கும் அம்மா எனக்குத்தானே அடிப்பா. இந்த அம்மா எப்பவும் இப்பிடித்தான் ஆரும் பிழைவிட்டாலும் எனக்குத்தான் அடிப்பா. மெத்தைக்கு,தலையணிக்கு பஞ்சு மாற்றி தைக்க வாற ரெயிலர் கடைசி அறைக்குள்ள தைச்சுக்கொண்டு இருப்பார் ஒழிச்சு பிடிச்சு விளையாடேக்க சொல்லாதேங்க ரெயிலர் எண்டு சொல்லிப்போட்டு ரெயிலரின்ர காலுக்க ஒழிப்பன் மெத்தையின்ர துணியில பெரிய ஒருசதத்தை வைச்சு உருட்டி உருட்டி தைப்பார் அதை பார்க்க அவருக்கு பக்கத்திலையே நிற்பன் அப்ப எனக்கு தையல்மெசி;ன் எட்டாது நுனிக்காலை ஊண்டி எழும்பி எழும்பி பார்ப்பன் அவரும் ஏதோ எல்லாம் செய்து காட்டுவார். எல்லாவற்றையும் ஆருக்காவது சொல்லவேணும் போல இருக்கும். ஆருக்கு சொல்ல? மரங்களுக்கு மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பன். அம்மா அடிக்கிறதுக்கு பிரம்பெடுத்தால்போதும் ஓடிப்போய் கொய்யாமரத்தில ஏறியிருப்பன் எப்பிடியாவது இறங்கிவருவதானே அப்ப பார் எண்டு அம்மா சொல்லிக்கொண்டு போவா நான் கொய்யா மரத்துக்கு அம்மாவைபற்றி பொய்யெல்லாம் சொல்லுவன். பின்னால இருக்கிற ஜயனாருக்கு நேர்த்திவைப்பன் அம்மா கட்டாயம் இந்த வருஷம் வில்லூண்டி பிள்ளையார் திருவிழாவுக்கு முதல் செத்துப்போயிரவேணும். அப்பத்தான் எங்கட திருவிழாவுக்கு என்னை விரதம்பிடிக்க சொல்லமாட்டா, மூலஸ்தானத்துக்கு முன்னால இருத்தி தெற்பை போடேக்க சப்பாணம் கொட்டு எண்டு துடையில நுள்ளமாட்டா, பிறேமக்கா வீட்டுக்கு விளையாடப்போகலாம் கடவுளே. பிறகு அதே மாதிரி அம்மா கோயிலுக்கு போகேக்க விழுந்திட்டா முகமெல்லாம் காயம் எல்லாம் என்னல வந்தது நான் அழுதுகொண்டு அடிவளவுக்க ஓடிப்போய் ஜயானரே நான் மூண்டுதரம் துப்பிறன் நேர்த்தியை மறந்திடு எண்டு கெஞ்சினனான். நான் நேர்த்திவைச்சதாலதான் நீங்க விழுந்தனிங்க எண்டு அம்மாட்ட சொல்லுவமோ? அதுக்கும் அம்மா அடிச்சிட்டா. பிறகு வேப்பமரத்தில கட்டியிருக்கிற ஊஞ்சலில ஆடி ஆடி நாவல்மரத்துக்கு சொன்னனான். கதை கேட்பவர்களைவிட கதை சொல்லிக்குத்தான் அதில் இன்பம் அதிகம். இப்படியே கதைகேட்டும் கதைசொல்லியும் வாழ்ந்த காலம் எமக்கு தெரியாமலே மெல்ல மெல்ல நழுவிய எதிர்பாராத இரவொன்றில் வீட்டையும் மரங்களையும் தனியேவிட்டுவிட்டு வெளியேறிய பொழுதும் கதை சொல்ல ஆருமில்லாமல் இந்த வீடும் மரங்களும் எங்களை தேடித்தவித்திருக்கும். அவைகள் இப்பவும் காயப்பட்ட உடலோடும், மனதோடும் வயது முதிர்ந்தபடி என்னையே பார்த்து கொண்டிருந்தன. அவைகளின் குரல்கள் மாறமல் மிகுதி கதையை சொல் சொல் என கேட்டு அவதிப்படுத்திக்கொண்டிருந்தன. எதைச்சொல்வது எதிலிருந்து ஆரம்பிப்பது என்ரை அம்மாவை உங்களை எல்லாவற்றையும் தனியாக விட்டு விட்டு போன கதையையா? ஜரோப்பா தெருவெல்லாம் அகதியாக அலைந்தையா? எச்சில் கோப்பைகளையும், அவர்களின் மலசலகூடங்களை கழுவி கழுவி அழுத கதையையா எதைச்சொல்ல? எங்கு தொடங்கி எங்கு முடிக்க? அந்த பத்துவருடக்கதையை எப்படி சொல்லி முடிப்பன்……………………………? இழப்பையும் துயரங்களையும் எங்கேயாவது ஒரு மூலையில் குவித்துவிடவேண்டும் என்று எத்தனை நாளாய் காத்திருந்தனான்


வேறென்ன சொல்வேன் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கிறது. எல்லாமே வெளிச்சத்தில் நடந்து இருட்டில் மறைந்த கதைகள் இல்லை அத்தனையும் நிஜங்கள் இருளை காட்டி வெளிச்சத்தில்தானே வாழ்கின்றீர்கள் என்றார்கள் சாத்தான்கள். இல்லை என்று மனம் சொன்னாலும் ஓம் எண்டுதான் தலை தன்பாட்டில் ஆட்டியது. இல்லை என்று சொன்னவர்களின் இரத்தத்தை மண் உறிஞ்சி சிவப்பானது.
வெளியே எறிவதற்கு பெருமூச்சை தவிர வேறு எதுவும் இல்லாத நாளொன்றில் கதைகேட்ட மரங்களையும் படிகளையும் விட்டுவிட்டு வீட்டுக்கும் மண்ணுக்கும் புறமுதுகு காட்டியபடி வெளியேறிய இரத்தம்தோய்ந்த பல கால்களோடு சேர்ந்து நடந்த கால்கள் ஏழு மலை தாண்டி, ,ஏழுகடல் தாண்டி தப்பிவிட்டோம் என்ற நினைப்பு எழுந்தபொழுது பேய்கள் உலாவும் இன்னொரு தேசத்தில் விழுந்துகிடந்தேன்.

(3)

என்னை மீட்க குதிரை குளம்பொலி ஒலிக்க எந்த இளவரசனும் வரவே இல்லை. சாபத்தால் எல்லாவற்றையும் மறந்த துஷ்யந்தன்போல் ரவி வேலைநாட்களையும் டொச் மார்க்கையும் மட்டும் கணக்கு பார்த்துக்கொண்டிருந்தார் நானும் சகுந்தலையைப்போல் ஏதாவது நினைவிருக்கா என்று புலம்பியபடி சந்திக்கும் அத்தனை இலையுதிர்ந்த மரங்களோடு மனதை பகிர்ந்து குளிரில் விறைக்கும் பாதங்கள்போல் மனதும் மரத்துபோகும். ஆனாலும் இழுத்து இழுத்து நடந்தேன் எங்காயவது எங்கேயாவது ஒரு நதியின் கரைகிடைக்கும் என்ற நம்பிக்கையோடு.


அகதிவாழ்க்கை என்வீட்டுக்கு பின்புறத்தில் யாருக்கும் தெரியாத ஆற்றைத்தான் ஓடவிட்டது. போர்க்காலத்து பாழடைந்தவீடும்;, சிறுவயதில் அக்காவுக்கு அளவில்லாத சட்டையைதந்தாலே அழுது அடம்பிடிக்கும் எனக்கு முகம் அறியாத வெள்ளையர்களின் பழைய உடைகளும், மணி அடிக்கும்பொழுது வரிசையாக பிச்சைக்கு நிற்பதுபோல் நின்று வாங்கும் உணவும் அந்த ஆற்றின் நீரை அதிகப்படுத்தியது. ஏதோ இவர்களின் எச்சில் பாத்திரம் கழுவுவதற்கும் குப்பைகளை துப்பரவு செய்வதற்காகவும் சாபம்பெற்று பிறந்தவள்போல் என்னை சபித்த மந்திரவாதியும் மந்திரக்கோலை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கின்றான். நானும் சாபவிமோசனம் பெறுவதற்காய் அந்த மந்திரவாதியை தேடிக்கொண்டே இருக்கிறன். என் எல்லாக் கனவுகளும், அந்த நிலாக்கால நினைவுகளும் இந்த கடல் தாண்டிய பயணத்தில் புதைந்து போய்விடுமென நான் நினைத்தே பார்க்கவில்லை. அவைகளை நான் எங்குபோய் தேடுவேன்.? இப்படித்தான் எல்லாரும் எதையாவது தொலைத்துவிட்டு தேடிக்கொண்டே இருக்கிறார்கள். தேடல் ஒரு முடிவிலி.


தொலைந்த அத்தனையும் கிடைத்துவிட்டால். என்ரை அம்மாவின் விரலோடு கடைசிநேரம் மட்டும் இருந்த எழுத்து மோதிரம் இப்ப என்ரை விரலில அதை தடவும் போதெல்லாம் சின்ன வயதில படித்த அலாவுதீன் கதைதான் நினைவில்வரும் அதில வாறமாதிரி ஒரு பூதம்வந்து என்ன வேண்டும் எண்டு கேட்டா எல்லாவற்றையும் என்ரை அம்மாவோடு வாழ்ந்த அந்த சின்னப்பருவம், யாழ்தேவிபோல் நீண்டு கொண்டே போகும் என்ரை குஞ்சு அம்மான்ரை அந்த அழகான வீடு;, சின்ன மழைக்கும் நிறைந்து வழியும் அந்த சின்னக்கிணறு, மழைக்காலம் வந்துவிட்டால் சாமிநாதனிடம் கொப்பி தாள்களை கிழித்து நானும் அக்காவும் கால்களை கீறி கொடுத்துவிடுவோம் எனக்கு பிடித்த சிவப்பு நிறத்திலும் அக்காவுக்பிடித்த பச்சை நிறத்திலும் மிதியடி கட்டை வந்துவிடும். அதைபோட்டபடி முற்றத்தில் ஓடும் வெள்ளமெல்லாம் நடந்துதிரிவம் பிறகு இரவில கால்; கடிக்கத்தொடங்கிவிடும் அதற்கும் சாமிநாதன்தான் வேப்பம்கொட்டை புகைபோட்டு அக்காவையும் என்னையும் கதிரையில இருத்திவிட்டு புகைகாட்டுவார். எதைவேண்டாமென்று சொல்ல முடியும்? எல்லா நினைவுகளையும் என்னுள் சுமந்தபடி பனிபடர்ந்த பாதையெல்லாம் நடந்து நடந்து பாதைகள் நீண்டதே தவிர என் நினைவுகள் விழுந்து கிடக்கும் எந்த இடத்தையும் பார்க்க முடியாமல் எல்லா பாதைகளும் மூடப்பட்டுக்கிடந்தன. என் அம்மாவின் உடலை எரித்த அந்த இடம், என் நினைவுகளை தன்னுள் புதைத்து பெருமூச்சை விட்டு பின் நினைவுகள் மங்க மங்க விழித்து விழித்து என்னை தேடிய விழிகள் நிரந்தரமாக மூடிய அந்த கடைசி அறையை பார்க்கும் அந்த நிமிடங்களுக்காக உயிர்வாழலாம் என்ற என் வலிகளை எந்த கவிஞ்சானாலும் கவிவடிக்கமுடியாத வலிகள் அவை………………………………………...


வீடு செல்லல் நினைத்தே இராத நாளொன்றில் நடந்து முடிந்துவிட்டது. இனி பார்ப்பேனா என்று ஏங்கிய அத்தனையும் பார்க்கபோகின்றேன் என்ற நினைப்பு அப்போது மனதை நிறைத்து மகிழ்வை தந்தாலும் நாடு கடத்தல் அதுவும் ரவி இல்லாத பொழுதொன்றில் நடந்தேறியது அழமுடியாத அதிர்ச்சியாக இருந்தது. நானும் பிள்ளைகளும் என்ன செய்யப்போகின்றோம் ? என்ற கேள்வி மட்டும் நீண்டு கொண்டேபோனது. ஆனால் தெருக்கள் மட்டும் சுருங்கி சிறுத்துபோய் கிடந்தன. முன்பெல்லாம் பொண்ட் ரீயுட்டரிக்கும், றிமகோலுக்கும் சைக்கிளில் போகும் பொழுது ஏதோ நீண்ட தூரம் போவதுபோல் இருக்கும். செந்தில் மாஸ்ரர் பொருளாதார வாகுப்பு எடுக்க முதல் போய் சேரவேண்;டும் எண்டு எப்படி அவசரமா போனாலும் பிந்திவிடும். நான் வகுப்புக்கு வந்தாப்பிறகுதான் நீர் வருவீராக்கும் எண்டு சொல்லி அவரும் களைச்சுபோய்விடுவார். ஆனா இப்போ பஸ் நிலையத்திலிருந்து எங்கட ரோட்டுக்கு வர ஜந்து நிமிடம் போதும்போல் இருந்தது.எல்லாமே ஒரு குச்சு ஒழுங்கைபோல் இருந்தது.

(4)

எங்கு பார்த்தாலும் பச்சை மயம் இதுதான் எங்கள் ஊரின் நிறமோ என நினைக்கவைத்தது. பச்சை வாகனம், பச்சை உடை, பச்சை தொப்பி பச்சை நிறத்தை என்னை அறியாமல் மனம் வெறுக்கத்தொடங்கியது . ஏதோ ஒரு அன்னிய நாட்டுக்குள் நடப்பதுபோல் மனம் படபடத்தது. பிள்ளைகள் ஏதும் அறியாது சிரிப்போடு எல்லாவற்றையும் ரசித்தார்கள். பச்சை தொப்பிக்குள் மறைந்து கிடக்கும் அந்தக்கண்களை நேருக்கு நேராக பார்ப்பதை தவிர்த்தபடி நகர்வது சிறுவயதில் விளையாடிய கிளித்தட்டைத்தான் நினைவுபடுத்தியது. கிளி கடைப்பிள்ளையார் கோவில் ஒலிபெருக்கியிலிருந்துவரும் எம்.ஜியாரின் பாட்டை முனு முனுத்தபடி எங்களை கவனிக்காதுபோல் நிற்பார். நாங்களும் கிளியின்ர கண்களையே பார்த்தபடி மெல்ல அடுத்த கோட்டுக்குள் தாவுவோம் அப்ப பார்த்து முதுகில் ஒரு அடிவிழும் கிளியாக அடிக்கடி ரஞ்சன்தான் வருவான். அந்த வலிமாறமுதல் திரும்பவும் விட்ட இடத்தைபிடிக்க முயற்சி செய்வோம். சிறுவயது விளையாட்டுக்கள் வாழ்க்கையோடு ஒத்துநடந்தபடி இருப்பதை நினைக்க ஆச்சரியமாக இருந்தது. ஜேர்மனில் ரஞ்சனையை சந்தித்தபொழுது அவனும் இப்படித்தான் சொன்னான் ஒரு நாள் அதிகாலை எல்லோரையும் சந்தி காம்புக்குவரும்படி ஒலிபெருக்கியில் அழைத்துவிட்டு வரிசையாக நிற்கவைத்து கண்ணைகட்டிவிட்டு இழுத்து செல்லும்போது எவடம் எவடம் புளியடி புளியடி விளையாட்டு நினைவில்வந்து அந்த நிலையிலும்தான் சிரித்து அதற்கும் அடிவாங்கியதாக சொல்லிசிரித்தான்.


எனது வீடு என் பிள்ளைகள் நித்திரைகொள்ளும்வரை வாய்ஓயாது சொல்லி சொல்லி மகிழ்ந்த என்ரை அம்மான்ரவீடு தன் முகம் இழந்து நின்ற காட்சியைக்கண்ட பிள்ளைகள் ஏமாற்றத்தோடு என்னை பார்த்தார்கள். என்னால் அழமட்டும்தான் முடிந்தது. இடிபாடுகளுக்கிடையிலும், பத்தைகளுக்கிடையிலும் சிக்குண்டு கிடக்கும் என்ரை அம்மான்ர வீடும் என்னை பரிதாபமாக பார்த்தது. சிலநேரம் வீட்டுக்கும் என்னை அடையாளம் தெரியேல்லையோ? இல்லையே சந்தியில வாசுகி கண்டிட்டு நான் அப்பிடியே இருக்கிறன் எண்டுதானே சொன்னவள். வீடு என்னோடு கதைத்தது. அதன் குரல் மட்டும் மாறமல் அப்படியே இருந்தது. வீட்டிடம் கேட்பதற்கு நிறைய கதைகள் இருந்தன என்ரை அம்மாவை பற்றின கதைகள் நிறைந்துபோய் கிடந்தன. இவைகளுக்குள்ள இருந்து இந்த வீட்டை எப்படி வெளியில எடுக்கப்போகிறன்? முன்பும் இப்படித்தான் சிரித்த முகங்களோடு இருந்த எங்கட தெரு வீடுகளின் மேல் மரணநிழல்கள் படரும் நிலை வந்தபோது உயிர்களை பிடித்தபடி சமைத்த உணவு ஆறுமுன் திறந்த கதவுகளை மூடமறந்து ஓடினோம் எம்முதுகளின் பின் அன்னிய மொழிகளின் கூக்குரலும் எம் மொழிகளின் அலறலும் கேட்டபடி இருந்தது விரைவாக ஓடினோம். துயர்பெருகி நெருப்பொன்று மனதினுள் எழ ஒரு கணம் மூச்சு வாங்க முகங்களை திருப்பிய பொழுது ஓலம் எழும்பிய குரல்களோடு கரும்புகையும் சேர்ந்து பரவின அக்காட்சி கண்களில் இப்பவும் விரிந்துகொண்டே போனது. பின் ஒரு நாள் வீட்டுக்கு திரும்பிய பொழுது வீட்டைப்பார்த்து அம்மா அழுத அழுகை. எல்லா நினைவுகளும் அம்புலிமாமாவில் வாசித்த சிந்து பாத்கதையில்வந்த முதுகைவிட்டு இறங்காத கிழவன் மாதிரி எல்லாம் ………..


நாலுபக்கமும் மதில்களும் வேலிகளும் உடைத்தும் வெட்டியும் விழுந்து கிடந்தன. ராகினிவீடும், லலிதாவீடும், பின்வீட்டு கமலராணிவீடும் ஒரே வளவுக்குள் இருப்பதுபோல் எந்த வளவுக்கும் எல்லையும் இல்லை. பொட்டுக்களும் இல்லை. முன்பெல்லாம் வேலிக்கு பொட்டுவைப்பது ஒரு உறவுப்பாலம்போல இருந்தது. எங்கட வீட்டு பொட்டால் புகுந்து ராகினிவீட்டுக்குபோய் பிறகு ராகினிவீட்டு பொட்டால்போனால் பின்வீட்டு ராணி அக்காவீட்டுக்குபோய் ஆஸ்பத்திரி ரோட்டுக்கு போயிடலாம். ஆரு போனாலும் ஆரது எண்டு கேட்பினம் பெயர் சொல்லவே தேவையில்லை அது நான் எண்டால் காணும் அம்மாவும் ஆ பரமேஸ்வரியே எண்டு கேட்பா நாங்களும் பலகைகட்டையை பிள்ளை எண்டு தூக்கிக்கொண்டு பொட்டுக்குள்ளாலையே போய்வருவம். இரவு படுக்கப்போவதற்கு முதல் சரியா எட்டுமணிக்கு ராகினி, கமலா, நாளாயினி, சீனி அக்கா நான் எல்லாரும் அந்தப்படியில பொன்னுக்கோனுக்காக காத்திருப்பம். பெயரைப்போலவே வித்தியமான மனிதர். தன்ரை படத்துக்கு சிதம்பரத்தம் பூவைத்து குற்றாயினவார் எண்ட தேவரத்தை பாடுவார். இரவு எங்களுக்கு கதைசொல்லி அவர்தான். எப்பபார்த்தாலும் ஆனைக்கோட்டைக்கு வில்லுவண்டில் பூட்டி நல்லெண்ணை வாங்கபோற கதையைத்தான் மாற்றி மாற்றி சொல்லுவார். அப்பவெல்லாம் ஆனைக்கோட்டைக்கு போய்வர இரண்டு நாள் பிடிக்குமாம்


(5)

ஏன் பொன்னுக்கோன் நாங்கள் அத்தானின்ட காரில மானிப்பாய்க்கு போகேக்க ஆனைக்கோட்டை டக்கெண்டு வருகிது எண்டு கேட்டா இப்பமாதிரி றோட்டே அப்ப இருந்தது சரி என்னத்தில விட்டனான் சரியா பன்னிரண்டு மணிக்கு சலங்கை சத்தத்தோட மோகினி பிசாசு வரும.; இப்ப அக்கா நான் ராகினி கமலா எல்லாரும் நெருக்கி இருப்பம். நான் உடன வேட்டியை களற்றி தலைப்பாகை கட்டினா மோகினி பிசாசு மறைஞ்சிடும் எண்டு சொல்லி முடிப்பார் .நாங்க வெட்கத்தில சட்டையால முகத்தை முடுவம். எத்தனை தரம் கேட்டாலும் பயம்தரும் அலுக்காத கதை அது. ஆனா கதை முடிய அம்மாவை பின் லையிற்றைபோட்டிட்டு பொட்டுக்குகிட்ட வாங்கோ எண்டு அழுது கொண்டு நிற்பம். றோட்டால போற வேலையும இல்லை. அதுவே பிறகு ஆமிக்கு பிடிபடாமல் திரியிறதுக்கும் நல்ல விஷயமா இருந்தது. அடிவளவு வேலி அடைக்கிற நாளெல்லாம் ராகினியின்ர அம்மா வேலிஅடைக்கிற திருநாவுக்கரசோடே சேர்ந்து கதியாலை கொஞ்சம் கொஞசமா எங்கட வளவுக்க வைப்பா அப்ப அக்காவும் நானும் அம்மாட்ட ஓடிப்போய் சொல்லுவம். அம்மா சொன்னவ மகேஷ்போகேக்க கொண்டா போகப்போறா. இப்ப வீட்டை வித்துப்போட்டு ராகினிவீடு கனடாவுக்கு போயிட்டினம். அமுதக்காபிரான்ஸ்சுக்குபோயிட்டா. கமலராணிவீடு எங்க போயிருப்பினம்.? அவையின்ர கிணத்துக்கட்டு வெறுமையாக கிடந்தது. எல்லா முகங்களையும் அந்தந்த இடத்தில் நிற்கவைத்து பார்க்க சிரிப்புத்தான் வந்தது. முன்பு சரியா ஏழுமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து தொடங்க போடுற றேடியோ இரவின்மடியில் மட்டும் பாடிக்கொண்டே இருக்கும். பொங்கும் பூம்புனல் தொடங்க நாங்களும் வீட்டுக்கும் கிணற்றடிக்குமாய் ஓடத்தொடங்குவம். நாங்கள் குளிக்கிறதையும், முகம் கழுவுறதையும் பார்க்கிறதுக்காக இந்தக்கிணற்றுகட்டில ஏறிநிற்கிற கண்ணன், முகுந்தன் ஆரையும் காணவே இல்லை எந்த ஜரோப்பாதெருவெல்லாம் அகதியாய் அலைகிறார்களோ? ராகினிவீட்டிலும் புதுமுகங்கள் எல்லா உறவுகளும் தொலைந்திருந்த ஊரில் நிழலைக்கண்டால் கூட பயமாக இருந்தது. ஆனால் ஒழுங்கைக்குள்ள தனந்திரனைம், வாசுகியையும் கண்டவுடன் சந்தோஷமாக இருந்தது. தனேந்திரன் எல்லாவற்றாலும் மாறியிருந்தாலும் குதிக்கால் நிலத்தில் படாமல் இப்பவும் தொங்கி தொங்கி நடந்துதிரிவதை பார்க்கும் பொழுதெல்லாம் சின்ன வயது நினைவுகள்எல்லா இடங்களிலும் விதைத்துபோய் கிடந்தன. எத்தனை நினைவுகள் எவ்வளவு சந்தோஷம் நிறைந்த வாழ்க்கை அது. எல்லாத்தையும் இழந்துவிட்டோமா அல்லது தொலைத்துவிட்டு தேடித்திரிகின்றோமா? ராகினி வீட்டில் புதுக்குழந்தைகள் நாங்கள் விளையாடித்திரிந்த அதே இடத்தில் பிளேன்கோடு கீறி றைட்டோ எண்டு கேட்க என்னுடைய பிள்ளைகள் முள்ளி (அவுட்) எண்டார்கள்.


வாழ்க்கையில் பல பக்கங்களை கறையான் அரித்துவிட்டிருந்தது ஆனாலும் அவற்றை எடுத்து தூசிதட்டி பார்க்க மனம் தூண்டிக்கொண்டே இருந்தது. அடிவளவில் போய் நின்றால் பண்ணை பாலத்தில் வாகனங்கள் போகும் பொழுது ஒரு சத்தம் கேட்கும் அம்மாவோடு படுத்திருந்து எத்தனை வாகனம் போனது எண்டு எண்ணியபடியே நித்திரை ஆகிவிடுவேன். அந்த சத்தத்தை இப்ப இரவில கேட்க பயமாக இருந்தது. வெளிநாட்டில் பத்துமணிக்கு பிறகு வீடுகளுக்குள் நடந்தாலே கீழ் வீட்டுக்கு இடைஞ்சல்வந்துவிடும் எண்ட பயத்தில் முயல்மாதிரி பூனைமாதிரி நடக்கும்பொழுதெல்லாம் இரவிரவாக கடைப்பிள்ளையார் கோவில் திருவிழாவில் சங்கர் ஜயரின் பிள்ளைகள் மருதமலை மாமணியே முருகையா, யாருக்காக இது யாருக்காக எண்டும் பாடிறது யாழ்ப்பாணம் முழுக்க கேட்கும். இந்திரா, கலா பிறேமக்கா எல்லாரும் இப்ப பிள்ளையார் கோவில் படியில இருந்து நாடியில கையை ஊண்டிக்கொண்டு கேட்டுக்கொண்டு இருப்பினம். சிக் இந்த ஜயா என்னை விடமாட்டார் எண்டு கவலைப்பட்டுக்கொண்டு படுத்திருக்க விடிஞ்சிடும். திருவிழா இல்லாத நாளில ஆடிக்காத்துக்கு கற்குளத்தில விண்கட்டி போட்டிக்கு பறக்கவிடுற எட்டுமுள பட்டம், பாம்பு பட்டங்களின்ற விண்சத்தம் கேட்டபடி இருக்கும் ஒண்டுமே இல்லாட்டி ஆட்டுக்காற கோபலும் சறோவும் சவுந்தர்ராஜன், சுசிலா மாதிரி மாறி மாறி பாட்டு பாடுவினம் இவைகளை கேட்டபடிதான் அந்த தெருவே நித்திரை கொள்ளும். கொட்டடி நமச்சிவாய பள்ளிக்கூடத்தில மணிச்சத்தம், தேவாரம் பாடுறசத்தம், பாண்வருகிது பாண்வருகிது எண்டு குழந்தைகளும் காகங்களும் கத்தி கரையும் எந்த சத்தத்தையும் காணவே இல்லை. எல்லா குழந்தைகளின் சங்கீத குரல்களெல்லாம் எங்கேயோ தொலைந்துபோயிருந்தன வெறுமை எங்கு பார்த்தாலும் வெறுமையும் தூரோகமும்.பரந்து போய்கிடந்தன. மனிதர்கள் மட்டுமா எங்களுக்கு தூரோகம் செய்கிறார்கள். நாங்கள் நம்பியிருந்த வில்லூண்டி பிள்ளையாரும், ஜயானரும், வைரவரும், நல்லூர் முருகனும் சேர்ந்து தூரோகம் செய்துவிட்டார்கள். கடிதம் எழுதும்போது கூட ஊசிமயம் பிள்ளையார் துணை எண்டு எல்லாவற்றுக்கும் அவர்கள்தான் துணையெண்டு நம்பியிருந்தோம் எல்லாரும் சோந்து நம்பிக்கை தூரோகம் செய்துவிட்டார்கள். எங்கேயாவது ஒரு மூலையில் போயிருந்து அழவேண்டும்போல் இருந்தது. எந்த மூலையை பார்த்தாலும் ஏதோஒரு நினைவு அல்லது ஏதோ ஒரு குரல் கேள்வி கேட்டபடியே இருந்தது. றைட்டோ பிள்ளைகள் விளையாடிபடியே இருந்தார்கள்.

(6)

எப்போதும் என் கனவுகளை ஏதாவது ஒரு துப்பாக்கி சத்தம் கலைத்தபடியே இருக்கும். சத்தத்தை கேட்டவுடன் நெஞ்சு படபடத்தது. ஜயோ என்ரை பிள்ளைகள் எண்டபடி ஓடினேன் பக்கத்து வீட்;டு முற்றத்தில் ஒரு குழந்தைகளையும் காணவில்லை. இவர்கள் மட்டும் கீழே கிடந்த குருவியை பார்த்தபடி இருந்தார்கள். எனக்கு என்ன செய்வது எண்டே தெரியவில்லை. என்னைக்கண்டவுடன் அவர்கள் அழத்தொடங்கிவிட்டாhகள். அம்மா அம்மா அந்த மாமா அவர்தான் அம்மா இந்த போகலை ( பறவை) சுட்டவர். எனக்கு எரிச்சலாக இருந்தது. இவனை என்ர பிள்ளைகள் மாமா எண்டு நினைக்குதுகளே. கடவுளே இவர்களைப்பற்றி எதுவும் அறியாத இந்தக்குழந்தைகளுக்கு எப்படி சொல்லுவன்? எந்த மொழியில் சொல்லி விளங்கப்படுத்துவன்? இரவுமுழுவதும் பிள்ளைகள் அந்தக்குருவியைப்பற்றியே கதைத்தபடி இருந்தார்கள். அது இன்னொரு குருவியோட சேர்ந்து எங்கட மாமரத்தில வீடு கட்டிக்கொண்டிருந்ததாக சங்கீத சொல்லிக்கொண்டே இருந்தாள். பாவம் அது ஒவ்வொரு தடியாய் கொண்டுவந்;தது நானும் பார்த்தனான் எண்டு சுமி சொல்லேக்க அவளின்ர கண்கள் கலங்கியிருந்தன. விடிந்ததும் ஒண்டுமே நடக்காததுபோல எங்கட செவ்விளனி மரத்தில ஓலைபிடிங்கி நாக்கு வழித்துக்கொண்டிருந்தான். இவன்தான் பொல்லாதவனா இருக்கவேணும். ஜயாவும் சாமிநாதனும் இந்த மரங்களை நடவும் வளாக்கவும் பட்டபாடு எவ்வளவு குப்பைகள் சாணி எண்டு உரம்போட்டு பார்த்து பார்த்து வளர்த்தவை. இவன் ஏதோ தன்ரை முப்பாட்டன் நட்ட மரம்மாதிரியெல்லோ நினைக்கிறான். ஒரு நாளைக்கு ஒரு ஓலையெண்டு பார்த்தாலும் முப்பது ஓலையை அனியாயமாக்கிறான். மரத்தை மட்டுமல்ல எங்கட எல்லாம் தங்களுடையது எண்டுதானே சொல்லினம் இவன் நாக்கு வழிக்கிற மாதிரி மனதில இருக்கிற அழுக்கையும் வழிசசால் எவ்வளவு நல்லா இருக்கும். மற்றவன் நான் பார்க்கிற நேரமெல்லாம் மெல்லிசா சிரிப்பான். பிள்ளைகளோட கையைக்காட்டி கையக்காட்டி கதைப்பான். இந்தப்பிள்ளைகளுக்கு சொன்னாலும் விளங்குதில்லை. அந்த சனியன்களுக்கு கிட்ட போகவேண்டாம் எண்டு சொன்னாலும் கேட்கிதுகள் இல்லை. அண்டைக்கும் இப்பிடித்தான்; முற்றவெளி முனியப்பர்கோவில், நூல்நிலையம், நான்படித்த றிமகோல், பூங்கா எண்டு ஒவ்வொன்றா காட்டிக்கொண்டு வரும் பொழுது திடீரென்று எப்படி முளைத்து வந்தார்களோ பச்சை பிசாசுகள் எலும்புமட்டுமே உள்ள உடம்பை அதுவும் இல்லாததுபோல் வளைத்தும் மடித்தும் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். மனிதர்களின் மறுபக்கத்தை அறியாத பிள்ளைகள் எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கவேண்டும் எண்டு அடம்பிடித்தார்கள். வீட்டுக்குபோனாலும் தெரியாத மனிதர்கள் எதையும் பகிர்ந்து கொள்ள பயமாக இருந்தது. கடவுளே ரவியும் இல்லாமல் இந்தப்பிள்ளைகளோட நான் என்ன செய்யப்போகிறன்.? இண்டைக்கு எப்பிடியும் இதைப்பற்றி ரவியோட கதைக்கவேணும்.

பயம்மட்டுமே நிறைந்த வாழ்க்கை இது என் வீடுதானா? எண்ட சந்தேகத்தையும் எழுப்பிக்கொண்டிருந்தது. என்னோடையே எப்பவும் வாழ்ந்து கொண்டிருக்கும் என்ரை தொலைந்துபோன வீட்டை நான் தேடிக்கொண்டே இருந்தன். எல்லா வீட்டின் மூடின கதவுகளும் என்னை பயப்படுத்திக்கொண்டே இருந்தன. வெளிநாட்டிலும் மூடின கதவுகளை பார்க்கும் பொழுதெல்லாம் சின்னவயதில் படித்த சுகாதார புத்தகத்தில் காலை எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு மூடின யன்னல்களை திறந்தபடி முதுகாட்டிய ஒரு அம்மாவின் படம் நினைவில் வரும். இப்படித்தான் எதை பார்த்தாலும், கேட்டாலும் எல்லா நினைவுகளும் ஓடிவந்து முன்னுக்கு நிற்கும். எல்லாத்தையும் மறக்கவேணும் மற மற எண்டு மனம் சொன்னாலும் எதை மறக்கிறது? இந்த வீட்டில என்ரை அம்மாவோடு வாழ்ந்த வாழ்க்கையையா ? அல்லது ஜேர்மனியில் வாழ்ந்த வாழ்க்கையையா? எதை மறக்கிறது எல்லா நினைவுகளும் என்னை துண்டு துண்டாக உடைத்தெறிந்து கொண்டிருப்பதை தவிர வேறு எதுவும் செய்வதாக தெரியவில்லை. வாசுகியோடு சோந்து கொட்டடி சந்தியிலிருந்து பொன்னுத்துரை வீடுமட்டும் நடந்து ஒவ்வொரு வீட்டையும் பார்த்தபொழுது இந்த வீடுகளெல்லாம் எத்தனை தலைமுறைகளின் சிரித்த முகங்களை மட்டும் பார்த்து பழக்கப்பட்ட வீடுகள். இது எங்கட மாமிவீடு;, இதுவும் மாமிவீடு இது ஜெயாஅண்ணன் வீடு, முன்வீட்டு அன்ரி வீடு ரோசாப்பூவை பிச்சா அடிப்பன் எண்டு கத்திற சுப்பிரமணி அண்ணையின்ர குரலும். த பலன்ஸ் சீற் எண்டு இங்கையும் அங்கையும் நடக்கிற மீனாட்சி ரீயூட்டரி சத்திய மூர்த்தி மாஸ்ரின் எல்லா குரல்களும் அங்கேயே உறைந்து போய் கிடந்தன.


(7)

எந்த மூலையை பார்த்தாலும் ஏதாவது ஒரு நினைவு எழுந்தபடியே இருந்தன. சந்தியில் இருக்கும் கோடலிகந்தையர் வீட்டு அத்திமரம் முன்புபோலவே அத்திக்காய்களை றோட்டெல்லாம் பரப்பிவிட்டிருந்தது. லைடன் காமன்ஸ் பனியனும் கால்மேசும் அவித்த தண்ணி குளோறின் மணத்தோட ஓடின வாயக்கால் வறண்டுபோய் கிடந்தது. குளோறினைப்பற்றி விளங்காமல் கொட்டடி பள்ளிக்கூடம் விட்டுவரும்பொழுதெல்லாம் அந்த தண்ணீருக்குள் கால் அளைந்து விளையாடமல் வீட்டுக்கு வருவதே இல்லை. பள்ளிக்கூடத்து மூலையில அந்தமாமரம் அப்படியே நிண்டது. அந்த மரத்துக்கு கீழே சிவஞர்னம் ரீச்சர் கதிரைபோட்டிருந்து கொண்டு கேள்வி கேட்பா நாங்கள் மாமரத்தில இருந்து குருவிச்சை விழுமா எண்டு அண்ணாந்து பார்த்துக்கொண்டிருப்பம். இங்கதான் இதிலதான் கொடிவிழாவுக்கு கொடியேற்றி பத்துசதத்திற்கு கொடிவாங்கி சட்டையில குத்திறதும். அதோடசேர்த்து அம்மா சட்டையை தோய்த்தற்கு அழுத அழுகையையும் இப்பொழுது நினைக்க சிரிப்புத்தான் வந்தது. வாசுகி எனக்கு மனோரஞ்சிதப்பூவை பிடிங்கி கைக்குள்வைத்தாள் என்ன பழம் ? எண்டு கேட்டாள் ம் பாலப்பழம் கண்ணை மூடி பாலப்பழத்தை நினைத்தேன் என்ன ஆச்சரியம் அதே மணம் மணக்கத்துடங்கியது. பிறகு மாம்பழம் இந்த மனோரஞ்சிதப்பூவை எப்பவும் கைக்குள்ளவைத்திருக்கிற கனகாம்பி, யோகாம்பி அவையின்ர அண்ணா எல்லாரும் எங்க வாசுகி இருக்கினம்? அவை பிரான்ஸ்சில எண்டு நினைக்கிறன். சீனிவாசகம்றோட், ஆஸ்பத்திரிறோட் எண்ட விலாசம் எல்லாம் மாறி பிரான்ஸ், ஜேர்மன் ,லண்டன் எண்டு மாறிப்போய் கிடந்தது. எல்லாமே மாறித்தான் போய்விட்டது. ஆனால் எந்த மாற்றமும் இயற்கையாக நடக்கவில்லை. அடுத்தவீட்டில் எது நடந்தாலும் எதுவுமே நடவாதமாதிரி மௌனமாக இருப்பவர்களை பார்க்கும் போது எரிச்சல் எரிச்சலாக வந்தது. மிகச்சிறுமியாக இருந்தபொழுது லேக்கவுசில் வேலைபார்க்கும் யோகாம்பியின் அண்ணா ஒரு நாள் அழுது கொண்டு இருந்தார் அப்பொழுதுதான் கெந்தி கெந்தி சைக்கிள்பழகும் காலம். உங்கட அண்ணா ஏன் அழுகிறார்? அண்ணாத்துரை செத்துப்போயிட்டாராம். அவர் உங்கட புங்குடுதீவில இருக்கிற சொந்தக்காரரா? இல்லை இந்தியாவில இருக்கிறவராம். அதுக்கேன் உங்கட அண்ணா அழுகிறார்? அழுதோம் யார் செத்தாலும் அழுதோம் நாய் செத்தாலும் அழுவோம், காகம் செத்தாலும் பாவம் எண்டுதான் சொல்லுவம். எல்லாம் மாறித்தான் போயிற்றுது வாசுகி. அவள் ஏனோ மௌனமாக வானத்தை பார்த்தாள்.


வரும் வழியில் பச்சை பிசாசுகளின் கூட்டம் தெருவை மறித்து நின்றது. பிள்ளைகள் இப்போது என்கைகளை இறுக்கி பிடிக்கத்தொடங்கிவிட்டார்கள். நானும் வாசுகியின் கையை இறுகபிடித்தேன். அவளின்கை ஈரமாகிக்கொண்டு வந்தது. எலும்புக்கூடுகள் அடுக்கப்பட்டுக்கிடந்தது இதில் தன்டைய கணவரினது எதுவாக இருக்கும் என்று தடுமாறிக்கொண்டிருந்த பெண்ணைப்பார்க பாவமாக இருந்தது. இவையள் எப்பிடி செத்திருப்பினம். சாப்பிட்ட சோறு தொண்டைக்குள்ள இறங்க முதல் இழுத்திட்டு போய்சுட்டிருப்பாங்கள், இல்லாட்டி போயிற்றுவாறன் எண்டு தானும் நம்பி மனைவியையும் நம்பவைத்திட்டு போகேக்க, விட்டிட்டு போன வீட்டை பார்க்க வரேக்க ஏதோ ஒன்று நடக்கேக்க எல்லாவற்றையும் பார்த்தபொழுது தலை சுற்றியது. அழுகை அழுகை எங்கு பார்த்தாலும் அழுகை. நெஞ்சு படக் படக் என்று அடிக்கும் சத்தம் வெளியில் கேட்கும்போல இருந்தது. சரி போகலாம் எண்டு சொல்லும் மட்டும் பயம். பிள்ளைகளின் கண்களில் சிரிப்பு மறைந்து மெல்ல பயம் படரத்தொடங்கிவிட்டது. சிலவேளைகளில் போகச்சொல்லிவிட்டு கடவுளே எண்டு நினைத்து ஒரு அடிவைப்பதற்கிடையில் திரும்பவும் கூப்பிடும்போது முன்பு நானும் அக்காவும் தும்பிபிடிப்பதற்காக பாம்ஸ் மரத்துக்கு அடியில பதுங்கியிருப்பம். பிறகு அதின்ர வாலில நூலை மெல்லிசா கட்டியிற்று பறக்கவிடுவம். அதுவும் புழுகத்தோட பறக்கும். கொஞ்சத்தூரம் பறக்கவிட்டிட்டு திரும்பவும் இழுப்பம். சில நேரங்களில விரலில ஊண்டி கடிச்சிட்டு நூலோடேயே பறந்துபோயிடும். அந்த நினைவுதான் வந்தது. இன்பம் மட்டுமே நிறைந்து கிடந்த பெருவெளிகளின் ஒவ்வொரு துகள்களுக்குள்ளும் எத்தனையோ கதைகள் புதையுண்டுபோய் கிடந்தன.


திரும்பவும் மாமரத்தில் குருவிகளின் சத்தம் கேட்கத்தொடங்கிவிட்டது. சங்கீதாவுக்கும் சுமிக்கும் ஒரே சந்தோஷம். அம்மா அம்மா அங்க பாருங்க திரும்ப கூடு கட்டிட்டினம். பிள்ளைகளின் சிரிப்பையும் கூட்டையும் முறைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தான். அவனை பார்க்கும் பொழுதெல்லாம் ஏதோ ஒரு பயமும் படபடப்பும் வந்துகொண்டே இருக்கும். யாரோடு இதைப்பற்றி கதைப்பது. வாசுகி வீட்டுக்கு போனபின் பழையபடி தனிமை பயம் ரவியோடு கதைக்கவேண்டும். ஆமிக்காரர்ஏன் நெடுக எங்களை மறிக்கினம்?, எலும்புகூடுகளை பார்த்து அவைஏன் அழுதவை? நித்திரை கொள்ளும் மட்டும் கேள்விகளை அடுக்கியபடியே இருந்தாள் சுமி அந்தக்குருவிகளுக்கு பெயரும் வைத்துவிட்டாள். அப்பாட்டை சொல்லி குருவிகளுக்கு சாப்பாடு அனுப்ப சொல்லவேணும் சங்கீதா ஏதோயோசித்தபடி இருந்தாள். அவளிடம் சின்னதா ஏதோ மாற்றம் தெரிந்தது. ; எப்ப அம்மா விடியும்? குருவிகளை பார்க்கவேணும் எண்டபடீயே சுமி நித்திரை கொண்டுவிட்டாள்.


(8)

மரணம் பற்றிய கற்பனையும் எதிர்பார்ப்பும் எவ்வளவு பயங்கரமானது என்பதை அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். ஏதோ நடக்கப்போகிறது நடக்கப்போகிறது எண்டு மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. சங்கீதாவை பார்த்தேன் அழுதுகொண்டு படுத்திருந்தாள். ஏன் குஞ்சு அழுகிறீங்க எண்டு கேட்டவுடன் என் நெஞ்சோடு தன் முகத்தை வைத்து இறுக்கிகட்டிப்பிடித்தாள் அவளின் உடம்பு நடுங்கியபடி இருந்தது. கடவுளே நான் என்ன செய்ய ? பயத்தை வெளிக்காட்டாமல் தடவிக்கொண்டிருந்தேன். எப்ப அம்மா நாங்கள் அப்பாட்டை போறது? சூல ( பாடசாலை ) தொடங்கப்போகிது. கேள்வி தொங்கியபடி நின்றது.



வெளியில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகள் கத்திக்கொண்டு வந்து என்னை கட்டிப்பிடித்து அழுதார்கள். எனக்கு என்ன செய்வது எண்டே தெரியவில்லை. . என்ன என்ன குஞ்சுகள். அம்மா அம்மா போகல் எண்டு விக்கினாள் சுமி. அங்கே அந்தக்குருவிகள் மாமரத்துக்கு கீழே அண்ணாந்து படுத்துக்கிடந்தன. பார்த்து பார்த்து நம்பிக்கையோடு கட்டின அந்தக்கூடும் பிய்த்து எறியப்பட்டு கிடந்தது. நான் அவர்களை பார்த்தபொழுது அவனின் சிரிப்பு எனக்கு பலதையும் விளங்கப்படுத்தியது. மற்ற ஆமி என்னை பார்ப்பதை தவிர்த்துக்கொண்டிருந்தான் பக்கத்துவீட்டுப்பிள்ளைகள் விளையாடத்தொடங்கிவிட்டார்கள். சங்கீதா என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். குஞ்சு அப்பாவோட கதைச்சனான். என்ன என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தாள். அப்பாவுக்கு லண்டனில் எல்லாம் சரிவந்திட்டுதாம்.

எங்கட ஜேர்மனி?

எங்கட ஜேர்மனி அவளின் கேள்வி என்னை என்னவோ செய்தது.

அம்மா எண்டாள்.

ம்

சொல்லுங்கோ

நாளைக்கு நாங்கள் கொழும்புக்கு போறம்.

ஏன்?

அப்பாட்டை போறம். ராகினி வீட்டில் பிள்ளைகள் ரைட்டோ ?எண்டு சத்தமாக கேட்டார்கள். சுமி விறாந்தை படியிலிருக்கும் தூணைக்கட்டிப்பிடித்துக்கொண்டே முள்ளி என்றாள் இன்னும் சத்தமாக.

2008
posted by சாந்தினி வரதராஜன் at 5:38 PM 1 comments

இழப்பின் இருப்பு



உதிர்ந்த சிறகுகளை
என்னால்
சேகரிக்க முடியவில்லை
மறுபடியும் முளைக்கும்
என்ற நம்பிக்கையும்
உயிரிழந்து நிற்கின்றது.
என்னிலிருந்து உதிர்ந்த
வார்த்தைகளும்
காற்றின் கால்களுக்கிடையில்
சிக்கி தவிக்கின்றது
உதிர்ந்த வார்த்தைகளைவிட
மௌனமாக விழுங்கப்பட்டவைகள்
ஏராளம் ஏராளம்
அத்தனையும் ஒரு கலவையாகி
இருண்ட வெளியில்
ஒரு புள்ளியாய்
விழுந்து கிடக்கின்றது
ஒரு நட்சத்திர ஒளி சிதறி
பரவும்
பொழுதுக்காய்.
posted by சாந்தினி வரதராஜன் at 5:26 PM 0 comments

உறங்கா நிலையில் இங்கும் முதலைகள்


என்னையே பார்த்துக் கொண்டிருந்த வானம்
எப்போதும்
வெடித்து சிதறலாம்
எண்ணி எண்ணி களைத்த நட்சத்திரங்களும்
ஒவ்வொன்றாய்
உதிர்ந்து விழலாம்.
இப்போதெல்லாம் என் கண்களும் மூளையும்
எல்லாவற்றையும் பரிசோதித்தபடிதான்
திடீர் திருப்பங்களை சந்திக்க
என் கால்களும் தயங்குகின்றன
சிலந்திகளோ வலைகளை பின்னியபடி
காத்துக்கிடக்கின்றன
பல்லிகளும் சிலந்திகளுக்காய்
தவம் கிடக்கின்றன
எதாவது இரைகிடைக்கும்
என்ற நம்பிக்கையில்
எல்லா முகங்களும் வாய்களை
மூடுவதே இல்லை
புலம் பெயர்ந்த மண்ணிலும்.



posted by சாந்தினி வரதராஜன் at 5:15 PM 0 comments

மீண்டும் துளிர்க்கும்



மௌனமே வாழ்க்கையாக
வார்த்தைகள் இன்றி
நிசப்தத்தில் கரைகிறது
வாழ்க்கை


சிரிப்பை தொலைத்த முகங்கள்
சத்தமின்றி அழுதிடும் விழிகள்
இடிந்த கட்டிடங்கள்
உடைந்த மனங்கள்
பறவைகள் கூட
மௌனம் காக்கின்றன
ஆனால்
மனங்கள் மட்டும்
எப்போதும் எதையோ தேடியபடி!


தொலைந்துபோன வாழ்க்கையையா?
இல்லை
மலரப்போகும் வசந்தத்தையா?
எதை தேடுகின்றன?
அந்த இனிய வசந்தத்தை
கோரப்பற்களாலும்
அசுர கால்களாலும்
அழித்து சிதைத்த
அரக்கர்களையா?
எதை தேடுகின்றன
எப்போதும் எதையோ தேடியபடி!


ஏல்லாமே முடிந்துபோக
பரிதியும் மதியும்மட்டும்
அடிக்கடி வந்து வேவுபார்க்கின்றன.


ஆனாலும்
ஒரு நம்பிக்கை
இலையுதிர் காலத்தில்
இழந்து நிற்கும் மரங்களெல்லாம்
மீண்டும் துளிர்ப்புக்காய்
காத்திருப்பதுபோல
நாமும்.

posted by சாந்தினி வரதராஜன் at 5:00 PM 0 comments

சாய்மனை கதிரை


.ஜந்துமணிக்கு எழும்பி வேலை வேலையென ஓடும் ரவியை நினைக்க பாவமாக இருந்தது.

அங்கும் அப்படித்தான் ஐந்து மணிக்கு நல்லூர் மணியும் பெருமாள் கோவில் ஓலி பெருக்கியும் நித்திரையை குழப்பிக்கொண்டிருக்கும். .அம்மாவும் சுப்பிரபாதத்தை முனுமுனுத்தபடி பூப்பறிப்பதில் ஒரு கண்ணும் எங்களை எழுப்புவதில் இன்னுமொரு கண்ணுமாக இருப்பா.

படிக்கிற பிள்ளைகள் இப்படி விடிய விடிய நித்திரை கொண்டால் என்ன ஆகும் ?

அம்மா இந்த முறையும் அக்காவை பெயிலாவினம். என குமார் அம்மாவுக்கு பக்கவாத்தியம்

வாசிப்பான்.

ஓமடா குமார் உனக்கிருக்கிற அக்கறையில ஒரு துளிகூட இதுகளுக்கு இல்லை.

இவன் குமாருக்கு விடியட்டும் ஏதவாது ஒரு சாட்டுவைத்து தலையில இறுக்கி குட்டவேணும் அக்கா புறு புறுத்தபடி போர்வையை இழுத்து மூடினா.

பிள்ளைகள் இப்பவில்லூன்றி பிள்ளையார் கோவில் திருவெம்பாகாரர் வரப்போகினம். நான் ஒருத்தி எத்தனை வேலையெண்டு செய்யிறது. உங்கட வயதுப்பிள்ளைகள்தானே குளிருக்கையும் எழும்பி வருகிதுகள். . நீங்களும் இருக்கிறீங்கள் படிக்கிறதும் இல்லை பக்தியும் இல்லை. அம்மா வழமையான புலம்பலை தொடரத் தொடங்கினா.

ஓம் என்னோட படிக்கிற பெட்டையளை எனக்கு தெரியும். அவையள் வடை, சுண்டல் சாப்பிடறதுக்குதான் வறவை எண்டு அவையலே எனக்கு சொல்லி சிரிச்சிரிக்கினம். உங்களுக்கு எங்களை பேசத்தான் தெரியும்.

மற்றவையில நொட்டை சொல்லிறதுக்கு முன்னுக்கு நில்லு. இவன் குமாரை பார் அவனும் சின்னபெடியன்தானே அவனுக்கு இருக்கிற பொறுப்பில கொஞ்சமாவது உங்களுக்கு இருக்கோ?

அம்மா அவனுக்க வேலைசெய்யிறதுதான் அவன்ர வேலை

அப்ப உங்களுக்கு என்ன வேலை ?

சும்மா இருந்து சாப்பிடுறது எங்கட வேலை.

அம்மா வழமைபோல் அக்காவின் காதைதிருக ஐயோஅம்மா நுள்ளாதேங்கோ என கத்தும் அக்காவை பார்க்க பாவமாக இருக்கும். அம்மாவும் அக்காவை விடாமல்

எழும்பு எழும்பி முகத்தை கழுவி மயில் கம்பளத்தை எடுத்து முன் விறாந்தையில விரிச்சிட்டு பிறகு படி.

ஏன் நான்மட்டும் எழும்பவேணும் ?

வேறஆர் உன்னோட எழும்பவேணும் ?

ஏன் சுகந்தியும்தான் எனக்கூறி என்னை மறந்திருந்த அம்மாவுக்கு நினைவுபடுத்தும் அக்காவின் மீது கோபம் கோபமாகவரும்.

அம்மா என்றபடிவந்து கட்டிப்பிடித்த சிந்து நிகழ்கால நிஐத்திற்கு அழைத்து வந்தான்.

சிந்துவின் தலையை வருடியவள் குஞ்சுக்கு பசிக்கிதா ? கொஞ்சம் படுத்திருங்க அம்மா பால் கொண்டுவாறன் எனக்கூறியவள் சமையலறைக்கு சென்று பாலை அடுப்பில்வைத்துவிட்டு அது பொங்கி வழியாமல் இருக்க காவல் இருந்தாள். இல்லாவிட்டால் ஒவ்வொரு நாளும் பாலும் பொங்கி வழியும் ரவியின் கோபமும் பொங்கி வழியும். ரவிஅடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்.

இந்தியாவுக்குபோனா பால்காச்சிற பொயிலர் வாங்கவேணும். அது பாலை பொங்கவிடாமல் விசிலடித்து கூப்பிடுமாம். எனக்கும் பிரச்சனை இல்லை ஒவ்வொருநாளும் பாலைவைச்சிட்டு புதையலை காக்கிற பூதம்மாதிரி காவல்காக்கிற வேலை மிச்சம் என எண்ணியபடி யன்னல் சட்டறை திறந்தாள் சுகந்தி.

.தெருவை மறைத்து பனிகொட்டிக் கிடந்தது. அதை துப்பரவு செய்யும் இராட்சத வாகனம் மட்டும் இரைந்தபடி தன் கடமையில் கண்ணாய் இருந்தது. சுகந்தியின் மனத்தில் சோகமும் வெறுப்பும் இணைந்து கைகோர்த்து கொண்டன. அவளுக்கு பிடிக்காத குளிர்காலம் அழையாத விருந்தாளியாக விரைந்து வந்திருந்தது. வெளியே பார்த்தவளுக்கு நாட்டில் ஊரடங்கு சட்டம் அமூலில் இருந்த காலத்தை நினைவூட்டியது. வெறிச்சோடியதெரு. நாய் வளர்ப்பவர்களும், குழந்தை உள்ளவர்களும் மட்டும் நடப்பார்கள். .

இந்த அவசரமான வாழ்க்கையில் எதையோ சாதிப்பதற்காக ஓடிக்கொண்டே இருப்பார்கள்.

பக்கத்து வீட்டுகாரர் இறந்தால் கூட பத்திரிகையை பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.

சுகந்தியால் மறக்க முடியாமல் பல நாட்;களாக தவித்த விடயம். முன் வீட்டு அல்பிரட்டின் மரணம்தான். எண்பது வயதான அவரை பார்க்கும் பொழுதெல்லாம் என்ரை அப்பா ஏன் இவ்வளவு கெதியா செத்தவர்? என அடிக்கடி நினைப்பாள். அவர் இறந்த செய்தி காலம் கடந்து அறிந்தபோது சீ என்ன மனிதர்கள் இவர்கள்? எனஎண்ணி குழம்பி அந்த அதிர்ச்சியிலிருந்து மீள அவளுக்கு எத்தனைநாட்கள் பிடித்தன.ஆரம்பத்தில் இவைகள் மனதுக்கு கஸ்ரமாக இருந்தாலும் இப்போது அவளுக்கும் பழகிப்போன வாழ்க்கையாகி விட்டது.

பிள்ளைகளும் வளர்ந்து விட்டார்கள் நானும் வெளியில் போவதற்க்கு ரவியிடம் ஒரு நாய் வாங்கிதரும்படி கேட்க வேண்டும். அதுக்கு ஐpம்மி என்டு எங்கட வீட்டு நாயின்ர பெயரைத்தான்

வைக்கவேணும். ஆனா அந்த பெயரை சத்தம்போட்டு கூப்பிட முடியாது. எங்கட நாட்டில வெள்ளைக்காரனை பழிவாங்கிற நினைப்பில நாய்களுக்கு ஜோன,; ரோசி, pம்மி

என்று பெயரைவைத்து கோபம்வரும் பொழுதெல்லாம் Nhன் நாயே என அழைத்து

கையில் கிடைப்பதால் எல்லாம் அடிப்பதும் உதைப்பதும் நமது பழக்கம். ஆனால் அவர்கள் நாட்டில் வாழும் நாங்கள் நாய்க்கு என்ன பெயர்வைக்கலாம்? என சிந்தனையில்

ஆழ்ந்திருந்தவள் ஏதோ கருகிற வாசனையை நுகர்ந்து திடுகிட்டு திரும்பியவள் வழமை போல் குக்கர் பால் அபிஷேகத்தால் முழ்கி தவித்துக்கொண்டு இருந்தது.

சில நாட்களாக சுகந்தி மகிழ்ச்சியில் மூழ்கி திளைத்துக்கொண்டிருந்தாள். ரவியின் அம்மா

தான் உயிரோடு இருக்கும் பொழுதே மகனையும் பேரப்பிள்ளைகளையும் பார்த்து விட

வேண்டுமென பதினைந்து வருட யாசிப்புக்கு இப்பொழுதுதான் பலன் கிட்டியது. நாட்டுக்கு

போவதை நினைக்க ஒருபுறம் மகிழ்சியாக இருந்தாலும் மறுபுறம் அச்சமாகவும் இருந்தது.

ஆனாலும் பதினைந்து வருட பிரிவுக்கு பின்பு அக்காவையும் தான் பிறந்து வளர்ந்த வீட்டையும் பார்க்கபோகிறோம் என எண்ணும் பொழுது சுகந்தியின் மகிழ்ச்சிக்கு எல்லையே

இல்லை. அக்காவுக்கும் நண்பிகளுக்கும் என பொருட்களை வாங்கிகுவித்தபடிஇருந்தவளை

சுகந்தி முதல் முதல பிள்ளைகள் எங்கட நாட்டை பார்க்கபோகினம் அதைவிட எங்கட அம்மா தன்ர பேரப்பிள்ளைகளையும் இப்பத்தானே பார்க்கபோகிறா

ஏன் எங்கட அக்காவும்தானே

இப்ப யார் இல்லையென்று சொன்னது

உங்களோட சண்டைபோட எனக்கு இப்ப நேரமில்லை. பிள்ளைகளுக்கு மலேரியா தடுப்பு ஊசி போடவேணும் மறந்திட்டீங்களே ரவி ?

நல்ல காலம்; நினைவுபடுத்தினீர். எங்கட வீட்டு திறப்பையும் நளாயினி அக்காவீட்டில கொடுக்கவேணும் பூமரங்களுக்கு தண்ணீர் ஊற்ற சொல்ல வேணும். என்ற ரவியை இடைமறித்து வேண்டாம் முன்வீட்டு ரோசியிடம் கொடுப்பம் .

உமக்கு இப்பவெல்லாம் எங்கட தமிழ் ஆட்களில நம்பிக்கை இல்லாமல் போச்சு

பின்ன நளாயினி அக்கா வசந்தி வீட்டில தண்ணீ விடப்போயிற்றுவந்து எனக்கு எத்தனை

கதை சொன்னவா அப்ப அவவின்ர முகம்முழுக்க பொறமையால மூடி இருந்தது. எங்கட வீட்டிலேயும் நாங்கள் என்ன புதுச்சாமான் வாங்கியிருக்கிறம் என்று வசந்திக்கு விடுப்பு சொல்லுவா.

நளாயினி அக்கா சொல்லேக்க நீரும் விடுப்பு கேட்டுபோட்டு இப்ப அவவில மட்டும் பிழை

சொல்லிறீர்.

அவசொன்னா நான் கேட்கத்தானே வேணும்

இந்த பெண்களே இப்படித்தான் என தனக்குள் எண்ணி சிரித்தபடி ரவி சூட்கேஸ்களுக்கு வீட்டுவிலாத்தை எழுதி கட்டினான்.

பிளேனில் ஏறும்பொழுது வரவேற்கும் பெண் ஆய்போவான் கூறிவரவேற்றாள். பதிலுக்கு ரவியும் ஆய்போவான் எனக்கூறியது சுகந்திக்கு எரிச்சலுட்டியது. அப்பொழுதே தீர்மாணித்து விட்டாள் திரும்பிவரும் பொழுது மறக்காமல் இவர்களுக்கு வணக்கம் கூறவேண்டும் இப்படி எத்தனையோ சிந்தனைகளுடன் எட்டு மணித்தியாலம் எப்படி கழிந்தது என்றே புரியவில்லை

விடியாத விடியலில் விமானம் தரை இறங்கியது.

விமானதளத்தில் வரிசை வரிசையாக போர்விமாணங்கள் தயார் நிலையில் நிற்பதை பார்த்த

-வளின் இதயம் வலித்தது. பதினைந்து வருடங்களின் பின்பு தாய் நாட்டு மண்ணில் பாதம்பட்ட போது உடலில் ஓர் சிலிர்ப்பு ஏற்பட்டதை அவளாள் உணர முடிந்தது.

நெருப்பு தணலை அள்ளி தெறித்ததுபோல் வீசிய அணல் காற்றை தாங்க முடியாது

குழந்தைகள் அம்மா என அழைத்து தம் நிலை பகிர்ந்தார்கள். அவர்களை அணைத்தபடி

நடந்த சுகந்தியின் கண்கள் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்த காக்கிசட்டைகளை

பார்த்ததும் இனம் புரியாத பயம் அவளை சூழ்ந்து கொள்ள மெல்ல ஒட்டுப்பொட்டை உரித்து கைகளுக்கள் மறைத்துக் கொண்டு உள்ளே சென்றவர்கள். உள்நாட்டவர்கள் வரிசையில் இடம்பிடித்து அவர்களின் முறைவந்ததும் ரவி கடவுட்சீட்டை அதிகாரியிடம் ஒப்படைத்தான். அவர்களையும் கடவுட்சீட்டையும் மாறி மாறி ஒப்பீடு செய்த அதிகாரி

நீங்கள் இலங்கையர்கள் அல்ல வெளிநாட்டவர் பக்கம்போங்கள் என முறைத்தார்

சுகந்தியின் இதயம் வெடித்து சிதறுவதுபோல் ஓர் உணர்வு அவளுள்உருவானது.வெளிநாட்

-டவர் வரிசையில் தம்மை இணைத்து கொண்டவர்களை அந்த வரிiசியில் நின்ற வெளி

நாட்டு பயனிகளின் விழிகள் ஆச்சரியக் குறியோடு விழித்து நோக்கின.

எமது நாட்டில் எமக்கு உரிமை இல்லை இது எத்தனை கொடுமை என எண்ணியவளின்

எண்ணத்தில் பாரதியாரின்

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியிருந்ததுமிந்நாடே

அதன் முந்தையராயிர மாண்டுகள் வாழ்ந்து

முடிந்தது மிந்நாடே அவர்

சிந்தையிலாயிர மெண்ணம் வளர்ந்து சிறந்தது மிந்நாடே.

அவளுக்கு மிகவும் பிடித்த பாரதியாரின் கவிதைவரிகளை நினைத்தவளின் மனது வெள்ளம் வடிந்து வெறுமையான நிலம்போல் ஆனாது. ஆனாலும் அக்காவைபார்த்ததும் அத்தனையும்

மறந்தவள் ஓடிச்சென்று அக்காவின் தோளில் சாய்ந்து இத்தனை வருட பிரிவின் துயரை கண்ணிரால் வெளிப்படுத்தினால். அந்த அழுகையுடன் அவளுள் மண்டியிட்டுகிடந்த பயம் வெறுப்பு காழ்புணர்சி அத்தனையும் கரைந்து ஓடியது.

அக்காவின் வீட்டுக்கு வரும்வழியெல்லாம் பிள்ளைகள் அக்காவிடம் கேள்விக்கு மேல் கேள்வி தொடுத்து கொண்டே இருந்தார்கள். அக்காவும் சளைக்காமல் பதில் அளித்தபடி

இருப்பதை பார்த்துக்கொண்டே இருந்தவளின் மனதில் இந்த பதினைந்து வருடத்திற்குள்

எத்தனை மாற்றங்கள் அக்காவின் கோலத்தில் வாழ்க்கையில் எல்லாவற்றிலுமே காலங்கள்

எவருக்காகவும் காத்திருப்பதில்லை என்பது எவ்வளவு காத்திரமான உண்மையென நினைத்

தாள்.

தெகிவளையில் உள்ள அக்கா வீட்டில் பிள்ளைகள் பட்டாம் பூச்சியைபோல் சிறகடித்து

பறப்பதை பார்க்க சுகந்திக்கு கவலையாக இருந்தது. இந்த சின்னப்பறவைகளின் சிறகை

அன்னிய நாட்டில் கட்டிவைத்தல்லவா வளர்க்கின்றோம். குருவிக்கூடுபோல் தொடர்மாடி

வீடு அமைதிகாக்கும் சட்டம், குளிர் இவைகளுக்கு நாங்களும் பயந்து குழந்தைகளையும்

பயப்படுத்தி என்ன வாழ்க்கை என சலித்துக்கொண்டாள் சுகந்தி.

மறுநாள் பொலிஸ் கிளியறன்ஸ் யாழ்ப்பாணம் செல்வதற்கான விசா எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு ரவி பிள்ளைகளுடன் அவரின் அம்மா வீட்டுக்கு செல்ல அக்காவுடனும்

மாமாவுடனும் யாழ் புறப்பட தயாரானாள் சுகந்தி.

ரவியையும் பிள்ளைகளையும் சமாதானப்படுத்திய சுகந்திக்கு அவர்களை பிரிந்திருப்பது

மனதுக்கு கஸ்ரமாக இருந்தாலும் தான்பிறந்து தவழ்ந்து வளர்ந்த வீட்டை பார்க்க போகும்

ஆசை அத்தனை துன்பங்களையும் துடைத்தெறிந்தது.பலத்த சோதனைகளின் பின் பலாலி

-யில் இருந்து யாழ்பாணம் வந்து இறங்கியவர்களின் விழிகளில் விழுந்த காட்சி அத்தனை

மக்களின் மனதையும் பிசையவைத்தன. அங்கும் இங்கும் ஓடித்திரியும் ராணுவ வாகனமும். அதனால் எழுந்த புழுதிமணம் கூட வேறு ஒரு நாட்டுக்குள் வந்துவிட்டோமோ என நினைக்கவைத்தது. ஓரு காலத்தில் கம்பீரமாகவும் சுறுசுறுப்பாகவும்

இயங்கிய அந்த மண் களைஇழந்து சோகமாய் காட்சி அளித்தது. அங்கு காணப்பட்ட

உடைந்த கட்டிடங்களும் இடிந்த பாகங்களுக்கிடையிலிருந்தும் எத்தனையோ சோகக்கதை

-கள் எட்டிப்பார்ப்பதை உணர்ந்தாள் சுகந்தி. கவலையும் அதிதமகிழ்சியும் ஏற்படும்பொழுது

மனிதன் மௌனித்து விடுகிறான்.அப்பொழுதும் அப்படித்தான் அவர்கள் மூவரும்மௌனமாய்

வீட்டின் அருகாமை வந்தார்கள்.

இதயம் இடித்து வெளியில் வருவதுபோல் ஓர் உணர்வை உணர்ந்தாள் சுகந்தி. அக்காவை பார்த்தாள் அக்காவின் கண்களும் கலங்கி தவித்தன. மெதுவாக கேற்றை தொட்ட பொழுது

அது ஒருவித சங்கீதம் இசைத்தபடி திறந்து கொண்டது.

ஒரு கணம் திடுக்கிட்ட சுகந்தியின் நினைவுகள் அந்த மகிழ்வான காலத்தை நினைவு

கூர்ந்தன. எங்கள் தந்தைக்கு பிடிக்காததும்; எங்களுக்கு மிகவும் பிடித்த சத்தம் அது

எம்மை மறந்து நாம் குதூகலித்து நிற்கும் பெழுது அப்பா வருகின்றார் என அபாய ஒலி

ஓலித்து எமை எத்தனை நாள் காப்பாற்றியிருக்கிறது. அவர்களின் மௌனத்தை கலைத்தது

ஓரு குரல் ..........................

ஆரது? உங்களுக்கு என்ன வேணும் ?என கேள்விகளை அடிக்கியபடி ஓர் முகம்

அந்த முதுகுக்கு பின் இன்னும் சில முகங்கள் முளைத்து எழுந்தன.

எங்கட வீட்டில இவர்கள் யார்? இது நாங்கள் கேட்;கவேண்டிய கேள்வி ஆனால் அவர்

-கள் முந்திக்கொண்டார்கள். சில நிமிடம் மௌனமே பதிலாக பரிமாறப்பட்டது. மறுபடியும்

அவர்கள் இம்முறை வாய்மொழி பகிரவில்லை.ஆயிரம் கேள்விகளை முகத்தில் தேக்கியபடி

எமை பார்வையால் அளந்தார்கள்.

தொண்டையை செருமியபடி அக்கா அந்த இடத்தின் மௌனத்தை கலைத்தா.

நாங்க உள்ளுக்கு வரலாமா ? இது என்ன கேள்வி அவளுக்கு அக்காவின் மீது கோபம்

கோபமாக வந்தது.

நீங்கள் ஆர் எண்டு சொல்லவே இல்லை ? இம்முறை சுகந்தி முந்திக்கொண்டாள்.

இது எங்கட வீடு, எங்கட அம்மா அப்பா எங்களுக்காக கட்டின வீடு. என தன் கோபத்தை வார்த்தையாள் வெளிப்படுத்தினாள்.

இவள் இப்படித்தான் அக்கா சமாளித்தா.

இல்லை பரவாயில்லை உள்ளுக்கு வாங்கோ இது உங்;கட வீடு. எனக்கூறி தங்கள் முகங்-களின் பாவங்களை மாற்றி சிரித்தார்கள். அக்காவும் அவர்களுடன்இணைந்துசிரிக்கமுயன்று தோற்று போனதை பார்க்க சுகந்திக்கு பாவமாக இருந்தது.

உள்ளே கால்பதிக்கும் பொழுது கேற்றிலிருந்து வீட்டுபடிமட்டும் பூசிய அந்த சிவப்பு நிலம்

அவளை பார்த்து பால்ய சினேகிதிபோல் சிரிப்பதை உணர்ந்தாள் சுகந்தி. இதில் எத்தனை நாள் வட்டக்கோடு, எட்டுக்கோடு, பிளேன்கோடு எனகீறி விளையாடுவதும். சோக்கால் கிறீயதற்காய் அம்மா அடிப்பதும். பின்பு பிழிந்த தேங்காய் பூவால் தேய்த்து தேய்த்து

அழித்தபின்பும் தன் முகத்தை இலேசாக காட்டி சிரிக்கும் அந்த கோடுகளும் விழிகளில்

விழுந்து மறைந்தன. அந்த பளிங்கு நிலம் இப்போ வறண்டு வெடித்து அவளின் கன்னங்களில் கண்ணீர் ஓர் நேர் கோட்டை வரைந்தபடியே இருந்தன. அக்காவின் கையை இறுக பற்றியபடி ஒவ்வொரு அடியாக அவளின் கண்கள் அளக்கத்தொடங்கின.

விறாந்தை படிகளில் பூச்சாடிக்குள் தமை அடக்கியபடி அகல கை விரிக்கும் அந்த பாம்ஸ் மரங்களும், இரண்டு பக்கமும் செடித்து வளர்ந்திருக்கும் குறோட்டன் செடிகளும், பூத்து

குலுங்கம் மல்லிகையும், நித்திய கல்யாணியும் தாங்கள் இருந்ததற்கான எந்த அடை

-யாளத்தையும் விட்டுப் போகவில்லை. உடைந்த பூச்சாடிகளை தவிர. அவைகளை என்றும் மரங்களாக அம்மா நினைத்ததே இல்லை. எங்களுடன் கதைபபதுபோல் அவைகளுடனும்

கதைத்தபடி பூப்பறிப்பதும் தண்ணீர் ஊற்றுவதும் கடந்த கால நினைவுகள் அவளின் மனதை பிசைந்தன.

இந்த மரங்களுக்கெல்லாம் அரசன்போல் நிமிர்ந்து பருத்து நின்ற மாமரம் மட்டும்அப்படியே

ஆனால் குருவிச்சையால் தன் இலைகளை மூடியபடி பாசத்துடன் பார்த்தது. அதை ஆசையாக தடவினாள். உன் கைகளில் ஊஞ்சல் கட்டி ஆடும்பொழுது உனக்கு எப்படி வலித்திருக்கும் பிஞ்சு மனதுக்கு அன்று புரியதவைகள் இன்று வாழ்க்கையில்

அடிபட்டு, றணப்பட்டு எழுந்து நிற்கும் பொழுதும் , எழுத்துலகில் மூழ்கி எழுந்த பொழுதும்

எல்லாமே புரியத்தொடங்கியது. இப்ப எனக்கும் வலிக்கி;றது என மௌனமொழி பகிர்ந்தாள். வார்த்தைகள் தேவைப்படாமலே இரு இதயங்கள் தம் சுமைகளை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொண்டார்கள். அந்த நிமிட இதயசுமை இறக்கம் இருவருக்கும் மட்டும் புரிந்தது. புரிதலின் அடையளாமாக மாமரம் ஒரு முறை சிலிர்த்து நிமிர்ந்தது.

வீட்டின் வாசல்படியை பாதம் ஸ்பரித்த நொடியில் சுகந்தியின் மனசும் உடம்பும் சிலிர்த்தது.

கண்கள் விறாந்தையின் இரு பக்க மூலையிலும் அமைதி காத்தபடி இருக்கும் பிரம்பு நாற்

-காலிகளை துலாவின. அதற்கருகில் இருக்கும் அம்மாவின் சாய்மனை கதிரை அதில் அம்மா அமர்ந்திருக்கும் பொழுது தீர்ப்பு அளிப்பதற்காக காத்திருக்கும் ராணியைப்போல்

அம்மாவை கற்பனை பண்ணுவாள்.எப்பொழுதும் தண்டிப்பதற்காகவே கையில் பிரம்பும்

கம்பீரமுமாய் அந்த நாற்காலியில் அம்மாவை தவிர யாரும் அமர்வதும் இல்லை. அவளின்

விழிகள் அம்மாவின் சாய்மனை கதிரையை ஆவலாய் தேடின.

பிள்ளை எதையோ தேடுறியள்போல மூலையிலிருந்து ஒரு குரல் ஒலித்தது

ஓம் இங்க இருந்த சாய்மனை கதிரை............. என இழுத்தாள் சுகந்தி.

நாங்கள் இந்த வீட்டுக்கு வரேக்க பெரிசா சாமான்கள் ஒன்டும் இருக்கேல்ல. ஆரும் எடுத்துக் கொண்டு போயிரிப்பினம்.

அது எப்படி எங்கட சாமான்களை எங்களை கேட்கமா எடுப்பினம் ?

இதலெல்லாம் இப்ப இங்க சகஐமா போயிற்று

அப்ப எங்கட சாமான்களை பார்க்க வேணுமென்டா வேற வீடுகளுக்கு போவேணுமே? என கேட்டவளின் கண்கள் வெறுப்பை கக்கின.

அவளின் கால்கள் வரவேற்பறையை அளந்தன எப்பொழுதும் அலங்கரிக்கப்பட்டபுதுமணப்

-பெண்போல் சிவப்பு கம்பளம் விரித்து. மூலையில் கண்ணாடி அலுமாரி அதன் மீது சிரித்த

முகத்துடன் சிலையாக கண்ணண். தெருவுக்கே மணி கூறி இந்த வீட்டின் செல்வத்தை

செழிப்பை கட்டியம் கூறி நின்ற அந்த கிறான் பாதர் மணிக்கூடு. அது சரிந்து விழாமல்

பாதுகாப்பதற்காக அடிக்கப்பட்ட ஆணிமட்டும் அப்படியே இருந்தது. ஆனால் அதை அடித்த கைகளும் இன்று இல்லையென்ற நிதர்சனம் அண்ணனை நினைக்கவைத்தது. பொகவந்தலாதேயிலை தொழிற்சாலையில் தலைமை பொறுப்பில் இருப்பவர் என்னுடன் விளையாடி என்னை ஏமாற்றி அழவைக்கும் பொழுது சிறு குழந்தையாக மாறிவிடுவார்.

அண்ணா எப்பொழுது லீவில் வருவார் என காத்திருப்பதே அன்றைய கால பொழுதாக இருக்கும். பங்களா தோட்டத்தில காய்க்கிற பியஸ், சின்னதோடம்பழம், புளிகொய்யா, அன்டுரியன், காணேஷன், பாபட்டன் பூக்கள் என அள்ளிக்கொண்டு வருவார். ஒரு நாள் அண்ணா வாங்கி வந்த கன்டோசை சாப்பிடும் பொழுது விழுங்கி விட்டேன் என கூறி அழ..................

அண்ணா மகிழ்ச்சியாக இனி நாங்கள் கன்டோசை கடையில் வாங்கத்தேவையில்லை

உன்னுடைய வயிற்றுக்குள் இருந்து கன்டோஸ் மரம் முளைத்து தலை வெடித்துவெளியில்

வரும் எனக் கூறி சிரித்தார். ஆனால் அதை நினைத்து எத்தனை நாள் நித்திரையில்லாமல்

அழுததும் தலையை தடவி பார்த்ததும் மறக்க முடியாது நிகழ்வு என நினைத்துக் கொண்

-டவள் அடுத்து அமைந்திருந்த சமையலறையை எட்டி பார்த்தாள்.

அம்மா தன் கைவண்ணத்தை எங்களில் பரீட்சித்து பார்க்கும் பரிசோதனைகூடம்.ஆனால்

இன்றைய நிலமையோ அன்னியனின் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்ட நாடுபோல் காட்சி

அளித்தது.அதன் அருகாமை சாப்பாட்டு அறை. இந்த அறையில்தான் அவளின் பெரும்

பாலானா நேரம் கழிந்து கொண்டே இருக்கும். அவளது சிரிப்பொலி இன்றும் அந்த அறை

-யில் ஒலிப்பதுபோல் ஓர் பிரமை ஏற்பட்டது.

சுகந்தி சாப்பிடேக்க சிரிக்காமல் வாயை மூடிக்கொண்டு சாப்பிடு என்டு எத்தனை நாளா

சொல்லிறன்

வாயை மூடிக்கொண்டு எப்படி அம்மா சாப்பிடுறது ? அவளின் பதிலை கேட்டு அம்மா

கோபம் மறந்து சிரித்துவிடுவா. அந்த மகிழ்வும் சிரிப்பும் எல்லாம் இந்த வீட்டோடுதொலைந்து

போயிற்று அம்மா. இப்படி எத்தனையோ இனிய நினைவுகள் பத்திரப்படுத்தப்பட்ட நினைவு

கல்லறைகளாக இந்த வீட்டோடும் மனதோடும் பதியப்பட்டுள்ளது. விதைக்கப்பட்ட

விதைகள் சிறு மழைக்கு வெடித்து வெளியில் வருவதுபோல் அவளுக்குள் அடங்கிகிடந்த பல நினைவுகள் சிறுக சிறுக வெளிவரத் தொடங்கின.

நீண்ட விறாந்தை அடுத்தடுத்து வரிசையாக அமைந்துள்ள படுக்கை அறைகள் அவைகள்

கதவுகள் இன்றி வெறுமையாக அழுது வடித்துக்கொண்டிருந்தது. கதவுகள் மனிதனுக்கு மனிதன் மீது நம்பிக்கையில்லா தீர்மாணத்தின் முதற்படி என்று எங்கேயோ படித்தது நினை

-வில் உதித்தது. அப்படியானால் இன் நிலையை எப்படி எடுத்துக்கொள்வது ? மனிதர்கள்

மனிதர்களை நம்பும் வாழ்க்கையின் ஆரம்ப படி என்றா ?அல்லது ஆள் இல்லா வீட்டின்

ஆணிகூட ஊருக்கு சொந்தம் என்பதா ? எப்படி எடுத்துக்கொள்வது ? என எண்ணியபடி

அடுத்து அமைந்திருந்த சுவாமி அறையை நோக்கி அவளின் பாதங்கள் விரைந்தன. விரை

-ந்த பாதங்கள் ஆணியால் அறையப்பட்டதுபோல் அசையாது நின்றன. பதினைந்து வருடங்களுக்கு முன் எப்படி அந்த அறை அமைந்திருந்ததோ அப்படியே எந்தவித மாற்றம் இன்றி இருந்தது.

அவளின் மனமோ பல கேள்விகளை கேட்க தவித்தது. இந்த வீட்டை துடைத்தெடுத்து போனவர்கள் இந்த அறையை மட்டும் எப்படி விட்டு வைத்தார்கள் ?மனிதர்களின் மனிதில் இன்னும் இறைபக்தி அழியாமல் இருக்கின்றது என்றா அல்லது நம்பிக்கை என்னும் அஸ்தி

-வாரம் ஆடிப்போய் விட்டது என்றா ?என குழம்பி நின்றவளின் நினைவில் சீதத்திருவிளக்கே

சீதேவி லஷ்மியே கோலத்திருவிளக்கே என பாடும் அம்மாவின் அந்த இனிமையான குரல்

காதில் ஒலிப்பதுபோல் ஓர் பிரமை ஏற்பட்டதானல் கண்களில் நீர் பிரவாகித்து ஓடியது.

ஆனால் அக்கா தன்னை மறந்து கை கூப்பி கண்மூடி தீயவர் வாழவும் நல்லவர் தாழவும் செய்வதேனோ இது தர்மம்தானோ என காலத்திற்க்கு இசைவான பாட்டை தனக்குள் முனு

முனுத்துக்கொண்டு இருந்தா.

1987ம் ஆண்டு இந்தியபடைகள் அமைதி காப்பதாக கூறி எம்மண்ணின் அமைதியை கலைக்க வந்த காலம். ஓரு வெள்ளிக்கிழமை அம்மா சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது சோதனை என்ற பெயரில் வீட்டினுள் நுளைந்தவர்கள் ஏதோ எம்வீட்டை கொள்வனவு செய்ய வந்தவர்கள்போல் ஒவ்வொரு சதுர அடியாக வீட்டை அளந்தார்கள் என

அம்மா எழுதியது நினைவுக்கு வந்தது. அதுமட்டுமா எழுதியிருந்தா எங்களது சுவாமி அறையின் புனிதத்தை பார்த்த இந்தியன் ஆமி தனது சப்பாத்து காலுடன் உள்ளே வர எத்தனித்து பின்பு சப்பாத்தை களற்றிவிட்டு உள்ளே வந்தான் என எத்தனை பெருமையாக

எழுதியிருந்தா. வீடடை சோதனையிட்ட பின் மனதை சோதனையிட முனைந்தவர்கள்......

இந்த பெரிய பங்களாவில நீங்கள் இருவரும் தனியாகவ இருக்கிறீங்கள் ?

இல்லை எங்களுக்கு உதவியாக ஒரு பெடியனும் இருக்கிறான் என்ற அம்மா குமாரை அவர்களக்கு அறிமுகப்படுத்தனாவாம்.

உங்களுக்கு பிள்ளைகள் இல்லையா ?

ஏன் இல்லை ஒரு காலத்தில எட்டு பிள்ளைகள் இந்த வீட்டை நிறைத்து இருந்தார்கள்.

இப்போ அவர்கள் எங்கே ?

சந்தோஷமான அந்த கூடு கலைந்து எத்தனையோ வருடமாகிவிட்டன. பறவைகளுக்கும்

சிறகும் முளைத்தது கூட்டையும் கலைத்து விட்டார்கள். என கூற நினைத்ததை விழுங்கி

-விட்டு எல்லோரும் வெளிநாட்டுக்கு போய்விட்டார்கள்.ஒரு மகள் கொழும்பில் இருக்கிறா.

உங்களுக்கு என்ன இல்லையென்று சண்டை பிடிக்கிறீங்கள் ?எங்கட நாட்டு நடிகைகளின்

பங்காள மாதிரி பங்களாக்கள், பின்னால தென்னம் தோட்டம், பழ மரங்கள் தண்ணீருக்கு

பஞ்சமில்லாத ஊற்று கிணறு. இதைவிட வாழ்க்கைக்கு என்ன வேண்டுமென்று இப்படி தனிமையில் தவிக்கின்றீங்கள் என தங்களின் இல்லாமையை ஒருமுறை நினைவுகூர்ந்தான்.

இல்லாததை தேடுவதுதானே மனித இயல்பு எல்லாம் இருந்தும் இருக்க வேண்டியது இல்லாமல் போயிற்று. அந்த நிறைவான வாழ்க்கைதானே எம் எதிரியின் கண்களை உறுத்தியது என தனக்குள் எண்ணியபடி மௌனம் சாதித்த கமலத்தை.

என்னம்மா யோசிக்கிறீங்க ?

ஒன்றுமில்லை உங்கட நாட்டிலையும் கஸ்மீர் யாருக்கு சொந்தம் என்று பாகிஷ்தானோட சண்டை பிடிக்கிறீங்களாமே ?

ஆமாம் கஸ்மீர் எங்களுக்கு சொந்தமான இடம். அது எங்கட உரிமை அதை எப்படி நாங்கள் விட்டுக்கொடுப்பது ?

உங்கட உரிமையை நிலை நாட்ட நீங்கள் உயிரை கொடுக்கலாம் உயிரை எடுக்கலாம். எமது மூதாதைகளின் வேர்கள் உள்ள மண்ணை நாம் விட்டுக் கொடுக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் ?தன் நிலை மறந்து ஆவேஷமாக விழுந்த கேள்வியால் அந்த இடம் மௌனத்தில் ஆழ்ந்தது.

தன் குரலை செருமி மௌனத்தை கலைத்தவனின் அடிவயிற்றிலிருந்து பெருமூச்சு எழுந்து அடங்கியது.

இரும்பு சட்டைக்குள் ஓர் இதயம் எதையோ நினைத்து அழுகின்றது என நினைத்த கமலத்

-திற்கு தைரியம் அதிகரித்தது. நாங்கள் போராடுவது எங்களுக்காக அல்ல. எங்கள் வருங்

கால சந்ததிக்காக அவர்களாவது சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி நிற்பதால்தான் இவ்வளவு அனர்த்தங்களையும் இழப்புகளையும் தாங்கியும் எங்

-கள் உயிர் உடலில் ஊண்றி நிற்கின்றது.

நீங்கள் இப்படி சொல்லுறீங்கள் உங்களது சந்ததிகளின் வேர்கள்மட்டும்தான் இங்க இருக்குது. விழுதுகள் அன்னிய நாட்டில் அல்லவா வேர் ஊண்ற போய்விட்டன..

ஒருக்காலும் இல்லை. விளாத்தி தள்ளி முளைத்தாலும் பருத்தியாகாது அதுபோலத்தான்

எங்கட பிள்ளைகள் எங்கவளர்ந்தாலும் எங்கட பிள்ளைகளாகத்தான் வளருவார்கள்.

அவளின் துணிச்சலான பதில் இந்திய கொமாண்டருக்கு மட்டும் அல்ல சுகந்திக்கும் ஆச்சரியமாக இருந்தது. எப்படி அம்மாவுக்கு இவ்வளவு துணிவு வந்தது ?என எண்ணியவளுக்கு பூவோடு சேர்ந்த நாரும் மணம்பெறும் என்ற முதுமொழி நினைவில் உதித்தது.

இறுதியாக அவளுடைய அந்த சின்ன அறை. நான் வீட்டுக்கு சின்ன பிள்ளை என்பதாலா

எனக்கு இந்த சின்ன அறை என எத்தனை நாட்கள் அம்மாவோடு சண்டைபிடித்திருப்பாள்

இந்த அறையில்தான் அவளின் கல்வி, கற்பனை, காதல் எல்லாம் அவளோடு போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்தது. அங்கிருந்த பொருட்கள் எல்லாம் அகற்றப்பட்டு வெறுமையாக காட்சி அளித்தது. அவளின் மனதைபோல.

இந்த மூலையில்தான் அம்மா அடிக்கும் பொழுது தன்னை முடக்கி அழுது ஓய்வாள்.

இந்த இடத்தில்தான் ஆடிமாத வெய்யிலுக்கு யன்னலையும் கதவையும் திறந்துவைத்து

அடிவளவு காற்றை உள்ளே சுதந்திரமாக உலாவவிட்டு நிலத்தில் புற்பாயை விரித்து

அம்மாவின் மீது கையையும் காலையும் பரவவிட்டு அம்மாவின் இதமான அணைப்பில்

சின்னக்குருவி தன் அம்மாவின் சிறகுக்கடியில் சுகமாக தூங்குவதுபோல் தூங்கிய கால

நினைவுகள் விழிகளில் நீரை ஐனிக்கவைக்க சோகத்தின் பிடியில் சிக்கயவள் அந்த இடத்

-தில் அப்படியே அமர்ந்து கொண்டாள். ................

அம்மா , அம்மா

என்ன ?

பாயில படுக்க முதுகெல்லாம் நோகுது.

எனக்கு வெக்கையா இருக்குது நீ போய் கட்டில்ல படு

எனக்கு தனியா படுக்க பயம்

அப்ப பேசாமல் படு

எனக்கொரு கதை சொல்லுங்கம்மா

என்ன கதை சொல்லிறது ?

ஏதாவது ஒரு கதை

உனக்கு வேற வேலை இல்லை பேசாமல் படு

பிளீஸ் அம்மா

சுகந்தி நாளைக்கு வெள்ளிக்கிழமை நாலுமணிக்கு எழும்பி உதயபூiஐக்கு போகவேணும்

பேசாமல் படு.

பின்பு அம்மாவை கட்டியணைத்தபடி உறங்கிய நினைவுகள். வாழ்க்கை எனும் பயணத்தில்

காலங்கள் கடக்கும் பொழுது எத்தனை அனுபவங்கள் அத்தனையும் எம் நினைவில் நிற்ப

-தில்லை. சில நேரங்களில் நேற்று நடந்த நிகழ்வுகள் கூட நீர் குமிழிகள்போல் மறைந்து

போய்விடும். ஆனால் சில நினைவுகளோ காலம் கடந்தாலும் அடி மனதில் ஆளமாக வேர் ஊண்றிவிடும். அதுபோலதான் இந்த வீட்டின் ஒவ்வொரு சதுர அடியிலும் என் அம்மாவின்

நினைவுகளும் ஆளமாக பதிந்துவிட்டிருந்தது. இந்த அறைக்கதவை அகலத்திறந்துவைத்து

அடிவளவின் வேப்பம் காற்றையும் தென்னம் காற்றையும் சுவாசித்தபடி எப்படியெல்லாம்

வாழ்ந்திருந்தோம் வாழும் பொழுது அதன் அருமை பெருமை எதுவும் புரியவில்லை.

முன்பு வீட்டுக்கு முன்னால் இருக்கும் வீட்டில் எப்போதும் வங்கியில் பணிபுரியும்அதிகாரிகள்

இடமாற்றம் பெற்றுவந்து தங்குவார்கள். இரு குடும்பங்களும் மிக நெருக்கமாக பழகுவதும்

பின்பு பிரிவதும். பிரிவின் துயரை அழுது வெளிப்படுத்துவதும். பின்பு வேறு ஒரு குடும்பம்

அவர்களுடனும் பழகுவது, பிரிவது, அழுவது இந்த நிகழ்வுகள் அவளுக்கு விநோதமாகவும்

விளங்காமலும் இருக்கும். அடிக்கடி அம்மாவை நச்சரித்தபடி இருப்பாள்.

அம்மா இந்த அன்ரி மாமா எல்லாரும் எங்கபோகினம் ?

வேற வீட்டுக்கு போகினம்

நாங்க மட்டும் ஏன் எப்பவும் ஒரே வீட்டில இருக்கிறம் ?

இது எங்கட சொந்த வீடு

ஏன் அம்மா சொந்த வீடு கட்டினீங்கள் ? எப்பவும் ஒரே வீட்டில இருக்கிறது எனக்கு பிடிக்கவேயில்லை.

அவளின் அறியாமையை நினைத்து அன்று அம்மா சிரித்ததன் அர்த்தத்தை அகதியாக

அன்னிய நாட்டில் அலையும் பொழுது புரிந்து கொண்டாள். சொந்த வீடு ஓர் கனவாக

கற்பனையாக மட்டுமே இருந்தது. வெளிநாட்டில் வீடு மாறுவதும் சாமான்களோடு போராடு

-வதும். போரட்டம் முடிந்து அதன் வலிகள் மாறுவதற்கிடையில் இன்னும் கொஞ்ச வசதி

-யாக வேறு வீடு கிடைத்து விட்டால் மறுபடியும் ஓட்டம,; வலி, வேதனை வாழ்க்கையே

சலித்துபோய்விடும்.

நினைவு எனும் பதுங்கு குழியிலிருந்து மீண்டவளின் விழிகளில் எதை அவள் பார்க்க வேண்டும் என்று துடித்தாளோ அந்த சாய்மனை கதிரை அவளின் பிரியமான அம்மாவின்

பிரியமான கதிரை ஓர் மூலையில் வறுமையில் வாடி வதங்கிய ஓர் பெண்ணைப்போல பரிதாபமாக அவளை பார்த்தது.அதன் கோலமும் அதன் மீது காலையும் கையையும் பரப்

பியபடி தன் நிலை மறந்து பிதற்றிக்கொண்டு ஓர் உருவம் படுத்திருந்த நிலையையும்பார்த்த

வளின் கண்களும் உடலும் நெருப்பை விழுங்கியதுபோல் ஓர் உணர்வை ஏற்படுத்தியது.

அதே வேகத்தோடும் வெறியோடும் அம்மனிதனை நெருங்கினாள்.

நெருங்கியவளின் கைகள் அம்மனிதனை பிடித்து இழுத்தது. எழும்புங்க இந்த கதிரையில

படுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்குது ?

ஏய் என்னை எழுப்ப உனக்கென்ன உரிமை இருக்கிது ?

இது...... இது என்ர அம்மான்ர கதிரை. இதில ஆரும் இருக்ககூடாது என்ரஅம்மா

மட்டும்தான் வார்த்தைகள் வெளிவர மறுத்தன.

ஓ இப்படி சட்டம் கதைக்கிறனீ அகதியாகபோன இடத்திற்கு கதிரையையும் கொண்டு போயிருக்க வேணும். இல்லாட்டி உன்ர அம்மாவோடு சேர்த்து எரித்திருக்க வேணும்

அந்த மனிதனின் நிலை மறந்த பேச்சால் தன் நிலை மறந்த சுகந்தி அவனை பிடித்து

கீழே தள்ளினாள். விழுந்தவனை சுற்றி உறவுகள் ஒன்று கூடின.கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்த நிகழ்வின் அதிர்வில் அவளின் அக்கா செய்வதறியாது திகைத்து நின்றாள். ஆனால் சுகந்தியின் மனமோ இது உன் உரிமை போராடு போராடு என இடித்துரைத்துக் கொண்டிருந்தது.

கோபங்கள் அங்கே போட்டியிட தொடங்கின. முதல்ல நீங்க வெளியில போங்க

பல விரல்கள் வாசலுக்கு வழி காட்டின.

சுகந்தி தன் நிலைமறந்து அம்மனிதனை கீழே தள்ளியது தர்மமா அல்லது அதர்மமா

என தீர்மானிக்கும் நிலையில் அப்போது அவள் இல்லை. ஒரு மனிதனை மனிதனாக

வாழவைப்பது அப்போதையை சூழ்நிலைதான் என்பதை புரிந்து கொண்டவள்.

நாங்கள் ஏன் வெளியில போகவேணும் ? இது எங்கட வீடு.

இல்லையென்டு ஆர் சொன்னது ? இந்த வீட்டையும் உங்களை பெத்து வளர்த்துகளையும் விட்டிட்டு உங்கட உயிர்மட்டும் பெரிசென்டு ஓடி ஒழிந்த கோழைகள் . தியாகிகள் சிந்திய இரத்தத்தில உங்கட வசதிகளை பெருக்க சென்ற அகதிகள் நீங்கள். இப்பவந்து உரிமை கொண்டாடுகிறீங்கள்.

உண்மைகள் எப்போதும் ஒழிந்திருப்பதில்லை.அந்த உண்மை இப்போது சுகந்தியை சுட்டெரித்தது. மரங்களின் இலைகளை உண்டு தன்னையும் தன் வாழ்வையும் வளம்படுத்திக்

கொள்ளும் மயிர்கொட்டிகள் தன்னை வளர்த்த மரத்திற்கு ஆபத்து வரும்பொழுது அதை

விட்டு விலகி போவதுபோலத்தானே நானும். இதில் கோபப்படுவதற்கு அர்த்தமே இல்லை எண்ணியவளின் மனம் அகதி என்ற வர்த்தையை மட்டும் தாங்க முடியாது தவித்தது.

வெளிநாட்டு வாழ்க்கையில் அகதி என்ற முத்திரையை எம் முகத்தில் பதித்துவிட்டு எம்மை

காணும் பொழுதெல்லாம் அவ்வார்த்தையை எம் முகத்திலேயே வாசித்து மனதை றணப்

படுத்தும் அந்த காரணப்பெயரை எம்மினத்தவரும் சுட்டிக்காட்டும் பொழுது அவளாள்

தாங்க முடியவில்லை.

மனித வாழ்வை அவரவர் எண்ணங்கள்தான் நிர்ணயம் செய்கின்றன.எண்ணங்கள் சொல்லாக

வெளிப்பட்டு பின்பு செயலாக மாறுகின்றது என்ற கூற்று தவறாக இருக்க வேண்டும். எம்

-மினம் எப்பொழுதும் அகதியாக வேண்டும் என கற்பனையில் கூட எண்ணியிருக்க மாட்

-டார்கள். அப்படியானால் எமக்கு ஏன் இந்த நிலை வரவேண்டும் ? என எண்ணியபடி

நிமிர்ந்தவள் பக்கத்து வீட்டிலும் புதிய முகங்கள் இருப்பதை கண்டாள்..

இந்த வீட்டிலிருந்த அன்ரியும் பிள்ளைகளும் எங்க ? அந்த வேதனையிலும் அவள் மனதில் உதித்த கேள்வியை புரிந்து கொண்டவர்கள்

இந்த வீட்டுக்காரரும் அகதியாக புலம் பெயர்ந்து கனடா போயிட்டினம் . நாங்கள் மன்னாரிலிருந்து இடம் பெயர்ந்து இங்கவந்து இருக்கிறம். வார்த்தைக்கு வர்ணம்பூசுகிறார்கள்

என எண்ணியவளுக்கு அந்நிலையிலும் சிரிப்பு வந்தது.

எதோ பைத்தியத்தை பார்ப்பதுபோல் எல்லோரும் அவளை பார்த்தார்கள்.

மெல்ல மெல்ல இருள் கவிழ்ந்து கொண்டு இருந்தது. அக்கா அவசரப்படுத்தினா...

சுகந்தி இருட்டுது வா மாமா வீட்டுக்கு போவம்.

ஆனால் அவளோ நகர மனம்மின்றி மறுபடியும் கதிரையை பார்த்தாள். பின்னிய பிரம்புகள் பிய்ந்தபடி வெறுமையாக அவளையே பார்த்துக்கொண்டு இருந்தது. அதில் அம்மாஅமர்ந்தி

-ருந்தபடி வா என அழைப்பதுபோல் அவளுக்குள் ஓர் பிரமை ஏற்பட்டது. அம்மா என

அழைத்தபடி அடியெடுத்து வைத்தவளின் கையை இறுகபிடித்து தடுத்த அக்காவின் கையை உதறிவிட்டு தன்னை மறந்து ஓடியவள் அந்த சாய்மனை கதிரையில் தலைவைத்து

குலுங்கி குலுங்கி அழுதாள்.

அம்மா ஏன் அம்மா எனை தனியாக விட்டுட்டு செத்துப் போனீங்கள் ?

நான் உங்களை விட்டுட்டு போனதாலயா எங்கே அம்மா இருக்கிறீங்க ?சுகந்திக்கு இப்படி அழுவது அம்மாவின் மடியில்

தலைசாய்த்து அழுவதுபோல் ஆறதலாக இருந்தது. அவளோடு இணைந்து அத்தனை கண்களும் கண்ணீர்pல் நனைந்தன. வீட்டிலிருந்தவர்கள் அவளின் தலைவருடி ஆறுதல்

வார்த்தைகளை பகிர்ந்தார்கள்.அக்கா சுகந்தியை இறுக அணைத்தபடி வெளியேறினா.

மௌமாக பின் தொடர்ந்தவள் மறுபடியும் திரும்பி அக்கதிரையை பார்த்தாள் அதில்அம்மா

அமர்ந்தபடி சுகந்தி மறுபடியும் எனை தவிக்கவிட்டு போறியா ? என கேட்பதுபோல்

ஓர் உணர்வு ஏற்பட்டது. என்னால் முடியவில்லை அம்மா என வாய்விட்டு அழுதவளை

இம்முறை அக்கா இறுகபிடித்துக்கொண்டாள். சுகந்தயின் கண்கள் நீரை சுரந்தபடி இருக்க கால்கள் மட்டும் நகர்ந்தது.அவளின் விழிகளும் இதயமும் அம்மாவின் கதிரையை திரும்பி திரும்பி பார்த்தன.

சின்னம் சிறுவயதின் நினைவுகள் ஆழமாக வேரோடி அகலமாய் விழுகளை பரப்பி விருட்சமாய் வளர்ந்துவிடும். அந்நினைவுகள் எப்போதும் மனதைவிட்டு அகலாது. அந்நிகழ்வுகளை

இரைமீட்கும்பொழுது அவை மகிழ்ச்சியாய் கண்ணீராய் வெளிபட்டுக்கொண்டே இருக்கும்

சுகந்திக்கும் அப்படித்தான்.
posted by சாந்தினி வரதராஜன் at 4:35 PM 1 comments